Thursday, June 21, 2018

பகவத் கீதை - 1.28 - சுற்றத்தாரை கண்டு .....

பகவத் கீதை - 1.28 - சுற்றத்தாரை கண்டு .....



अर्जुन उवाच
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्॥२८॥


அர்ஜுன உவாச
த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ||1-28||

அர்ஜுன உவாச = அர்ஜுனன் கூறுகிறான்

த்ருஷ்ட்வ = (இவர்களை ) காணும் போது

ஏமம் = இவர்களை

ஸ்வஜநம் = நெருங்கியவர்களை

க்ருஷ்ண = கிருஷ்ணா

யுயுத்ஸும் = போர் செய்ய ஆவலாக இருக்கும்

ஸமுபஸ்தி²தம் = இங்கு


கண்ணா, இங்கே போர் செய்ய ஆவலாக இருக்கும் என் நெருங்கிய சுற்றத்தாரைக் கண்டால் .....

ஒரு மிகப் பெரிய வீரனை, உணர்ச்சிகளின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்துகிறது கீதை.

போர் செய்ய வேண்டும் என்று வந்து விட்டான். என் தேரை , இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து என்று தெனா வெட்டாக கூறியவன், இந்தப் போரில் சண்டை போட்டு சாவதற்கு வந்திருப்பவர் யார் என்று நான் பார்க்க வேண்டும் என்று கூறிய அர்ஜுனன், "அர்ஜுனா கௌரவர்களை பார்" என்று கண்ணன் ஒரு வார்த்தை சொன்னவுடன், அவர்களை கண்டு தடுமாறத் தொடங்குகிறான்.

கீதையை வாசிக்கும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அது நடந்த காலம், அந்த சூழ்நிலை, கீதை சொல்லப் பட்ட இடம், கீதையை கேட்ட அர்ஜுனன், அவன் நிலை இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி என்றால், கீதை நமக்கு உதவாதா ? என்றோ ஒரு காலத்தில், அர்ஜுனன் போன்ற ஒரு அரசனுக்கு, வீரனுக்குச் சொல்லப்பட்டது தான் கீதை என்றால், இன்றைக்கு ஒரு அலுவலத்தில் வேலை பார்க்கும் நமக்கும் கீதைக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையா ? கீதை இன்றைய சூழ்நிலைக்கு உதவுமா ? உதவும் என்றால் எப்படி?

இங்குதான் நாம் நம் அறிவை செலவிட வேண்டும்.

இன்று கீதையை விமர்சினம் செய்பவர்கள், அதில் உள்ள ஒரு சில வரிகளை எடுத்துக் கொண்டு, "கீதை அப்படி சொன்னதே, கீதை இப்படி சொன்னதே , அது சரியா" என்று வாதம் செய்கிறார்கள்.

கீதையை அப்படியே கொண்டு வந்து நம் வாழ்க்கையில் பொறுத்த முடியாது. பொறுத்தவும் கூடாது.

"நிற்க அதற்குத் தக"

என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

கீதையின் சாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நம் கால சூழ்நிலைக்கு ஏற்ப நாம் அனுசரித்து கொண்டு போக வேண்டுமே அல்லாமல் வரிக்கு வரி அப்படியே கடை பிடிக்க நினைக்கக் கூடாது.

ஒரு ஊரில் இருந்து  இன்னொரு ஊருக்குப் போகும் போது ஒரு வரை படத்தை  வைத்துக் கொண்டு போகிறோம். இப்போது google map இருக்கிறது. போகிற வழியில் ஒரு பள்ளம் இருந்தால், ஒரு விபத்து நடந்து ஒரு வண்டி சாலையின் குறுக்கே கிடந்தால், கொஞ்சம் விலகித்தான் போக வேண்டும். வரை படத்தில் அப்படி போடவில்லையே என்று நேரே போய் முட்டிக் கொள்ளக் கூடாது.

சரி, கீதையை நம் சூழ்நிலைக்கு மாற்றுவது என்றால், எதை மாற்றுவது, எப்படி மாற்றுவது, என்ற கேள்வி வரும். நாம் மாற்றுவது சரி தானா என்ற சந்தேகம் வரும். நாமே குழம்பிப் போய் தான் கீதையின் உதவியை நாடுகிறோம். அதை அப்படியே கடை பிடிக்க முடியாது என்றால் என்ன செய்வது ?

அதற்குத்தான், சமய அறிவு உள்ளவர்கள், மொழி அறிந்தவர்கள், மக்கள் நலனின் நாட்டம் உள்ளவர்கள், விருப்பு வெறுப்பு அற்ற பெரியவர்கள் கீதையை  எப்படி நம் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறார்களோ, அப்படியே அதை கடை பிடிக்க வேண்டும்.

மேலும், நாமும் முழுச் சோம்பேறியாக இருக்கக் கூடாது. கீதையில் என்ன சொல்லி இருக்கிறதோ அதன் படி நடப்பேன். என் அறிவை நாம் பயன்படுத்தவே மாட்டேன் என்று முட்டாள்தனமாக இருக்கக் கூடாது.

கீதையில், முழுக்க முழுக்க அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அர்ஜுனன் பெரிய அறிவாளி. கண்ணன், முற்றும் அறிந்தவன். அப்படிப்பட்ட கண்ணன் சொன்னது, அர்ஜுனனுக்குப் புரியவில்லை. சந்தேகம் கேட்கிறான்.

நாமெல்லாம் எம்மாத்திரம் ? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இன்று ஒரு காகிதத்தில் கீதையை படித்து நாமே புரிந்து கொள்ள முடியுமா ?

கேள்விகள் எழும். சந்தேகம் வரும். குழப்பம் வரும்.

வரட்டும். வர விடுங்கள்.

சந்தேகம் வந்தால், கேளுங்கள். கேள்விகளை வர விடுங்கள்.

உங்களோடு சேர்ந்து நானும் தேடுகிறேன். ஒன்றாக நாம் விடை கண்டு பிடிப்போம்.

புரிந்தால், தெளிந்தால் கீதையை கடை பிடிப்போம்.

இல்லை என்றால் அது கிடைக்கும் வரை தேடுவோம்.

என்ன சரிதானே ?

வாருங்கள், அர்ஜுனன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம். கீதை என்ற கடலுக்குள் நாம் நுழையப் போகிறோம். எத்தனை முத்துக்கள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்.


`http://bhagavatgita.blogspot.com/2018/06/128.html

No comments:

Post a Comment