Sunday, April 13, 2014

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம்

கீதை - 9.26 - கொடுப்பதிலும் ஒரு சுகம் 


पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
 ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி  = அளிக்கிறார்களோ
தத் = அதை 
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்

இலை , பூ, கனி, நீர் இவற்றை அன்புடனும் (பக்தியுடனும்) , தெளிந்த மனத்துடனும் அளித்தால் நான் ஏற்றுக் கொள்வேன் 

இறைவனிடம்தான் எல்லாம் இருக்கிறதே ? இந்த பூவும், நீரும், பழமும், இலையும்   வந்து அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

மேலும், இந்த இலையும், பூவும், நீரும், நாம் செய்தது இல்லை. அவை இயற்கையிலேயே இருக்கிறது. அதை எடுத்து இறைவனுக்கு தருவதில் நமக்கு என்ன  பெருமை ?

இவற்றை அன்புடனும், நல்ல மனதுடனும் கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்வேன்  என்கிறான்.

சரி, அதனால் நமக்கு என்ன ?

இதை வாசித்து விட்டு, கீதை பூஜை செய்யச் சொல்கிறது. இலையும், பூவும், பழமும்  நீரும் விட்டு பூஜை செய்யச் சொல்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.


சற்று ஆழமாக யோசிப்போம்.

துன்பங்களுக்கு, கவலைகளுக்கு, மன சஞ்சலங்களுக்கு காரணமாய் இருப்பது  ஆசை.

அத்தனைக்கும் ஆசைப் படுகிறோம்.

பின் அத்தனை கவலைகளும் வரமால் என்ன செய்யும் ?

சரி, அதற்காக ஆசையை விட்டு விட முடியுமா ? ஒன்றிலும் ஆசை இல்லை விட்டால்  வாழ்கை சுவைக்குமா ? மரக் கட்டையை, கல்லைப் போல் ஆகி விட மாட்டோமா ?

பின் என்ன தான் செய்வது ?

பொருள் சேர்பதில் ஒரு சுகம்.

பொருளை  கொடுப்பதில் இன்னொரு சுகம்.

கொடுத்துப் பாருங்கள் - சுகம்  தெரியும்.

அன்பு வேண்டும், காதல் வேண்டும், என்னை நேசிப்பவர்கள் யாரும் இல்லையா  என்று அலைவதை விடுங்கள்.

நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள், அன்பை அள்ளி வழங்குங்கள் , மற்றவர்களை காதலியுங்கள்.

எப்போதும் வேண்டும் வேண்டும் என்று அலைவதை விட்டு விட்டு கொடுக்கத் தொடங்குங்கள்.

சின்ன குழந்தைகளைப் பார்த்தால் தெரியும் - அது எல்லாம் தனக்கு வேண்டும் என்று  நினைக்கும். கையில் அகப்பட்டதை எடுத்து வைத்துக்  கொள்ளும்.கேட்டால்  தராது. வலிந்து வாங்கினால் அழும்.

வேண்டும் வேண்டும் என்று அலைவது சிறு குழந்தைத்தனம்.

வளருங்கள். கொடுங்கள்.

கொடுக்க கொடுக்க பொருள்கள் மேல் ஆசை குறையும்.  மற்றவர்கள் அனுபவிப்பதை  பார்த்து மனம் மகிழும்.

"என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேனின் பெற்றதன்றோ" என்று இராமன்  சொன்னது  மாதிரி.

பொருளுக்காக சிலர் அலைகிறார்கள். அன்புக்காக சிலர் அலைகிறார்கள்.

அலைச்சல் அடிப்படை.

சரி, கொடுக்கலாம்.

கொடுப்பதிலும், ஒரு ஆணவம் வந்து  விடும்.

நான் கொடுக்கிறேன், நான் பணக்காரன், என்னிடம் இருக்கிறது என்ற ஆணவம்  இல்லாமல் கொடுக்க வேண்டும் ?

அது எப்படி கொடுக்க முடியும் ?

எல்லாம் இருப்பவனிடம் போய் இலையும், நீரும், பழமும் கொடுக்கும் போது  அந்த  ஆணவம் நீங்கும்.

நான் கொண்டு வந்தது, செய்தது என்று எதுவும் இல்லை. எல்லாம் இயற்கையில் உள்ளது . நான் பொருகளை இடம் மாற்றம் செய்கிறேன், அவ்வளவுதான் என்ற எண்ணம் வரும்.


வங்கியில் ஒரு காசாளார்  இருக்கிறார். பல பேர் அவரிடம் காசோலையை கொடுத்து  பணம் பெற்றுக் கொள்கிறார்கள். "நான் இவ்வளவு பேருக்கு பணம்   கொடுத்தேன்  " என்று அவர் நினைப்பாரா ?

யாரோ ஒருவரின் கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் தருகிறார்.

பட்டுவாடா செய்வது மட்டும் தான் அவர் வேலையும்.

இந்த உலகில் நீங்களும் பட்டுவாடா செய்கிறீர்கள் . அவ்வளவுதான்.

அவ்வளவு பெரிய இறைவனிடம் இலையை கொண்டு போய் கொடுக்கும் போது  நான் தருகிறேன் என்ற எண்ணம் வராது, என்னுடையது என்று ஒன்றும் இல்லை   என்ற எண்ணம் வரும்.

முதலில் அங்கிருந்து ஆரம்பியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து மற்றவர்களுக்கும்  கொடுக்கத் தொடங்குவீர்கள்.

கொடுக்கும் போது பற்று விடும்.

பற்று விட்டால் இருப்பதெல்லாம் சுகம் தான்.

பற்று விட்டால் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்காது.

இலையில், நீரில், பூவில், பழத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.

அன்போடு கொடுங்கள்.

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்

கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

என்னது இல்லை என்று நினைத்துக் கொடுங்கள்

அவன் தந்ததை அவனுக்கே திருப்பி தருகிறேன் என்று எண்ணிக் கொடுங்கள்.

வாழ்வில் ஒரு புது இன்பம் வரும்.



1 comment:

  1. Good to know Gita is telling about art of giving. Good sloga . Keep giving it does wonders......Nr

    ReplyDelete