Thursday, April 17, 2014

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 2 



यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச்

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவம் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

அர்ப்பணம் என்று செய் !


கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் என்று வைத்துக் கொள்ளலாம் அல்லது அது எந்த கடவுளாக  வேண்டுமானாலும் இருக்கட்டும் - இராமனாக இருக்கட்டும், வேறு யாராக  வேண்டுமானாலும் இருக்கட்டும்....யாருக்கு என்பது அல்ல முக்கியம்...என்ன என்பது முக்கியம்...

நம் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒன்று செய்து கொண்டுதான் இருக்கிறோம்....பிறந்ததில்  இருந்து இறக்கும் வரை ஏதோ காரியங்கள் செய்து கொண்டுதான்  இருக்கிறோம்.

நாம் செய்யும் காரியங்கள் நம்மை பாதிக்கின்றன, நம்மை பண்படுத்துகின்றன. அப்படி என்றால்  அவற்றை சரியாகச் செய்தால் நம்மிடம் சிறந்த பாதிப்பு இருக்கும்,   தவறாகச் செய்தால் தவறான பாதிப்பு இருக்கும்.

எப்படி செய்கிறோம் என்பது மட்டும் அல்ல, என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம்.

நல்லதைச் செய்ய வேண்டும், நல்ல படியாகச் செய்ய வேண்டும்....இதை எப்படி சொல்லுவது.

திருட்டையும், கொலையையும் செய்து விட்டு அதுவும் கிருஷ்ணார்ப்பணம் என்று கூட சொல்லலாம்.

வரும் கால காலத்திற்கும் சொல்லி வைக்க வேண்டும் ....

எதைச் செய்தாலும் ...அர்ப்பணம் என்று செய்....

இதுதான் அந்த மகா வாக்கியம்.

செய்யப் படும் செயல் அர்பணமாக வேண்டும் என்றால் செய்பவனும், யாருக்காக   செய்யப் படுகிறதோ அவனும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லவா ?

முதலில் நீங்கள் மிக மிக உயர்ந்தர்வர்கள் என்று உணருங்கள்.

தன்னை மதிக்காதவன்  உலகில் யாரையும் மதிக்க மாட்டான்.

"உண்ணும் உணவை எனக்கு அர்ப்பணம் என்று செய் "

நீங்கள் உண்ணும் உணவு நைவேத்தியம், அர்ப்பணம் என்ற எண்ணம் வரும் போது  இந்த உடலும், இந்த உடலை செலுத்து சக்தியும் எவ்வளவு உயர்ந்தது  என்ற  எண்ணம் வரும்.

"தானம் தரும் போதும் எனக்கு அர்ப்பணம் என்று செய்"

தன்னை உயர்வாக நினைக்கும் போது மற்றவர்களை தாழ்வாக நினைக்கக் கூடாது.  அவர்களையும் உங்களுக்கு நிகராக நினைக்க வேண்டும். எனவே, தானம் தரும் போதும்   "எனக்கு அர்ப்பணம் என்று செய் ".

பிச்சை போட்டால் கூட அதிலும் ஒரு பக்தி

உணவு உண்டால், அதிலும் ஒரு பக்தி.

அர்ப்பணம் என்று கூறும் போது சுய நலம் இல்லாதது என்ற அர்த்தம் வரும்.

உண்பதும் அர்ப்பணம் என்றால், நாம் இருப்பதும், உண்பதும் நம் நன்மைக்காக  அல்ல, மற்றவர்களுக்கு உதவி செய்ய.

தானம் தரும்போதும், நான் தருகிறேன், நான் பணக்காரன் என்ற எண்ணம் இல்லாமால்,  அதையும் அதன் பலனையும் அர்ப்பணம் என்று நினைத்துச் செய்ய வேண்டும்.



தவம் செய்தாலும், அதன் பலன் நமக்கு வேண்டும் என்று நினைத்து செய்யக் கூடாது...

தவமும் அர்ப்பணம், தவத்தின் பலனும் அர்ப்பணம்.

சுயநலம் இல்லாமல் செய்யுங்கள், சுகமாக இருக்கும்.


2 comments:

  1. Rs I like this

    செய்யப் படும் செயல் அர்பணமாக வேண்டும் என்றால்
    செய்பவனும், யாருக்காக செய்யப் படுகிறதோ அவனும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லவா ?
    சுயநலம் இல்லாமல் செய்யுங்கள், சுகமாக இருக்கும்.

    ReplyDelete
  2. In the past People used to wait for the particular day in a week to Read Anandha Vikatan. I'm also the same way eagerly waiting for next blog on Gita . I'm very proud to say that. Thanks RS

    ReplyDelete