Wednesday, April 23, 2014

கீதை - 9.31 - அழிவற்ற அற வழி

கீதை - 9.31 - அழிவற்ற அற வழி 


क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रति जानीहि न मे भक्तः प्रणश्यति ॥९- ३१॥

க்ஷிப்ரம் ப⁴வதி த⁴ர்மாத்மா ஸ²ஸ்²வச்சா²ந்திம் நிக³ச்ச²தி |
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே ப⁴க்த: ப்ரணஸ்²யதி || 9- 31||

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது


அவன் விரைவில் அற வழியில் செல்லத்  தலைபடுவான். நிரந்தர அமைதியும்  பெறுவான். என் பக்தன் அழிவதே இல்லை 


மனித மனம் எப்போதும் வரவு செலவு கணக்கு பார்க்கும் இயல்பு உடையது.
நல்லதைச் செய்யச் சொன்னால் கூட, அதனால் எனக்கு என்ன இலாபம் என்று கேட்கும்.

ஏன் பக்தி செய்ய வேண்டும் ? பக்தி செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் ?

பக்தி என்பது ஏதோ பாடல்களை, ஸ்லோகங்களை மீண்டும் மீண்டும் சொல்லிக்  இருப்பது அல்ல. 

மனம் ஒன்றி செய்யும் எதுவும் பக்திதான். 

பஜதே என்ற வார்த்தையில் இருந்து வந்தது பக்தி. 

பஜதே என்றால் உள்ளிருப்பதை வெளியே கொண்டு வருவது. உள்ளும் புறமும்  ஒன்றி இருப்பது. 

எந்த வேலையையும் மனம் ஒன்றி, மனம் இலயித்து செய்தால் அதுவும் பக்திதான் - அது திருடு, கொள்ளை போன்றவையாக இருந்தால் கூட. 

நான் என்பது மறந்து, ஒன்றாக ஐக்கியமாவது பக்தி. 

மனம் அத்தனையும் ஒன்றி ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்த்தால் கூட அது பக்திதான். 

மனம் ஒன்றாமல் கோவிலுக்குப்  போவதும்,பூஜை செய்வதும் பக்தி ஆகாது. 

அப்படி பக்தி  செலுத்துபவன், தன்னை மறந்து, உலகோடு ஒன்று   படுகிறான். தான் வேறு இந்த உலகம் வேறு என்ற பாகுபாடு மறைந்து போகிறது. 

எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம்  வருகிறது.

அந்த எண்ணம் வரும்போது, பாவங்கள் விலகி, அற வழியில் செல்லத்  தலைப்படுகிறான்.

அப்படி செல்பவனுக்கு அழிவு ஏது ?

அவன் நித்தமும் புதியதாய்  பிறக்கிறான். ஒவ்வொரு கணமும் அவனுக்கு புதியது.ஒவ்வொரு கணமும் அவன்  வாழ்கிறான்.நாம் ஒவ்வொரு கணமும் இறக்கிறோம். 

இப்படி யோசித்துப் பாருங்கள். 

ஒரு வேலை செய்யும்போது  மனமும்,உடலும் ஒன்று படுவது பக்தி. 

உடல் வேலை செய்யும் போது மனம் அந்த வேலையினால் கிடைக்கும் பலன் பற்றி  யோசித்துக் கொண்டிருந்தால் அது பக்தி அல்ல. 

அப்படி பார்க்கும் போது கர்ம யோகமும் பக்தி யோகமும் ஒன்றுதான் என்பது உங்களுக்கே  புலப்படும்.

மனம்  அலையாமல், செய்யும் வேலையை ஒரு அர்பணிப்பு உணர்வுடன் செய்வதும் பக்திதான். 

அந்த வழி தான் அற வழி . 

அந்த வழியில் செல்பவனுக்கு அழிவே இல்லை என்று கண்ணன் உறுதிபடச் சொல்கிறான். 

சிந்திப்போம். 




No comments:

Post a Comment