Tuesday, June 26, 2018

பகவத் கீதை - 1.32 - வெற்றியும் வேண்டாம் , ஒண்ணும் வேண்டாம்

பகவத் கீதை - 1.32 - வெற்றியும் வேண்டாம் , ஒண்ணும் வேண்டாம் 



न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च।
किं नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा॥३२॥

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா²நி ச|
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ கிம் போ⁴கை³ர்ஜீவிதேந வா ||1-32||

ந = இல்லை

காங்க்ஷே= ஆசை

விஜயம் = வெற்றியில்

க்ருஷ்ண = கிருஷ்ணா

ந =இல்லை

ச = மேலும்

ராஜ்யம் = இராஜ்யத்தின் மேலும்

ஸுகா²நி = அது தரும் சுகத்திலும்

ச = மேலும்

கிம் = எதற்கு

நோ = நமக்கு

ராஜ்யேந = இராஜ்யம்

கோவிந்த = கோவிந்தா

 கிம் = எதற்கு

போகை³ = ஆடம்பரங்கள்

ஜீவிதேந = வாழ்க்கை

வா = அதுவும்

வெற்றியும், அது இராஜ்யமும், அதனால் வரும் சுக போகங்களும் எனக்கு வேண்டாம். ஏன், இந்த வாழ்க்கையே வேண்டாம். 


நமக்கும் வாழ்க்கையில் சில சமயம்  தோன்றும்.என்ன செஞ்சு என்ன  பயன். இவ்வளவு போராட்டமும் எதற்கு என்ற சலிப்பு தோன்றும்.  இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன , என்பது போன்ற விரக்த்தியான கேள்விகள் தோன்றும்.

அர்ஜுனன் அந்த மாதிரி ஒரு நிலையில் இருக்கிறான்.

வீரம் ஒரு புறம். சபதம் ஒரு புறம். போர்க்களத்துக்கு வந்தாகி விட்டது. அவனை நம்பி பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து போர் செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது சண்டை வேண்டாம் என்று பின் வாங்கினால் தீரா பழி வந்து சேரும்.

அதற்காக போர் செய்து எல்லோரையும் கொல்ல முடியுமா ? பழி வந்தாலும் பரவாயில்லை, கொல்லுவோம் என்று நினைக்கவும் முடியவில்லை.

யுத்தம் செய்தாலும் குற்றம், செய்யா விட்டாலும் குத்தம்.

வெற்றி வேண்டாம், அரசு வேண்டாம், சுக போகங்கள் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விடலாம் என்றாலும் , வாழ் நாள் பூராவும் பழி சுமந்து வாழ வேண்டுமே ? துரியோதனன் சிரிப்பானே . பாஞ்சாலி என்ன சொல்லுவாள்? இந்த உலகம் என் ஆண்மையை, வீரத்தை ஏளனமாக எடை போட்டு விடுமே.

இதை எல்லாம் நினைத்துப் பார்த்து, "இந்த வாழ்க்கையே வேண்டாம். செத்துப் போய் விடுகிறேன்" என்று சொல்கிறான். உயிரோடு இருந்தால் தானே இந்த பழி வரும். உயிரை விட்டு விட்டால் என்ன என்று புலம்புகிறான்.

கண்ணன் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

அர்ஜுனன் முற்றும் புலம்பி முடியட்டும் என்று காத்து இருக்கிறான். புலம்புவனை பாதியில் நிறுத்தினால், அவன் சொல்வதைக் கேட்க மாட்டான். அவன் துக்கத்தையே நினைத்துக் கொண்டிருப்பான்.

எனவே, கண்ணன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அர்ஜுனன் புலம்பல் முடியவில்லை....

http://bhagavatgita.blogspot.com/2018/06/132.html

No comments:

Post a Comment