Saturday, June 16, 2018

பகவத் கீதை - 1.24 - இரு படைகளுக்கும் நடுவில்

பகவத் கீதை - 1.24 - இரு படைகளுக்கும் நடுவில் 



सञ्जय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥२४॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ² கு³டா³கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான் (திருதராஷ்டிரனிடம்)

ஏவம் = அவ்வாறு

உக்தோ = கூறிய பின்  (அர்ஜுனன் கண்ணனிடம் தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்து என்று கூறிய பின்)

ஹ்ருஷீகேஸோ = ஸ்ரீ கிருஷ்ணன்

அ-குடாகேஸேந = குடாகேசன் என்று சொல்லப்பட்ட அர்ஜுனன்

பாரத = பாரத வம்சத்தில் தோன்றியவனே (திருதராஷ்டிரனே )

ஸேநயோ = படைகளின்

உருபயோ = இரண்டின்

மத்யே = மத்தியில்

ஸ்தாபயித்வா = நிறுத்தி

ரதோத்தமம் = உயர்ந்த தேரை (இரத + உத்தமம்) ||1-24||



இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை நிறுத்து என்று கண்ணனிடம் அர்ஜுனன் கூறிய பின், கண்ணன் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்தி ....

இந்த ஸ்லோகம் பாதியில் நிற்கிறது. மறு பாதி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. அதைப் பார்க்க  இருக்கிறோம்.

இந்த ஸ்லோகத்தில் மூன்று பேரை வியாசர் குறிப்பிடுகிறார்.

ஹ்ருஷீகேஸோ, அ-குடாகேஸேந, பாரத


ஹ்ருஷீகேஸோ - புலன்களை வென்றவன். ஸ்ரீ கிருஷ்ணன். hṛṣīka என்றால் புலன்கள்.  அவற்றை தன் வயப்படுத்தியவன்.


அ-குடாகேஸேந = குடாகேசன் என்றால் சோம்பேறி. தூங்கு மூஞ்சி. அ-குடாகேஸேந என்றால் தூக்கத்தை வென்றவன். அர்ஜுனனால் எந்த நேரத்திலும் தூங்க முடியும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விழித்து இருக்க முடியும். தூக்கம் அவன் கட்டுக்குள் இருந்தது. யோசித்துப் பார்ப்போம். தூக்கம் நம் வயப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் எவ்வளவு தூரம் தூக்கத்துக்கு அடிமையாக இருக்கிறோம்? தூக்கத்தினால் எவ்வளவு வாழ்வின் நலன்களை இழந்து இருக்கிறோம்? அர்ஜுனன், தூக்கம் என்ற சுகத்துக்கு அடிமை ஆகாமல் இருக்கிறான். தூக்கம் அவனுக்கு கட்டுப்பட்டு இருந்தது.

பாரத - பாரத வம்சத்தில் பிறந்த திருதராஷ்டிரனே. "நீ உன் பிள்ளைகளுக்கு தகப்பன் மட்டும்  அல்ல. பாரத வம்சத்தின் வழித் தோன்றல். அந்த வம்சத்தின் பாரம்பரியங்களை நிலை நிறுத்த வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த பெரிய குருஷேத்ர போரால், இந்த வம்சமே அழிந்து விடவும்  வாய்ப்பு இருக்கிறது..." என்று அதை உணர்த்துவதற்காக அந்த சொல்லை பயன் படுத்துகிறார் வியாசர்.

அனைத்து புலன்களையும் வென்றவன் ஸ்ரீ கிருஷ்ணன்.

தூக்கம் என்ற ஒரு உடல் சுகத்தை வென்றவன் அர்ஜுனன்.

பேராசை, பொறாமை, சுயநலம், என்று உழல்பவன் திருதராஷ்டிரன்.

மூவரையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறது கீதை.

அடுத்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பேசப் போகிறான். இந்த முதல் அத்தியாயத்தில் கிருஷ்ணன்  பேசிய ஒரே ஒரு வாக்கியம் அது.

அது என்ன வாக்கியம்?

http://bhagavatgita.blogspot.com/2018/06/124.html







No comments:

Post a Comment