Friday, June 22, 2018

பகவத் கீதை - 1.29 - உடல் நடுங்குகிறது

பகவத் கீதை - 1.29 - உடல் நடுங்குகிறது


सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥

ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்²ச ஸ²ரீரே மே ரோமஹர்ஷஸ்²ச ஜாயதே ||1-29||


ஸீதந்தி = நடுங்குகிறது

மம = என்

அத்ராணி = கை கால்கள்

முகம் = வாய்

ச = மேலும்

பரிஸு²ஷ்யதி = உலர்கிறது

வேபது = துடிக்கிறது

ச = மேலும்

ஸரீரே  = உடல்

மே = என்

ரோமஹர்ஷஸ்²ச = மயிர் சிலிர்க்கிறது

ஜா = உடன்

ஜயதே = நிகழ்கிறது

அர்ஜுனன் சொல்கிறான், "என் கை கால்கள் நடுங்குகின்றன. உடல் துடிக்கிறது. வாய் உலர்ந்து போகிறது. மயிர் சிலிர்கிறது"

பயம் அல்ல. இத்தனை பேரை கொல்லப் போகிறோமே என்ற பச்சாதாபம். சுய இரக்கம். போர் செய்வது என்று வந்து விட்டான். உறவினர்களை கண்டவுடன் தயக்கம் வருகிறது.

அறிவு - யுத்தம் செய் என்று அவனை அழைத்து வந்து விட்டது. வந்தது மட்டும் அல்ல, இரண்டு படைகளுக்கு மத்தியில் தேரை நிறுத்து, என்னிடம் போரிட வந்தவர்கள் யார் யார் என்று பார்க்கிறேன் என்று    துணிவுடன் சொல்ல வைத்தது.

உணர்ச்சி - இது தேவையா உனக்கு ? இத்தனை பேரை கொன்று நீ என்ன சுகத்தை அடையப் போகிறாய்  என்று பின்னுக்கு இழுக்கிறது.

இதில் இதன் பக்கம் போவது? அறிவு சொல்வதை கேட்பதா ? உணர்ச்சியின் பின்னால் போவதா ? எது சரியான வழி ?

ஞான மார்க்கமா ? பக்தி மார்க்கமா ? அல்லது இரண்டுக்கும் நடுவில் உள்ள கர்ம மார்க்கமா ?

சிக்கலின் நுனி இங்கே ஆரம்பிக்கிறது.

வாழ்க்கை என்ற யுத்தத்தில் தனி ஆளாக வந்தாகி விட்டது. அறிவு ஒன்றைச் சொல்கிறது. உணர்ச்சி மற்றொன்றைச் சொல்கிறது. இந்த தீராத பட்டி மன்றத்துக்கு யார் தீர்ப்புச் சொல்வது ?

வழி முக்கியமா ? போய் சேரும் இடம் முக்கியமா ? எந்த வழியில் போனால் என்ன? போய் சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்தால் போதாதா ?

விடை  சொல்ல முடியாத சிக்கலை விடுவிக்க வந்தது கீதை.

கேட்போம்.

கீதை என்பது பாடம் அல்ல. பாடல். கீதம். கீதை. பாடலில் இலயிக்க வேண்டும். அது நமக்குள் இறங்க வேண்டும். நம்மோடு கலக்க வேண்டும். நமக்குள் அது ஏதோ செய்யும்.

அந்த கீதம் உங்கள் காதுகளில் விழ , வழி விட்டு நில்லுங்கள். சற்று நேரம் கண் மூடி  அது உங்கள் மனதை வருட விடுங்கள்.

என்னதான் ஆகிறது என்று பார்ப்போம் .

http://bhagavatgita.blogspot.com/2018/06/1.html

No comments:

Post a Comment