Tuesday, April 8, 2014

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1

கீதை - 9.24 - அனைத்து வேள்விகளின் பலனும் எனக்கே - பாகம் 1 


अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||


அஹம் =  நான்

ஹி = நிச்சயமாக

ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும் 
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்


நானே வேள்விகளில் எல்லாம் பலன்களையும் பெற்றுக் கொள்பவன் (அவிர் பாகத்தை உண்பவன்) ; நானே தலைவன்; என்னை மக்கள் உள்ளபடி அறிய மாட்டார்கள் ; ஆதலால் அவர்கள் வீழ்கிறார்கள் .

கண்ணன் சொல்கிறான் "நானே வேள்விகளின் பலன்களை பெற்றுக் கொள்பவன்  (அவிர் பாகத்தை உண்பவன்)"  என்று.

இது என்ன புதுச் சிக்கலாக இருக்கிறது.

வேள்வி செய்வது நாம். அதன் பலன் நமக்குத்தானே வர  வேண்டும். யாரை நோக்கி  வேள்வி செய்கிறோமோ அவர்களுக்கு போகும் என்றால் பின் நமக்கு என்ன  கிடைக்கும் ?

நல்ல கேள்வி.

சற்று வார்த்தைகளை மாத்திப் போடுவோம்.

நானே அனைத்து  வேள்விகளிலும்  பலனைப் பெற்றுக் கொள்கிறேன் என்று  வாசிப்போம். "அனைத்து" என்ற வார்த்தையை வேள்விக்கு முன்னால் போடுவோம்.

என்ன அர்த்தம் ?

யாரை நோக்கி வேள்வி செய்தாலும், யார் எந்த வேள்வியை, யாரை நோக்கி, எந்த தெய்வத்தை  நோக்கி, எதற்க்காக செய்தாலும், நானே அதன் பலன்களை பெறுகிறேன்.

அதாவது அனைத்து வேள்விகளும் என்னைக் குறித்தே என்று சொல்கிறான்.

அனைத்து வேள்விகளின் பலன்களும் எனக்கே வந்து சேருகிறது என்கிறான் கண்ணன்.

எந்த கடவுளை வணங்கினாலும் , பூஜை செய்தாலும், வேள்வி செய்தாலும், அது   என்னைக் குறித்தே என்கிறான் கண்ணன்.

இது சரியான அர்த்தமா ?

அது அப்படியே ஒரு  இருக்கட்டும்.

நமக்கு உடல் நிலை சரி இல்லை. ஒரு மருத்துவரிடம் போகிறோம். அவர் சில  சிகிச்சை முறைகளை  சொல்கிறார்.நமக்கு சந்தேகம், அது சரிதானா என்று.  இன்னொரு மருத்துவரிடம் சென்று இரண்டாவது யோசனை கேட்க்கிறோம். எத்தனை  மருத்தவரிடம் கேட்டாலும்,  சிகிச்சையின் பலன் நமக்குத்தானே. ஒவ்வொரு மருத்துவரும் ஒரு  தேவதை.ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வேள்வி. எப்படி நடந்தாலும், பலன் "எனக்குத் தான்".


என்னனவோ இன்பங்களை அனுபவிக்கிறோம். நல்ல உணவு, இனிய இசை, உடை, உறவுகள், நறுமணம் என்று அத்தனை இன்பங்களையும் விரட்டி விரட்டி  அனுபவிக்கிறோம். இன்பங்கள் பல வகை, அதை அனுபவிக்கும் விதங்களும்  பலவகை....இருந்தாலும் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது நாம் தானே ?

ஓடி ஆடி பணம் சம்பாதிக்கிறோம், அதை முதலீடு செய்கிறோம். அதன் பலன்களை   பெறுகிறோம்.எங்கெங்கோ வேலை என்று அலைகிறோம் . யார் யாரிடமோ சென்று  நிற்கிறோம்.  போராடுகிறோம். பலன்களைப் பெறுகிறோம். கடைசியில் இத்தனை போராட்டங்களைச்  (வேள்விகளும்) செய்தாலும், அதன் பலனை அனுபவிப்பது "நாம்" தானே.

இன்பம் நூறு வழியில் வரலாம்.

அதை அடைய பல வழிகள் இருக்காலாம்.

அதற்காக பல போராட்டங்கள்  நடக்கலாம்.

கடைசியில் அனைத்தையும் அனுபவிப்பது யார் ? - நாம்.

இது புரியாவிட்டால் நாம் அலைந்து கொண்டே  இருப்போம்.

இதைத்தான் கண்ணன் சொல்கிறான் , இதை மனிதர்கள் அறிய மாட்டார்கள், அறியாமல்  வீழ்வார்கள் என்று.

நான் என்பதை அறிந்து கொண்டால் இந்த வீழ்ச்சி  இருக்காது.

எது எனக்கு இன்பம் தருகிறது ?

ஏன் அந்த இன்பம் எனக்கு வேண்டும் ?

இதற்கு முன்னால் இந்த மாதிரி இன்பத்தை நான் அனுபவித்தது இல்லையா ?

அந்த இன்பத்தை முன் அடைந்த பின் என்ன ஆயிற்று ?

ஏன் மீண்டும் அதன் பின் அலைகிறேன் ?

இந்த இன்பத்தின் கூடவே வரும் துன்பன்கள் என்னென்ன ?

இவற்றை அறியாத மனிதன் வீழ்வான்.

இன்னும் இதில் அறிய வேண்டியது இருக்கிறது...

மேலும் சிந்திப்போம்....




1 comment:

  1. இன்பம் நூறு வழியில் வரலாம்.

    அதை அடைய பல வழிகள் இருக்காலாம்.

    அதற்காக பல போராட்டங்கள் நடக்கலாம்.

    கடைசியில் அனைத்தையும் அனுபவிப்பது யார் ? - நாம்.

    இது புரியாவிட்டால் நாம் அலைந்து கொண்டே இருப்போம்.

    ReplyDelete