பகவத் கீதை - 2.45 - ஆத்மாவில் நிலை கொள்ள
त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥
த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||
த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி
அர்ஜுனா, வேதங்கள் மூன்று குணங்களை பற்றி பேசுகின்றன. நீ அவற்றைக் கடந்து, இருமைகள் இல்லாமல், சத்வ குணத்தில் நிலை பெற்று, உலக இன்பங்களில் பற்றுக் கொள்ளாமல், ஆத்மாவோடு ஒன்றி இருப்பாய்.
யப்பா....பெரிய லிஸ்ட்டா இருக்கே.
பெரிய பட்டியல் மட்டும் அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் முன்னுக்கு பின் முரணாகவும் இருக்கிற மாதிரி தெரியுதே.
கண்ணன் என்னதான் சொல்ல வர்றான்னு பாக்கலாம்.
மூன்று குணங்கள் - இது பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். சத்வ குணம், இராஜஸ குணம், தாமச குணம். மனிதர்கள் எல்லோரும் இந்த மூன்று குணங்களின் கலவைதான். இந்த குணங்களில் சில தருணங்களில் சிலவை மேலோங்கி இருக்கும். அதற்காக மற்றவை இல்லாமல் போகாது. மற்றவை கொஞ்சம் ஒதுங்கி நிற்கும். அவ்வளவு தான்.
"முக்குணங்களை கடந்து" ...இந்த மூன்று குணங்களையும் கடந்து செல்லும்படி சொல்லுகிறான். இந்த குணக் கலவையில் கிடந்து உழலாதே என்கிறான்.
பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.
என்பார் மணிவாசகர். இந்த முக்குணங்களையும் தாண்டி, இந்த பிறவி என்ற பந்தத்தில் இருந்து என்னை காப்பாற்றிய சிவனை கொண்டாடுவேன் என்கிறார்.
சரி மூன்று குணங்களையும் கடந்தாச்சு என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம் என்ன செய்ய வேண்டும் ?
"இருமைகளை கடந்து" அது என்ன இருமை?
இன்பம், துன்பம்
சுகம், துக்கம்,
பாவம், புண்ணியம்,
நல்லது கெட்டது
இறைவன் என்பவன் இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்பவன். படித்தவன், படிக்காதவன், வல்லவன், இளைத்தவன், நல்லவன், பொல்லாதவன் என்ற பாகுபாடெல்லாம் இறைவனுக்குக் கிடையாது.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
நடு நிலை என்பது இறைக் குணம். இந்த இருமைகளை கடந்தால், நீங்களும் இறை தன்மை அடையலாம்.
அத்வைதம் என்றால் என்ன ?
அதற்கு நேரடியாக அர்த்தம் சொல்ல முடியாது.
துவைதம் என்றால் இரண்டு.
அ + துவைதம் = அத்வைதம். இரண்டு இல்லாதது என்று அர்த்தம்.
தமிழில் இரண்டற கலப்பது என்று பொருள். இரண்டு இல்லாமல் கலந்து விடுவது.
ஏன், அதை ஒன்று என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே? அது என்ன இரண்டு இல்லாதது?
இந்த இருமைகள் நம் கண்ணுக்குத் தெரியும்.
இதைத் தாண்டி காண்பதுவே காட்சி.
"ஒன்றாக காண்பதுவே காட்சி" என்றாள் ஒளவைப் பாட்டி.
சரி, முக்குணங்களை கடந்து, இருமைகளை தாண்டி வந்தாகி விட்டது.
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
"சத்வ குணத்தில் நிலை பெற்று "
என்னடா இது வம்பா போச்சு. இப்பத்தான் முக்குணங்களை கடக்க வேண்டும் என்று சொன்னான். இப்ப என்னடா என்றால் அந்த முக்குணங்களில் ஒன்றான சத்வ குணத்தில் நிலை பெற்று என்கிறான்.
இது முன்னுக்கு பின் முரணாக இல்லையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்படி முரண் இல்லை?
முக்குணங்களின் சேர்க்கையில், எப்போதும் ஒரு குணம் தலை தூக்கி நிற்கும். மற்ற இரண்டு குணங்களும் கொஞ்சம் மங்கி இருக்கும்.
அந்த நிலையில், சத்வ குணத்தில் இருந்தால் கூட, அதில் கொஞ்சம் ராஜஸ, தாமச குணத்தின் சாயல், கலவை இருக்கும்.
மூன்றையும் கடந்த பின், தூய்மையான சத்வ குணத்தில் நிலை பெற்று இருக்க வேண்டும் என்கிறான். அந்த நிலையில், மற்ற இரண்டு குணங்களின் கலவையோ , சாயலோ இருக்காது.
மிக உன்னத குணம்.
அந்த நிலையில் உலக பற்றுகள் விடுபட்டு, அனைத்தும் ஆத்மாவில் நிலை பெற்று இருக்கும் என்கிறான் கண்ணன்.
நம் மீதுள்ள அதீத அன்பினால், இவற்றை எல்லாம் எழுதி வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
இவற்றின் பால் மனதை திருப்புவதோ அல்லது "...not practical..." என்று தூசி தட்டிவிட்டு போவதோ நம் விருப்பம்.
https://bhagavatgita.blogspot.com/2019/06/245.html
No comments:
Post a Comment