Sunday, June 17, 2018

பகவத் கீதை - 1.25 - கூடி இருக்கும் கௌரவர்களைப் பார்

பகவத் கீதை - 1.25 - கூடி இருக்கும் கௌரவர்களைப் பார் 



भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥२५॥

பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த​: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்|
உவாச பார்த² பஸ்²யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||


பீஷ்ம = பீஷ்மர்

த்ரோண = துரோணர்

ப்ரமுகத​: = முன், அருகில்

ஸர்வேஷாம்  = அனைவரும்

ச = மேலும்

மஹீக்ஷிதாம் = ஏனைய அரசர்கள்

உவாச = கூறினான்

பார்த = பார்த்தா (அர்ஜுனா)

பஸ்யை = பார்

எதன் = இவர்களை

ஸமவேதாந் = கூடி இருக்கும்

குரூ = குரு வம்சத்தில் உதித்தவனே

இதி = இதை


பீஷ்மர், துரோணர் மற்றும் உள்ள அனைத்து அரசர்களுக்கும் நடுவில் தேரை நிறுத்திவிட்டு, கண்ணன் சொல்கிறான் "இங்கே கூடி இருக்கும் கௌரவர்களை பார்"


இந்த ஒரு வரி தான் கண்ணன் இந்த அத்தியாயத்தில் பேசியது.

அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் அர்ஜுனன் தேரை நடுவில் இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்தச் சொன்னான். பின் என்ன "கௌரவர்களைப் பார் " என்று கண்ணன் சொல்வது?

வார்த்தைகள் என்னமோ சாதாரணமானதுதான். சொல்வது யார், யாரிடம் சொன்னார்கள், சொல்லப் பட்ட நேரம் இவற்றைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுகிறது.

சில உதாரணங்களை பார்க்கலாம்.

நமது இலக்கியங்களில் திரும்ப திரும்ப சொல்லப் பட்டதுதான். குரு தான் வழிகாட்டி. எப்போது மாணவன் தயாராக இருக்கிறானோ, அப்போது ஆசிரியர் அவன் முன் தோன்றுவான்  என்று.

அருணகிரிநாதர், வாழ்க்கையில் எங்கெங்கோ எப்படி எப்படியோ சென்று வாழ்ந்தார். பெரிய நோய் வந்து விட்டது. இனி மேல் வாழக் கூடாது என்று அண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விட்டார். உயிரை விடுவதற்காக. பாதியில் அவரை கையில் ஏந்தி , முருகன் உபதேசம் செய்தான். உபதேசம் என்றால் என்ன ஒரு ஒரு மணி நேரம் சொல்லி இருப்பானா ? இல்லை , ஒரே ஒரு நொடி. இரண்டே இரண்டு வார்த்தை "சும்மா இரு" . அவ்வளவுதான்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசனுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தது. இறைவன் அருளால் கிடைத்த பிள்ளை, ஒரு நாள் ஒரே ஒரு  வரி எழுதி வைத்து விட்டு மறைந்து விட்டான். அந்த ஒரு வரியை படித்து விட்டு இருந்த செல்வம் அனைத்தையும் உதறி விட்டு கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டார் ...அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்பது.

பாரதியார் தனக்கு ஏற்பட்ட குரு தரிசனம் பற்றி கூறுகிறார். பாரதியாரின் குரு , குள்ளச் சாமி என்ற ஒருவர் பாரதியாருக்கு உபதேசம் செய்தார். ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மூன்றே மூன்று பொருள்களை காட்டினார். அவ்வளவுதான்.  அவை, அருகில் இருந்த கூட்டிச் சுவர், சூரியன், கிணற்றில் உள்ள சூரியனின் பிம்பம். அவ்வளவு தான். உபதேசம் முடிந்து விட்டது. சிலிர்த்துப் போனார் பாரதியார். "வேதாந்த மரத்தின் ஒரு வேரை பிடித்தேன் " என்று எழுதினார். ஏதாவது புரிகிறதா நமக்கு ? குட்டிச் சுவர், சூரியன், பாழடைந்த கிணறு. அவ்வளவுதான்.  (இது பற்றி நான் விரிவாக எழுதி இருக்கிறேன். அதைப் படிக்க விருப்பம் இருந்தால், தெரிவிக்கவும். அனுப்பி வைக்கிறேன்).

மாணிக்க வாசகர்...சிவன் நேரில் வந்து உபதேசம் செய்தார். மாணிக்க வாசகர் புரிந்து கொள்ளவில்லை. குதிரை வாங்கப் போகணும், மன்னன் திட்டுவான் என்று  கிளம்பி விட்டார். பின்னாளில் தன் தவற்றை உணர்கிறார்.  அடடா , வந்த சிவனை விட்டு விட்டோமே என்று. அவர் வாழ் நாள் எல்லாம் அதை நினைத்து புலம்பினார். அந்த புலம்பல் தான் திருவாசகம்.

நாமும் தான் எவ்வளவோ படிக்கிறோம். ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா. ஒன்றும் இல்லை. ஒரு வரியில், உண்மை உணர்ந்து கொண்டோர் ஆயிரம். பக்குவம் வேண்டும். உறுதி வேண்டும்.

"கௌரவர்களைப் பார்"

என்று கண்ணன் சொன்னான்.

அர்ஜுனனுக்குள் பூகம்பம் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனான். கை நெகிழ்கிறது. வீரம் போய் விட்டது. போர் களத்தை விட்டே போய் விடுகிறேன் என்கிறான். சாமியாராகப் போகிறேன் என்கிறான்.

அந்த மாதிரி ஆன்மீக அதிர்ச்சி ஏற்படும் போது, அருகில் ஒரு குரு வேண்டும். இல்லை என்றால்  அதைத் தாங்க முடியாது.

அருணகிரிக்கு ஒரு முருகன், பாரதிக்கு ஒரு குள்ளச் சாமி, அர்ஜுனனுக்கு ஒரு கண்ணன்.

பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட, பற்றுக என்று சொன்னது பற்றற்ற ஒரு யோகியின் பற்றைத்தான்.எல்லாவற்றையும் விட்டு விடு, ஆனால் ஆசிரியனை விடாதே என்கிறார். அந்த ஒரு பற்றை மட்டும் வைத்துக் கொள் என்கிறார்.

தயாராகுங்கள். உங்கள் ஆசிரியர் உங்கள் முன் தோன்றுவார். தோன்றட்டும்.

http://bhagavatgita.blogspot.com/2018/06/125.html

No comments:

Post a Comment