Tuesday, April 9, 2019

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி

பகவத் கீதை - 2.42 - உறுதியான புத்தி 



व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||


வ்யவஸாயாத்மிகா = உறுதியான

பு³த்³தி = புத்தி

ஏக = ஒன்று, ஒருமித்த

இஹ = இங்கே, இந்த கர்ம யோகத்திலே

குருநந்த³ந = குரு நந்தன

ப³ஹுஸா²கா = பல கிளைகளை உடையது

ஹி = அதனால்

அநந்த = முடிவற்ற

ஸ்²ச = மேலும்

பு³த்³த⁴ய = அறிவு, புத்தி

அ வ்யவஸாயிநாம் = உறுதி இல்லாத

உறுதி உடையவர்களின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதோரின் புத்தி பல கிளைகளை உடையது. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 


கர்ம யோகத்தை சொல்லி வருகிறான் கண்ணன்.

மனம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஓடும் மனதை எப்படி நிலை நிறுத்துவது? மனச் சலனம் நிற்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

அது தெரிகிறது, ஆனால் மனதை எப்படி நிலைப் படுத்துவது?

வேலை - கர்மம் - ஒரு வழி.

செய்யும் வேலையில் முழுவதும் கவனம் செலுத்தினால் மனம் அதில் ஒன்றும். வேறு எங்கும் அலையாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மனதை  ஒருமுகப் பழக்கப் படுத்தி விடலாம்.

சும்மா உட்கார்ந்து கொண்டு, மனதை ஒருமுகப் படுத்துகிறேன் என்றால் அது அடங்காது.

அந்த வேலை எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

சமையல் செய்வது, வீடு பெருக்குவது, வண்டி ஓட்டுவது, பூஜை செய்வது, படிப்பது, பாடுவது, உடற் பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

வேலை என்பது ஒரு சாக்கு. அதை வைத்துக் கொண்டு மனதை நிலைப் படுத்த பழக்கி விடலாம்.

கிளை கிளையாக பிரிந்து செல்லும் மனதை ஒருமுகப் படுத்த கர்மா அல்லது வேலை ஒரு வழி.

"மனதில் உறுதி வேண்டும்" என்றான் பாரதி.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்" என்பார் வள்ளலார்.


என்னை பொறுத்தவரை கர்ம யோகம் என்பது வேலை செய்வதைப் பற்றி அல்ல. கர்மத்தின் மூலம் மனதை ஒருமுகப் படுத்துவதுதான்.

மனதை ஒருநிலைப் படுத்தவேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும். வேலை ஒரு வழி.


சிற்றின்பத்தின் உச்சியில் மனமும் உடலும் ஒன்று பட்டுப் போகிறது. ஆனால் அது ஒரு சில வினாடிகளே நிலைக்கிறது. அதுதான் அதில் சிக்கல்.  அதை நீட்டிக்க முடிவதில்லை.

நீட்டிக்க முடிந்தால், அதுதான் பேரின்பம்.

முயன்று பாருங்கள். எந்த வேலை செய்தாலும், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்,  மனதை அதில் இலயிக்க விடுங்கள்.

மெடிடேஷன் என்று சொல்லுகிறார்களே, அதுதான் அது.

தியானம்.  Meditation எல்லாம் இந்த இரகசியம் தான்.

கர்ம யோகத்தை இப்படியும் சிந்திக்கலாம். கர்மத்தின் மூலம் மனதை நிலை பெறச் செய்வது.

உங்களுக்கு இது சரி என்று படுகிறதா ?

https://bhagavatgita.blogspot.com/2019/04/242.html



No comments:

Post a Comment