Friday, June 29, 2018

பகவத் கீதை - 1.35 - இவர்களை கொல்ல மாட்டேன்

பகவத் கீதை - 1.35 - இவர்களை கொல்ல மாட்டேன் 



एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते॥३५॥

ஏதாந்ந ஹந்துமிச்சா²மி க்⁴நதோऽபி மது⁴ஸூத³ந|
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ : கிம் நு மஹீக்ருதே ||1-35||

ஏதாந் = அவர்கள்
ந = இல்லை
ஹந்தும் = கொல்ல

இச்சா²மி = இச்சை இல்லை, ஆசை இல்லை

க்நதோ =  கொல்வதற்கு தயாராக உள்ள

அபி = இப்போது

மதுஸூதந| = மதுசூதனா

அபி = அது அன்றியில்

த்ரைலோக்ய = மூன்று உலகும்

ராஜ்யஸ்ய = உள்ள அரசும்

ஹேதோ : = கிடைத்தாலும்

கிம் = ஏன்

நு = இருந்தும்

மஹீக்ருதே  = இந்த உலகை ஆள

மதுசூதனா, மூன்று உலகும் கிடைத்தாலும், இவர்களை கொல்ல மாட்டேன். கேவலம் இந்த மண் உலகை ஆளவா , இவர்களை கொல்லுவேன். (ஒரு போதும் மாட்டேன்). அவர்கள் என்னைக் கொன்றாலும் அவர்களை நான் கொல்ல மாட்டேன். 

அர்ஜுனனின் வாதம் எல்லாம் அவனைச் சார்ந்தாகவே இருக்கிறது.

அவர்கள் என் உறவினர். அவர்களை கொன்றால் எனக்கு துக்கம் வரும். அவர்களை கொன்று நான் என்ன அடையப் போகிறேன்.

அவர்களை கொல்வதால், இந்த மூன்று உலகும் எனக்குக் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். அப்படி இருக்க இந்த மண் உலகை ஆளவா, இவர்களை கொல்லுவேன். ஒரு காலும் மாட்டேன்.

என்று சின்ன பிள்ளை பள்ளிக் கூடம் செல்ல அடம் பிடிப்பதைப் போல அடம் பிடிக்கிறான்.

என் துக்கம், என் இலாபம், என் நட்டம் என்று தன்னை முன்னிறுத்தியே அர்ஜுனன் குழம்புகிறான்.

சுயநலம் முன் நின்றால் அனைத்து குழப்பமும் வரத்தான் செய்யும்.

எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும், எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தால், அர்ஜுனன் போல, எவ்வளவு திறமை இருந்தாலும் குழப்பமும் மயக்கமுமே மிஞ்சும்.

நாம் மட்டும்தானா உலகம். நம் உறவுகள், நம் சொந்தங்கள், நம் இலாப நட்டம் மட்டும்தானா உலகம்? அதை மட்டும் நாம் பார்த்தால் போதுமா ? இதைத்தாண்டி வேறு எதுவும் இல்லையா ?

நமக்கு கஷ்டம் என்றால் ஒரு வேலையை விட்டு விடலாமா ? நமக்கு இலாபம் இல்லை என்றால் நம்மை நம்பி ஒப்படைத்த ஒரு வேலையை விட்டு விடலாமா ?

பின்னால், கர்ம யோகத்தில் , பார்க்கப் போகிறோம். கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே என்று. இது நாள் வரை அந்த மகா வாக்கியத்தின் பொருள் பற்றிய சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இங்கே, அர்ஜுனனுக்கு அவனுடைய உறவுகளை கொல்வதால் ஒரு பயனும் இல்லை. அதனால், அவன் யுத்த களத்தை விட்டு போகிறேன் என்கிறான்.

போகட்டுமா ? பலன் இல்லாத காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ? இன்பம் தராத காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?

அர்ஜுனன் பார்ப்பது இலாப நட்டக் கணக்கு. உறவினர்களை கொல்வது நட்டம். இராஜ்ஜியம் கிடைப்பது இலாபம். இப்போதைக்கு நட்டம் அதிகமாகத் தெரிகிறது. எனவே வேண்டாம் என்கிறான்.

வாழ்க்கை என்பது வேறு இலாப நட்ட கணக்கா ?

http://bhagavatgita.blogspot.com/2018/06/135.html

No comments:

Post a Comment