Sunday, April 20, 2014

கீதை - 9.29 - பக்தி என்றால் என்ன, அதன் விளைவு என்ன ?

கீதை - 9.29 - பக்தி என்றால் என்ன, அதன் விளைவு என்ன ?


समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥९- २९॥

ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்³வேஷ்யோஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் || 9- 29||

ஸமோ = சமமாக 
அஹம் = நான் 
ஸர்வபூதேஷு = அனைத்து உயிர்களுக்கும் 
ந = ஒருவரும் இல்லை 
மே = எனக்கு 
த்³வேஷ்யோ = பகைவர்கள் 
அஸ்தி   ப்ரிய: = நண்பர்கள்  
யே = எவர் 
பஜந்தி = தொழுகிறார்களோ 
து = ஆனால் 
மாம் = என்னை 
பக்த்யா = பக்தியுடன் 
மயி  = என்னுள் இருக்கிறார்கள் 
தே = அப்படி பட்டவர்களில் 
தேஷு  = அவர்களில் 
சா = மேலும் 
அபி = நிச்சயமாக 
அஹம் = நான் 



நான் அனைத்து உயிர்களுக்கும் சமமானவன் . எனக்கு நண்பர்களும் இல்லை  பகைவர்களும் இல்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர்களில் நான் இருக்கிறேன், என்னில் அவர்கள் இருக்கிறார்கள். 


நட்பு, பகை, நல்லவன், கெட்டவன் , உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் நம் மனதைப் பொருத்தது. 

இன்று நட்பாய் இருப்பவன் நாளை பகைவனாகத் தெரியலாம். 

மாற்றம் அவனில் இல்லை. உங்களில் இருக்கிறது. 

உலகை நாம் எப்போதும் பிரித்துக் கொண்டே இருக்கிறோம். 

வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், நல்லவர்கள்,கெட்டவர்கள் என்று உலகை  நாம்  ஒவ்வொரு நாளும் ிரித்துக் கொண்டே இருக்கிறோம். 

நாம் வெளியே உலகை பிரிக்கும் போது உள்ளுக்குள்ளும் நம் மனம் பிரிந்து   போகிறது. 

நட்பு என்றால் ஒரு மாதிரி  பழகுகிறோம்.

நட்பு இல்லை என்றால் இன்னொரு மாதிரி. 

இப்படி வெளி உலகை நாம் பிரிக்கும்போது உள் உலகும்  பிரிகிறது. மனச் சிதைவு ஏற்படுகிறது. 

 மாறாக, வெளியே உலகம் சேரும்போது நம் மனமும் ஒன்று படுகிறது. 

 வேற்றுமைகள் குறையக் குறைய மனம்  .ஒருமைப்  படும்.

ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் என்பார் மணிவாசகர்.

சரி,எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை என்று சொன்ன கண்ணன், அடுத்த  வரியில் என்னை அன்போடு பூஜை செய்பவர்களுக்குள் நான் இருக்கிறேன், என்னில்  அவர்கள் இருக்கிறார்கள் என்கிறான். 

அப்படி என்றால் அன்பு செலுத்துபவர்கள், பக்தி செலுத்துபவர்கள் மற்றும் பக்தி செலுத்தாதவர்கள்  என்ற வேறுபாடு வந்து விடுகிறதே ?

பக்தி என்பதற்கு சமர்பித்த/அர்பணித்த  சிந்தனை என்பது ஒரு பொருள். ஒரு காரியத்தில், ஒரு எண்ணத்தில் முழுவதுமாக ஒன்றி விடும்போது நான் என்ற எண்ணம் மறைந்து  போகிறது. 

பக்தி என்பது நான் என்ற எண்ணம் இல்லாமல் கரைவது.

கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே
அயல்மாண்ட டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

"மற்றுள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்ட வா பாடி தெள்ளேணம் கொட்டாமோ "

என்று பாடுகிறார் மணிவாசகர். 

நான் என்பது மறையும் போது நீங்கள் உலகோடு ஒன்றாகக் கலக்கிறீர்கள். என்னுள்  அவனும், அவனுள் நானும் இருக்கிறேன் என்று சொல்லுவது,  வேற்றுமைகள்  மறைந்த ஒரு இறை நிலை. 

தன்னை மறக்கும் போது , உங்கள் மனதில் இறைவன் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இறைவன் மனதில் நீங்கள் இருப்பீர்கள். 

உங்களுக்கும் இறைவனுக்கும், அல்லது இறை நிலைக்கும் நடுவில் இருப்பது  நான் என்ற எண்ணம். பக்தியில் அகந்தை கரைகிறது. 

நான் என்ற அகந்தை மறையும் போது நீங்கள் வேறு உலகம் வேறு அல்ல என்ற  நிலை தோன்றும். 

மிக மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சுலோகம். 



1 comment:

  1. This what I want in life தன்னை மறக்கும் போது , உங்கள் மனதில் இறைவன் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இறைவன் மனதில் நீங்கள் இருப்பீர்கள்.

    ReplyDelete