கீதை - 9.21 - பூஜையின் பலன்கள் கால எல்லைக்கு உட்பட்டது
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥९- २१॥
தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||
தே = அவர்கள்
தம் = அதை
பு⁴க்த்வா = அனுபவித்து
ஸ்வர்க³லோகம் = சுவர்க்க லோகத்தை
விஸா²லம் = பரந்து விரிந்த
க்ஷீணே = தீர்ந்த பின்
புண்யே = புண்ணியங்களின் பலனாக
மர்த்யலோகம் = இறக்கும் உலகமான இந்த பூமியில்
விஸ²ந்தி = மீண்டும் வருகிறார்கள்
ஏவம் = இப்படி
த்ரயீ = மூன்று (வேதங்கள் ?)
த⁴ர்மம் = தர்மங்களை
அநுப்ரபந்நா = கடைப்பிடித்து
க³தாக³தம் = இறந்து பிறந்து
காமகாமா = உலக பொருள்களில் பற்று வைத்து
லப⁴ந்தே = அடைகிறார்கள்
பரந்து விரிந்த வானுலகில் இன்பமாக வாழ்ந்து, செய்த புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மறுபடிம், அழிவுடைய இந்த பூலோகத்திற்கு திரும்புகிறார்கள். இப்படி மூன்று வித்தைகளில் (வேதங்கள் ?) தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.
முந்தைய ஸ்லோகத்தில், எப்படி யாகங்கள் செய்து, பாவங்கள் விலக்கி , மூன்று வித்தைகளை அறிந்தவர்கள் எப்படி விண்ணுலகை அடைந்து இன்பம் அடைகிறார்கள் என்று பார்த்தோம்.
அது தான் கீதை காட்டும் வழியா ?
யாகங்கள் செய்து சுவர்க்கம் அடைய முடியும் என்றால் பின் எதற்கு கர்ம யோகமும், பக்தி யோகமும், ஞான யோகமும் என்ற கேள்வி எழும் அல்லவா ?
அதை இங்கே விளக்குகிறார்.
ஆசைகள், ஆசைகள் தான். ஆசை எதன் மேல் என்றாலும், அது ஆசை தான். சாதாரண பொருள்கள் மேல் கொள்ளும் ஆசையும் ஆசை தான். விண்ணுலகம் வேண்டும் என்று கொள்ளும் ஆசையும் ஆசைதான். இந்த இரண்டு ஆசைகளில் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று வித்தியாசம் இல்லை.
வேதங்களை அறிந்து, யாகங்கள் செய்து, பாவங்கள் தவிர்த்து, தூய்மையாகி விண்ணுலகை ஆசைப் படுவோர், அதை அடைவார்கள்.
என்ன பிரயோஜனம் ?
விண்ணுலகை அடைந்தாலும், செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறப்பார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து இந்த சுழலில் இருந்து விடுபட மாட்டார்கள்.
பொருள் வேண்டி, சுகம் வேண்டி, பூஜை செய்வதை கீதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சுவர்க்கமே அடைந்தாலும், பின் கொஞ்ச காலம் கழித்து மீண்டும், புண்ணிய பலன்கள் தீர்ந்த பின், மீண்டும் இங்கே வந்து தான் தீர வேண்டும்.
அதாவது, அனைத்து பூஜைகளும், சடங்குகளும் தரும் பலன்கள் ஒரு கால எல்லைக்கு உட்பட்டவை. அவை நிரந்தர தீர்வு அல்ல.
யோசித்து பாருங்கள், சுவர்க்கம் சென்று, அதன் இன்பங்களை அனுபவித்து, பின் மீண்டும் இங்கு வருவது என்றால் எவ்வளவு கடினம் என்று.
எல்லா பூஜைகளும் கொஞ்ச காலம் பலன் தரும், பின் தீர்ந்து போகும். மீண்டும் பழைய கவலைகள், சிக்கல்கள் தான்.
கீதை "சுவர்க்கம் அடைந்து, அதன் இன்பங்களை அனுபவித்து " என்று சொல்வதை ஒரு குறியீடாகக் கொள்ளலாம்.
யாகம், வேள்வி, பாவம் தவிர்த்து என்பது பூஜையின் உச்சம்.
சுவர்க்கம் அடைவது என்பது பலன்களின் உச்சம்.
எவ்வளவுக்கெவ்வளவு பூஜை செய்கிறோமோ, அவ்வளவுக்களவு பலன் கிடைக்கும்.
சரி, புரிகிறது.
பூஜையின் பலன்கள் ஒரு கால எல்லைக்கு உட்பட்டது என்று புரிகிறது.
வேறு வழி தான் என்ன ?
சிந்திப்போம்.
No comments:
Post a Comment