Monday, April 28, 2014

கீதை - 9.34 - எண்ணங்களே வாழ்கை

கீதை - 9.34 - எண்ணங்களே வாழ்கை 


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥९- ३४॥

மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: || 9- 34||


மந் மநா பவ = மனதை என்னில் நிறுத்தி
மத் பக்த = பக்தியை எனக்காக்கி
மத்³யாஜீ = என்னை தொழு 
மாம் நமஸ்குரு = என்னை வணங்கு
மாம் = என்னை
எவ = முழுவதும்
எஸ்யாசி = என்னை அடைவாய்
யுக்த்வ = முழுவதும் நிலை நிறுத்தி
எவம் = அப்படியாக
ஆத்மாநம் = நீ
மத்பராயண = என்னிடம் பக்தி கொண்டு



மனத்தை என்னில் நிலை நிறுத்தி, பக்தியை எனக்காக  ஆக்கி,  என்னை தொழுது, என்னை அடைக்கலாமாகக் கொண்டால், என்னை அடைவாய் 


நாம் எதை எப்போதும் நினைக்கிறோமோ அதையே அடைவோம்.

நம் நினைவுகள், நம் எண்ணங்கள் நம்மை செயல்பட தூண்டுகின்றன.

ஒன்றை மனதில் நினைக்காமல் நாம் அதை செய்ய முடியாது.

நம் வாழ்கை முழுவதும் நம் எண்ணங்களால் செயல்படுத்தப்  படுகிறது.

நம் வாழ்க்கை என்பது நம் எண்ணங்கள்தான்.

அப்படி என்றால் நம் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் ? எதன் மேல் இருக்க வேண்டும் ?

கண்ணன் சொல்கிறான், உங்கள் எண்ணங்கள் மிக உயர்ந்ததாக இருக்கட்டும்.  அப்படி இருந்தால்  நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

சரி, உயர்ந்தது என்றால் என்ன என்ற கேள்வி வரும்.

எது உயர்ந்தது ?

என்னை நினை. என்னை அடைவாய் என்கிறான்.

நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இறை நிலையை அடைய வேண்டும் என்றால் இறை நிலையில் இருப்பவர்களை, நினைக்க வேண்டும், அவர்கள் மேல் பக்தி கொள்ள வேண்டும், அவர்களை வணங்க வேண்டும்.

மனம் போல் மாங்கல்யம் என்று சொல்வார்களே அது போல.

உங்கள் மனம் எதை விரும்புகிறது, எதை பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறது, எதை அடைய நினைக்கிறது என்று பாருங்கள்.

எண்ணங்களை மாற்றுங்கள், வாழ்கை  மாறும்.

1 comment: