Wednesday, June 13, 2018

பகவத் கீதை - 1.22 - என்னோடு போர் செய்யப் போவது யார் ?

பகவத் கீதை - 1.22 - என்னோடு போர் செய்யப் போவது யார் ?



यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे॥२२॥

யாவதே³தாந்நிரீக்ஷேऽஹம் யோத்³து⁴காமாநவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யமஸ்மிந்ரணஸமுத்³யமே ||1-22||

யாவதே = அனைவரும்

ஏதன் = இந்த

நிரீக்ஷே= பார்க்க

அஹம் = நான்

யோத்துகாமாந் = யுத்தம் செய்ய

அவஸ்தி²தாந்|= அணிவகுத்து நிற்கும்

கைய்யா = அவர்களுடன்

மயா = என்னுடன்

ஸஹ = கூடவே

யோத்தவ்யம் = உறுதியாக யுத்தம் செய்ய

அஸ்மிந் = இந்த

ரணஸமுத்யமே = இரண களத்தில்

போரில் என்னோடு போர் புரிய உறுதியாக நிற்பவர்களை நான் பார்க்க வேண்டும், என்று அர்ஜுனன் கண்ணனிடம் கூறினான்.

போருக்கு என்று வந்தாகி விட்டது. போர் செய்ய வேண்டியது தானே. அதற்குள் என்ன , "நடுவில் தேரை நிறுத்து, என்னோடு போர் செய்பவர்களை நான் பார்க்க வேண்டும் " என்று ஒரு இடைச் செருகல் ?

இது ஒரு முக்கியமான கட்டம். அப்படி அவன் பார்க்காமல் இருந்திருந்தால், யுத்தம் நடந்திருக்கும். நமக்கு கீதை கிடைத்திருக்காது.

இரண்டு சேனைக்கும் நடுவில் நின்றதால், அவனுக்கு அந்த யுத்தத்த்தின் முழு தாக்கமும் புரிந்தது. யாரெல்லாம் அழியப் போகிறார்கள் என்று தெரிந்தது. இவ்வளவு அழிவும் தேவையா என்ற கேள்வி எழுந்தது. யுத்தத்தினால் வரும் இலாப நட்ட கணக்கு புரிந்தது. யுத்தம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. அதனால் கீதை வந்தது.

ஒரு பிரச்சனையை கையாளும் முன், அதை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள இலாப நட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று களத்தில் இறங்கக் கூடாது.

எல்லோரும் சண்டைக்கு தயாராக இருந்த நேரத்தில், அர்ஜுனன் மட்டும் இரண்டு அணிகளுக்கும் நடுவில் நின்று பார்வை இடுகிறான். நட்பு, உறவு, குலம் எல்லாம் பிரிந்து கிடக்கிறது. ஒன்றோடு ஒன்று அடித்துக் கொண்டு அழியப் போவது அவன் கண்களுக்குத் தெரிகிறது.

பிரச்சனைகளை நாம் தீர்த்து விடலாம். தீர்வே பிரச்னை ஆகி விட்டால் ?

எது தீர்வு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பல சமயங்களில் நாம், நமது நெருங்கிய உறவுகளோடு வாதம் செய்து வெற்றி பெற்று விடுவோம். ஆனால், அந்த வாதத்தில் மற்றவர்கள் மனம் வாடிப் போகலாம். அடி பட்டுப் போகலாம். வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருந்தால், உறவுகளை இழக்க வேண்டி வரலாம்.

அர்ஜுனன் முன் நின்றது அந்த சிக்கல். வெற்றியா, உறவா என்ற சிக்கல்.

பகையா, அன்பா என்ற சிக்கல்.

நம் வாழ்க்கைதான் குருஷேத்ரம். நாம் தான் அர்ஜுனன். நம் வாழ்க்கை என்ற குருஷேத்ரத்தில் நாம் பகைவர்களோடு மட்டும் அல்ல உறவுகளோடும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதில் வெற்றி என்பதுதான் என்ன என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.


வாழ்வின் இந்த மிகப் பெரிய சிக்கலை விடுவிக்க வந்ததுதான் கீதை.

காலங்களைத் தாண்டி, அசரீரியாக இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கீதை.

சற்றே செவி மடுப்போம்.


http://bhagavatgita.blogspot.com/2018/06/122.html

No comments:

Post a Comment