Thursday, April 17, 2014

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று

கீதை 9.28 - கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெற்று  


शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥९- २८॥

ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||

ஸு²பா⁴ = மங்களமானவை

அஸு²ப = அமங்களமானது

பலைய = பலன்களை

எவம் = எனவே

மோக்ஷ்யஸே = விடுதலை பெற்று

கர்ம = வினைகளின் 

ப³ந்த⁴நை: | = தளைகளில் இருந்து

ஸம்ந்யாஸ = துறந்து

யோக³ = யோக

யுக்தாத்மா = மனதை நிலை நிறுத்தி  

விமுக்தோ = முக்தி அடைந்து

மாம் = என்னை 

உபைஷ்யஸி = நீ அடைவாய்

மங்களம் அமங்களமாகிய பலன்களைத் தரும் கர்மத் தளைகளில் இருந்து விடுபட்டு. துறவு என்ற யோகத்தில் ஈடுபட்டு, இவற்றில் இருந்து விடுதலை அடைந்து  என்னை அடைவாய்.

குரங்கை எப்படி பிடிப்பார்கள் தெரியுமா ?

ஒரு இளநீரை எடுத்து, அதன் மேலே சிறு துளை இடுவார்கள். அந்தத் துளையில்  குரங்கின் கை மட்டும் தான் போக முடியும். அந்த இளநீரில் உள்ள நீரை வெளியே ஊற்றி விட்டு, குரங்குக் பிடித்த தின் பண்டங்களை அதனுள் போட்டு வைப்பார்கள்.

குரங்கு அந்தத் தின் பண்டத்தை எடுக்க உள்ளே கை விடும். கை நிறைய எடுத்துக் கொள்ளும். மூடிய கை வெளியே வராது. எடுத்த தின் பண்டத்தை விட்டு விட்டால் கை வெளியே வந்து விடும். ஆனால் குரங்கு விடாது. உள்ளே மாட்டிக் கொண்ட கையோடு அங்கும் இங்கும் அலையும்.  சாப்பிட முடியாமல் மெலிந்து போகும். இழுத்து இழுத்து கை எல்லாம் புண்ணாகப் போகும். பின் அது  சோர்ந்து விழுந்தவுடன் அதை பிடித்துக் கொள்வார்கள்.

அந்த குரங்கில் இருந்து வந்தவர்கள் தானே நாம்.

பிடித்ததை விட மாட்டோம்.

பிறந்தோம், படித்தோம், வேலை, திருமணம், பிள்ளை குட்டிகள், சொத்து சேர்ப்பது என்று அலைகிறோம் . இது தான் வாழ்க்கையா ? இதைத் தாண்டி வாழ்வில்  எதுவும் இருக்கிறதா ?

அதை பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லை.

ஒன்றில் இருந்து அடுத்தது என்று குரங்கு போலத் தாவிக்  கொண்டிருக்கிறோம்.

பிறந்தோம். கொஞ்ச நாள் கழித்து பள்ளிக் கூடம்  அனுப்பினார்கள். ஒரு வகுப்பு முடிந்து மறு வகுப்பு என்று சென்றோம். படிப்பு முடிந்தவுடன் வேலை. வேலை கிடைத்தவுடன் திருமணம். திருமணம் முடிந்தவுடன் பிள்ளை குட்டிகள். பின் அவற்றின் படிப்பு. அவற்றின் வேலை என்று வாழ்க்கை ஒரு தொடர் வண்டி போல் போய்க் கொண்டே இருக்கிறது.

பின் வயதாகி, மரணம் நெருங்கும்போது என்ன நடந்தது என்று யோசிக்கும் போது முழு வாழ்வும் இவ்வளவுதானா என்ற கேள்வி முன்  நிற்கும்.

இந்த வினைத் தொடர்களை எப்படி அறுப்பது ? இதில் இருந்து விடு பட்டால் தான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும். இந்த தொடர் சங்கிலியில் இருந்து எப்படி விடுபடுவது ?

முந்தைய ஸ்லோகத்தில் எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் என்று செய் என்று கூறப்  பட்டது.

அப்படி செய்தால் என்ன ஆகும் என்பது இந்த ஸ்லோகத்தில் கூறப்படுகிறது.

அப்படி, செயலில் பற்று இல்லாமல் அர்ப்பணம் என்ற நினைவோடு செய்யும் போது  செயலின் நல்லதோ கெட்டதோ , விரும்பியதோ , விரும்பாததோ உங்களைச் சாராது. வினைகளின் பலன்கள் உங்களைத் தீண்டாது.

இது வேண்டும், இது வேண்டாம் என்று இல்லாமால் எல்லா செயலையும் ஒரு அர்பணிப்பு என்ற நினைவோடு செய்யும் போது அந்த வினைகளின் பலன்கள் உங்களைத் தொடாது.


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

அப்படி என்றால் துன்பமும் (இடும்பை) இல்லை.

செயல் - அவற்றின் விளைவுகள் - விளைவுகள் தரும் சுக துக்கங்கள் - அதில் இருந்து விளையும் ஆசைகள் - பயங்கள் - கோபங்கள் - ஏமாற்றங்கள் என்று இவற்றில் இருந்து மனம் விடு பட வேண்டும். அப்போதுதான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும்.

இல்லை என்றால் இதிலேயே கிடந்து மனமும் நம் வாழ்க்கையும் உழன்று கொண்டே இருக்கும்.

அதற்காக செயலே செய்யாமல் இருக்க முடியுமா ?

படிக்காமல் இருக்க முடியுமா ? வேலை செய்யாமல் இருக்க முடியுமா ?

முடியாது. செய்யவும் வேண்டும் ஆனால் அவை நம்மை பற்றிக் கொள்ளவும் கூடாது.

அதற்குத்தான் முந்தைய சுலோகம் சொன்னது - செய், ஆனால் உனக்கு என்று செய்யாதே, செயல்களின் பலன்களை அர்பணித்து விடு. யாருக்கு அர்பணிக்க வேண்டும். நான் செய்யும் வேலையின் பலன் மற்றவனுக்கு கிடைப்பதை விட எனக்கு கிடைப்பது சிறந்தது அல்லவா ? மற்றவர்களுக்கு அர்ப்பணம் செய் என்றால் செய்ய  மாட்டோம். எனவே கிருஷ்ணன் செய்கிறான் "எனக்கு அர்ப்பணம் செய் " என்று. அவன் நம் செயல்களின் பலன்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறான்.  இது வந்துதான் ஆக வேண்டும் என்று இல்லை அவனுக்கு.

ஒரு சிறந்த நன்மைக்காக அர்ப்பணம் செய் என்பதை சொல்லாமல் சொன்னது அது.

அப்படி செயல்களை செய்து முடித்த பின், அது என்ன ஆனாலும் நமக்குக் கவலை இல்லை. மனம் செயலைத் தாண்டி சிந்திக்கத் தொடங்கும். செயல் , வினை, கர்மா என்பதே வாழ்கை அல்ல. அது வாழ்வின் ஒரு கூறு அவ்வளவுதான். அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

அது என்ன என்று மனம் சிந்திக்கக் தொடங்கும்.

ஒரு புதிய பாதை  பிறக்கும்.

புதிய சிந்தனை. புதிய உற்சாகம் பிறக்கும்.

வாழ்கை, முதன் முதலாக ஒரு இயந்திரத்தனத்தில் இருந்து விடுபடும்.

வாழ்வின் அர்த்தம் விளங்கத் தொடங்கும், விரியத் தொடங்கும்.

அப்படி செய்தால் மோக்ஷம் கிடைக்கும், முக்தி கிடைக்கும். என்னை அடைவாய் என்கிறது சுலோகம்.

இறை நிலை அடைவதின் படிகள்

- அர்பணிப்பு உணர்வோடு கர்மம் செய்வது
- கர்மங்களின் பலன்களில் பற்றற்று இருப்பது
- கர்மங்களின் தலைகளில் இருந்து விடுபடுவது
- மோக்ஷம்
- முக்தி
- இறை நிலை

இதில் மோக்ஷம் முக்தி என்றால் என்ன, இரண்டுக்கும் உள்ளை ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி பல கருத்துகள் சொல்லப்  படுகிறது.

வீடு பேறு என்று மொழி மாற்றம் செய்கிறார்கள்.

அதைத் தாண்டிப் போங்கள் .  இறை நிலை அடைவது , அது தான் இலக்கு. 













No comments:

Post a Comment