Monday, June 25, 2018

பகவத் கீதை - 1.31 - சுற்றங்களை கொன்று வரும் இன்பம்

பகவத் கீதை - 1.31 - சுற்றங்களை கொன்று வரும் இன்பம் 



निमित्तानि च पश्यामि विपरीतानि केशव।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे॥३१॥

நிமித்தாநி ச பஸ்²யாமி விபரீதாநி கேஸ²வ|
ந ச ஸ்²ரேயோऽநுபஸ்²யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||1-31||


நிமித்தாநி = நிமித்தங்கள், சகுனங்கள்

ச = மேலும்

பஸ்யாமி = நான் காண்பவை

விபரீதாநி = விபரீதமாக இருக்கிறது

கேஸவ = கேசவா

ந = இல்லை

ச = மேலும்

 ஸ்ரேயோ = உயர்ந்த, சிறந்த இன்பங்களை

அ நுபஸ்யாமி  = நான் காண்கிறேன்

ஹத்வா = கொன்ற பின்

ஸ்வ ஜநம் = சொந்த ஜனங்களை, உறவினர்களை

அஹவே  = போரில்


கேசவா, நான் பல விபரீத சகுனங்களை காண்கிறேன். இந்தப் போரிலே சுற்றத்தாரை கொன்று, அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தால் எனக்கு நன்மை விளையும் என்று தோன்றவில்லை.

நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து கொண்டே இருந்தால், மனிதன் தான் ஒரு பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வான். எல்லாம் என் சாமர்த்தியம். என்னால் முடியாதது என்ன. நான் தான் இத்தனையும் செய்தேன் என்று நினைக்கத் தலைப்படுகிறான்.

ஒரு சிறு தடங்கல் வந்தால் கூட, "ஐயோ, என்ன செய்வேன், என்னால் முடியவில்லையே, எனக்கு ஏன் இவ்வளவு சோதனை, இவ்வளவு போராடி என்ன சுகதத்தைக் காணப் போகிறேன்..." என்று சோர்ந்து துவண்டு விடுகிறான்.

போரில் அனைவரையும் வென்று, அரசை கைப்பற்றி விடலாம் என்று எண்ணி வந்தான் அர்ஜுனன். இப்போது பார்த்தால், அது அவ்வளவு எளிய காரியமாகப் படவில்லை. பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், போன்ற பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்.  கௌரவ படையின் அளவோ பெரியது. அதை வெல்வது எளிதான காரியம் இல்லை. அர்ஜுனனின் சோர்வுக்கு அது ஒரு காரணம்.

அது மட்டும் அல்ல, சண்டை போடப் போவது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு. அது ஒரு காரணம்.

மூன்றாவது, மிக முக்கியமான காரணம், இந்த யுத்தம் ஏதோ தனக்காக செய்யப்படுவது போல  அர்ஜுனன் நினைத்துக் கொள்கிறான். இது அர்ஜுனன் என்ற தனிப்பட்ட மனிதன் விருப்பு வெறுப்புக்கான போர் அல்ல.

தர்மத்தை நிலை நாட்ட வந்த போர். இதில் இலாப நட்ட கணக்கு முக்கியம் அல்ல.

தர்மம் நிலைக்க வேண்டும். அவ்வளவுதான்.

அர்ஜுனன் அந்த யுத்தம் ஏதோ தான் விரும்பினால் செய்யலாம், இல்லை என்றால் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொள்கிறான். அதனால் வந்த சிக்கல்.

யோசித்துப் பார்ப்போம். நாம் செய்யும் வேலை அனைத்தும் நமது சம்பளத்துக்காக செய்கிறோமா அல்லது அந்த வேலையினால், அதன் விளைவாக மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று செய்கிறோமா?

சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்று நினைப்பவனுக்கும், நான் ஒரு பிரச்னையை சரி செய்கிறேன் என்று நினைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எப்போது, வேலை என்பது சுய இலாபத்துக்காக என்று ஆகி விட்டதோ, அப்போதே அதன்  தன்மை மாறிப் போய் விடுகிறது.

ஒருவன் சாலை போடும் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தினக் கூலி நூறு ரூபாய் இருக்கலாம். அந்த கூலிக்காக வேலை செய்கிறேன் என்று அவன்  சொல்லலாம். அல்லது, நான் போடும் சாலையில் வண்டிகள் போகும், amabulance  விரைந்து போகும், பலரின் உயிர் காக்கப்படும், பிள்ளைகள் பள்ளி செல்வார்கள், வேலைக்குப் போகிறரவர்கள் பத்திரமாக வேகமாக  இந்தச் சாலையில் செல்வார்கள் என்று நினைத்தால், அவன் மனம் விரியும். கூலி ஒரு பொருட்டாகத் தெரியாது. வேலையே கூலியாகி விடும்.

அதற்காக கூலி வாங்காமல் போக வேண்டும் என்று சொல்ல வில்லை. கூலிக்கு வேலை  என்பதை விட வேலையின் வீர்யம் புரிந்து செய்தால், கூலியும் கிடைக்கும், மன நிறைவும் கிடைக்கும்.

அர்ஜுனன் கூலிக்கு வேலை செய்வதாக வந்து  நிற்கிறான். எனவே, இந்த இலாப நட்ட கனக்குப் பார்க்கிறான்.

இவ்வளவு  பேர் சாகப் போகிறார்கள். இவ்வளவு அரசு கிடைக்கும்,இந்தப் பதவி கிடைக்கும் என்று  என்று கனக்குப் போட்டதால் வந்த வினை.

மேலும் என்ன சொல்கிறான் என்று கவனிப்போம்.


http://bhagavatgita.blogspot.com/2018/06/131.html



No comments:

Post a Comment