Monday, April 14, 2014

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1

கீதை - 9.27 - எதைச் செய்தாலும், அர்ப்பணம் என்று செய் - பாகம் 1 


यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥

யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல் 
 த³தா³ஸி  = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி  = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்

நீ எதைச் 

செய்தாலும், உண்டாலும், தானமாகக்  கொடுத்தாலும்,தவமாகச் செய்தாலும், எனக்கு அர்ப்பணம் என்று செய்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள்.

சுற்றி இருக்கும் அனைத்திலும் நீங்கள் கொண்டு வந்தது எது, நீங்கள் செய்தது எது ?

ஒன்றும் இல்லை. நீங்கள் இந்த உலகில் வருவதற்கு முன்னே அவைகள் இருந்தன.  நீங்கள் போன பின்னும் அவை இருக்கும்.

நீங்கள் வந்து போகும் ஒரு நாடோடி. ஒரு விருந்தினர். அவ்வளவுதான்.

இதில் நீங்கள் யாருக்கு எதைச் செய்து விட முடியும் ?

நீங்கள் பொருள்களையும், மனிதர்களையும் இட மாற்றம் செய்து கொண்டு இருகிறீர்கள். அவ்வளவுதான்.

இந்த உலகம் உங்களுக்குளும் வெளியேயும் ஒரு மிகப் பெரிய சக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் இந்த மாபெரும் சக்தியின் ஒரு கூறு அவ்வளவுதான்.

இதை விட்டு நீங்கள் வெளியேற முடியாது.

உலகத்தில் இருந்து எடுத்து உலகத்திற்கே தருகிறீர்கள். இது தான் உங்கள்  வேலை.

இதில் - நான் தான் பெரிய மனிதன், நான் செய்கிறேன், என்னால் தான் முடியும் என்கிற  எண்ணம் எங்கிருந்து வந்தது ?

எதைச் செய்தாலும் அந்த சக்தி, அந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு என்ற நினைவோடு  செய்யுங்கள்.

அந்த நினைவு வரும்போது, "நான் என்ன செய்து விட்டேன்" என்ற அடக்கம் வரும்.

அது வரும்போது, கர்மாவின் பலனில் பற்று  இருக்காது.

ஒரு இரயில் வண்டியில் பயணம் செய்கிறீர்கள். போய் சேரும் இடம் வந்தவுடன்  இறங்கிக்  கொள்கிறீர்கள்.அந்த வண்டியை ஓட்டிய ஓட்டுனர், "உங்களை  இங்கே பத்திரமாக கொண்டு வந்து விட்டேனே...ஒரு நன்றி தெரிவிக்கக் கூடாதா  " என்று உங்களிடம் கேட்பது இல்லை.

ஏன் ?

இரயில் வண்டி, அந்த  நிறுவனம், பயணச் சீட்டு, அவர் சம்பளம் என்று எல்லாம் ஒரு   பெரிய இயக்கமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் ஒரு  அங்கம் அவ்வளவுதான்.

அது போல நீங்கள் என்ன செய்தாலும், இந்த மாபெரும் சக்தியில் நீங்களும் ஒரு  அங்கம் என்று  நினைத்தால், செய்யும் செயல்களில் ஒரு அர்பணிப்பு தானாகவே  வரும்.




1 comment:

  1. I like this
    அது போல நீங்கள் என்ன செய்தாலும், இந்த மாபெரும் சக்தியில் நீங்களும் ஒரு அங்கம் என்று நினைத்தால், செய்யும் செயல்களில் ஒரு அர்பணிப்பு தானாகவே வரும்.

    ReplyDelete