Wednesday, April 2, 2014

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2

கீதை - 9.18 - நானே சாட்சி - பாகம் 2


गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥

க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||

க³தி = வழி
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴ = தலைவன்
ஸாக்ஷீ = சாட்சி
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம்  = சரணம் அடையும் இடம்
ஸுஹ்ருத் = நெருங்கிய நண்பன்
ப்ரப⁴வ: = தொடக்கமும்
ப்ரலய: = அழிவும்
ஸ்தா²நம் = நிலையான இடம்
நிதா⁴நம் = நிதானம்
பீ³ஜம் = விதை
அவ்யயம் = அழியாத


இவ்வுலகத்தின்  வழி,  தலைவன்,  சாட்சி, உறைவிடம் , சரண் அடையும் இடம், நண்பன், தொடக்கம், அழிவு, இதன் நிலையான இடம், நிதானம் , இதன் அழியாத விதை.

சாட்சி - என்ன நடந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருப்பது சாட்சியின் வேலை. நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, லீலை என்று அனைத்தையும் இரசிக்கும்  மனம் வேண்டும். நானே எனக்கு சாட்சி என்றால், நான் கர்மாவை செய்கிறேன், ஆனால் அதன் விளைவுகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. நான் செய்வதை நானே பார்த்துக்  கொண்டிருக்கிறேன், மூன்றாவது மனிதனைப் போல.  இது ஒரு தவம். இந்த உடல் தான் நான் என்று இருக்காமல், இந்த உடல் செய்வதை  நான் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.

ஒரு நாள் அப்படி செய்து  பாருங்கள்.உங்களையே நீங்கள் கவனித்துப் பாருங்கள். பற்று விலகும்.

உலகிலேயே மிகப் பெரிய பற்று எது என்றால் இந்த உடலின் மேல் கொண்ட பற்று. அந்த பற்று விட வேண்டுமானால், சாவை வெல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு நீங்களே சாட்சியாக இருந்து பாருங்கள். நீங்கள் வேறு, உங்கள் உடல் வேறு  என்பது உங்களுக்குப்  புரியும்.

நண்பன் -  நாம் தான் நமக்கு மிகப் பெரிய நண்பன். நம்மை விட்டு எப்போதும் விலகாமல் , நம் நன்மை ஒன்றே நினைபப்து நமக்குள் இருக்கும் நான் தான். நட்பு என்பது   கூடவே பிறந்து வருவது அல்ல. பின்னால் வந்து சேர்ந்து கொள்வது. அது போல தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது பிறவியிலேயே வருவது அல்ல.  பின்னால் நிகழும் ஒரு நிகழ்வு. அது நிகழ்ந்த பின், நம்மைத் தவிர  நமக்கு பெரிய துணை யாரும் இல்லை.

தொடக்கம் அழிவு (முடிவு): அறிவின் தொடக்கம், அறியாமையின் முடிவு. வடிவங்களும், பெயர்களும் அழிந்து இந்த உலகம் முழுதும் ஒன்று என்ற புதுமையின் தொடக்கம்; புற வேற்றுமைகள் அழியும், எல்லாம் ஒன்றே என்ற ஞானம்  பிறக்கும். அதுவே தொடக்கம், அழிவு இரண்டும் சங்கமிக்கும் இடம்.  அறியாமை  அழியும்போது அறிவு பிறக்கிறது.

இறைவனிடம் வேண்டும் போது , மெய்ஞானம் வேண்டும் என்று மாணிக்க வாசகர் கேட்க்க வில்லை. பொய் ஞானம் அழிந்தால் போதும் என்று  வேண்டுகிறார்.

பொய் ஆனவை எல்லாம் போய் அகல வந்தருளி

 என்பார். பொய் அழியும்போது மெய் தானே பிறக்கும்.

ஆணவம் அழியும்போது அடக்கம் பிறக்கும்.

அஞ்ஞானம் அழியும்போது ஞானம் பிறக்கும்.

கயிறா பாம்பா என்ற சந்தேகம் உண்மை தெரிந்த போது அழிந்தது. கயிறு தான் என்ற  பிறந்தது. பொய் அழிந்தது உண்மை நின்றது.

எனவே நானே தொடக்கம் , நானே முடிவு.

"அழியாத விதை "...செடி தோன்றும் போது விதை அழிகிறது. ஆனால் இந்த உலகில்  இத்தனை விதமான பொருள்களும், உயிர்களும் தோன்றினாலும் இவற்றின்  மூலமான "நான்" என்பது அழியாமல் அப்படியே இருக்கிறது.  அது அப்படியே இருப்பதால்தான்  அதை அறிய முடியும். எல்லாவற்றிற்கும் அடி நாதமாக இருக்கும்  அந்த நான் என்பது நீறு பூத்த நெருப்பாய் அழியாமல் இருக்கிறது.  அதை அறிய வேண்டும்.

மீண்டும் ஒரு முறை இந்த ஸ்லோகத்தை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.  


இவற்றைத் தாண்டியும் கூட ஆழ்ந்த அர்த்தங்கள் உங்களுக்குத் தோன்றலாம்.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் - கீதை.

தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

உண்மை புலப்படும்.


1 comment: