Thursday, June 28, 2018

பகவத் கீதை 1.34 - உறவும் பகையும்

பகவத் கீதை  1.34 - உறவும் பகையும் 



आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा॥३४॥

ஆசார்யா : பிதர : புத்ராஸ்ததை²வ ச பிதாமஹா :|
மாதுலா : ஸ்²வஸு²ரா : பௌத்ரா : ஸ்²யாலா : ஸம்ப³ந்தி⁴நஸ்ததா² ||1-34||

ஆசார்யா : = குருமார்கள்

பிதர : = பெரிய தந்தை, சிறிய தந்தை

புத்ரா = பிள்ளைகள்

ததா = இவ்வாறு

எவ = நிச்சயமாக

ச  = மேலும்

பிதாமஹா = தாத்தாக்கள்

மாதுலா : = தாய்வழி மாமன்கள்

ஸ்²வஸு²ரா : = மாமனார்கள்

பௌத்ரா : = பேர பிள்ளைகள்

ஸ்²யாலா : = மச்சினன்கள்

ஸம்பந்திநஸ் = மற்ற உறவினர்கள்

ததா² = இவ்வாறு, இங்கே


குரு, தந்தை, தாத்தா, பிள்ளைகள், பேரன்கள், உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள். 

உறவெல்லாம் பகையாக நிற்கிறது.

அர்ஜுனன் தடுமாறுகிறான். கடமைக்கு முன்னால் உறவு வந்து நிற்கிறது.

அது அர்ஜுனனின் தடுமாற்றம் மட்டும் அல்ல. நாம் நாளும் காணும் தடுமாற்றம் தான்.

பிள்ளை ஆசையாக கேட்கிறான் அல்லது கேட்கிறான் என்று செல் போன் , வீடியோ கேம் என்று வாங்கித் தருகிறோம். அதுவே அவர்களுக்கு பாதகமாக முடிகிறது. வாங்கித் தரவில்லை என்றால் அவர்கள் வருந்துவார்கள். வாங்கித் தராமல் இருப்பதுதான் பெற்றோர் என்ற முறையில் நமது கடமை. கடமைக்கு முன்னால் உறவு வந்து நிற்கிறது. பாவம், பிள்ளை என்ற பாசம் வந்து நிற்கிறது.

பெற்றோர் செல்லம் கொடுத்து கெட்ட பிள்ளைகள் எத்தனை.

கணவன் ஆசைப் படுகிறான் என்று , அவனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும், இனிப்பை செய்து கொடுப்பது. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், உப்பை அதிகமாக உள்ள பண்டங்களை தருவது.  கடமை என்பது தராமல் இருப்பது. உறவு , உந்தித் தள்ளுகிறது.

இப்படி, கடமைக்கு முன்னால் உறவு பல இடங்களில் குறுக்கே நிற்கிறது.

இப்படி பலப் பல உதாரணங்களை சொல்லலாம்.

பெரிய உத்யோகத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சில  சௌகரியங்களை செய்து தருவது , கடமையை மீறி உறவுக்கு முக்கியத்துவம் தருவதால்  வருவது.

அர்ஜுனனின் தடுமாற்றம் உறவா, கடமையா என்பது. இந்த ஸ்லோகத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது அதுதான். அவனுக்குள் வேறு ஏதாவது குழப்பமோ அல்லது போராட்டாமோ இருந்திருக்கலாம். நமக்குத் தெரியாது.

நம்மால் அர்ஜுனனை புரிந்து கொள்ள முடிகிறது. அவன் சொல்வது சரிதானே? அப்பா, பிள்ளை, தாத்தா, மாமன், மைத்துனன், என்று எல்லோரையும் எதிர்த்து  சண்டை போட்டு, அவர்களை கொன்று அடையப் போவதுதான் என்ன ?

அர்ஜுனன் புலம்பிக் கொண்டிருக்கிறான். கண்ணன் ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

என்னதான் சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று காத்திருக்கிறான்.

நாமும்தான்.

http://bhagavatgita.blogspot.com/2018/06/134.html


No comments:

Post a Comment