Tuesday, June 12, 2018

பகவத் கீதை - 1.21 - படைகள் நடுவே என் தேரை நிறுத்து

பகவத் கீதை - 1.21 - படைகள் நடுவே என் தேரை நிறுத்து 



अर्जुन उवाच
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥२१॥



அர்ஜுன உவாச
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||

அர்ஜுன உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

ஸேந = சேனைகளின்

உபயோஹ் = இரண்டின்

மத்திய = மத்தியில், நடுவில்

ரதம் = இரதத்தை

ஸ்தாபய = நிறுத்து

மே = என்

அச்யுத = அச்சுதனே, குற்றம் இல்லாதவனே


அர்ஜுனன் சொல்கிறான், "ஸ்ரீ கிருஷ்ணா, இரண்டு படைகளுக்கும் நடுவில் என்  தேரை நிறுத்து" என்று. 


மிகப் பெரிய வீரன். தனக்கு சமானம் யாரும் இல்லை என்ற அளவுக்கு ஆற்றல் படைத்தவன்.  பயம் என்பது கொஞ்சம் கூட இல்லை.

"இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை நிறுத்து " என்று வீரத்தோடு சொல்கிறான்.

நாம் நினைக்கிறோம், வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் நாம் சமாளித்து விடலாம் என்று. " என்னால் முடியாததா...நான் யார் " என்று நினைக்கிறோம்.

"நான் எவ்வளவு பெரிய ஆள். நான் என்னென்ன காரியங்கள் சாதித்து இருக்கிறேன். என் படிப்பு என்ன. என்பராக்கிரமம் என்ன. என் சொத்து எவ்வளவு...என்னால் முடியாதா " என்று நினைக்கிறோம்.

செய்யும் வலிமையையும் இருக்கலாம். இருந்தும் வாழ்க்கை புரட்டிப் போடுகிறது.

எவ்வளவு பெரிய வீரனையும் ஒரு நொடியில் வாழ்க்கை புரட்டிப் போட்டு விடுகிறது.


அர்ஜுனனை விடவா நாம் பலசாலி? அவனை விடவா நாம் அறிவாளி ? அவனை விடவா நம்மிடம் சொந்தம் பந்தம் இருக்கிறது ? அவனை விடவா நம்மிடம் செல்வம் இருக்கிறது?

அப்பேற்பட்ட அர்ஜுனனை வாழ்க்கை புரட்டிப் போட்டது. அதை இனி வரும்  ஸ்லோகங்களில் காண இருக்கிறோம்.

அந்த மாதிரி சமயங்கள் நமக்கும் வரும்.

வந்தால் என்ன செய்ய வேண்டும்?

அர்ஜுனனுக்கு ஒரு கண்ணன் இருந்தான்.

நாம் எங்கே போவது கண்ணனைத் தேடி?

கண்ணன் சொன்ன கீதை இருக்கிறது. அர்ஜுனனுக்கு சொன்னதுதான் நமக்கும்.

வாழ்வில் குழப்பம் வரும்போது, செய்வது அறியாது திகைக்கும் போது, நம் பலம் அத்தனையும் செயல் இழக்கும் போது, வாழ்க்கை என்ற களத்தில் நிராயுத பாணியாக நிற்கும் போது, கை கொடுப்பது கீதை.

திசை தெரியாமல் தவிக்கும் கப்பலுக்கு, ஒரு கலங்கரை விளக்கு போல,  காலங்கள் தாண்டி  சுடர் விட்டு வழி காட்டிக் கொண்டிருப்பது கீதை.


http://bhagavatgita.blogspot.com/2018/06/121.html




No comments:

Post a Comment