Tuesday, April 16, 2019

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு

பகவத் கீதை - 2.42 - பிடித்த முயலுக்கு மூணே காலு 



यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

யம் = அது

இமம் = இந்த

புஷ்பிதாம் = மலர்ந்தது

வாசம் = உரை

ப்ரவத³ந் = சொல்கிறார்கள்

அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்

வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்

 பார்த² = பார்த்தா

ந = இல்லை

அந்ய = மற்றவை

அஸ்தி = இருக்கிறது

இதி  = எனவே

வாதி³ந: = சொல்பவர்கள்  ||2-42||


சிலர் வேதங்களின் வெளி உரைகளில் மகிழ்வார்கள். பூக்கள் போன்ற அலங்கார சொற்களில் அவர்கள் மயங்கி விடுகிறார்கள். தாங்கள் கொண்ட கொள்கையைத் தவிர மற்றவை எல்லாம் பிழை என்கிறார்கள். 

வேதம் பல அங்கங்களை கொண்டது. அதில் ஒரு அங்கம், யாகம், ஓமம் போன்றவை. இவற்றை செய்தால், இவை கிடைக்கும் என்று அவை சொல்கின்றன.

பிள்ளை இல்லையா, இந்த யாகம் செய்.

மழை வரவில்லையா, அதற்கு ஒரு யாகம்.

எதிரிகளை வெல்ல வேண்டுமா, உலகம் பூராவும் ஒரு குடைக் கீழ் வர வேண்டுமா - அஸ்வமேத யாகம்

என்று மளிகை கடை பட்டியல் போல, இதுக்கு இது என்று பெரிய பற்றிய பட்டியல் தருகிறது.

கீதை, வேதத்தின் அந்தப் பாகத்தை கண்டிக்கிறது. அதுவும் வன்மையாக கண்டிக்கிறது. "அலங்கார வார்த்தைகள்" என்று சாடுகிறது.

கர்மத்தை செய், பலனை எதிர் பார்க்காதே என்று கீதை ஒரு புறம் சொல்கிறது.

உனக்கு இந்த பலன் வேண்டுமா, இந்த கர்மத்தைச் செய் என்று வேதம் சொல்கிறது.

நாம் எதை கடைபிடிப்பது? நம்மவர்களை கேட்டால் "நாங்கள் வேதம் மற்றும் கீதையை கடை பிடிக்கிறோம்" என்பார்கள். பெரும்பாலும் இரண்டையுமே படிக்காதவர்களாக இருக்கும்.

அது மட்டும் அல்ல, "வேதத்தில் உள்ளது தான் சரி. மற்றவை எல்லாம் தவறு" என்று  சொல்வதையும் கீதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு..தப்பாவா சொல்லி இருக்கப் போகிறார்கள்..பேசாமல் மண்டைய ஆட்டிவிட்டுப் போவோம்...என்றுதான் நினைக்கிறார்கள்.

கீதை, அப்படி ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அப்படி ஏற்றுக் கொள்பவர்களை "அறிவற்றவர்கள் " என்று வன்மையாக கண்டிக்கிறது.

சொல்வது கீதை.


https://bhagavatgita.blogspot.com/2019/04/242_16.html

No comments:

Post a Comment