Friday, April 4, 2014

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும்

கீதை - 9.20 - யாகமும் சொர்கமும் 


त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥९- २०॥

த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||


த்ரை வித்³யா = மூன்று வித்தைகள்.  இதை மூன்று வேதங்களை அறிந்தவர்கள் என்று பொருள்  சொல்கிறார்கள்.ஏன் மூன்று வேதங்கள், ஏன் நாலாவது வேதம் இல்லை ?

மாம் = என்னை

ஸோமபா:  = சோம பானம் அருந்தி

பூத = தூய்மை அடைந்து

பாபா = பாவங்களில் இருந்து

யஜ்ஞை = வேள்விகளில்

இஷ்ட்வா = வணங்கி

ஸ்வர்க³திம் = சுவர்க + கதி = விண்ணுலக வழி 

ப்ரார்த²யந்தே = பணிவுடன் 

தே = அவர்கள்

புண்யம் = புண்ணியம்

ஆஸாத்³ய = அடைகிறார்கள்

ஸுரேந்த்³ர = இந்திரனின்

லோக = உலகம்

அ ஸ்²நந்தி = அனுபவிக்கிறார்கள்

தி³வ்யா = வானுலக

தி³வி = சொர்கத்தை

தே³வபோ⁴கா³ந்  = தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்


சோம பானம் அருந்தி,  பாவம் அகன்றோர் , மூன்று வித்தைகளை (வேதங்களை ?) அறிந்தோர், என்னை வேள்விகளால் வணங்கி வான் உலகைத் தர வேண்டுகின்றனர் . அவர்கள்,  புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து வானுலகில்  திவ்யமான தேவ போகங்களைத் அனுபவிக்கிறார்கள்.

சோம பானம் அருந்தி - இந்த சொற்றொடர் மிகுந்த சர்ச்சைக்குள்ளான ஒன்று. கீதை  "தண்ணி" அடிக்கச் சொல்கிறது. அந்த காலத்தில் முனிவர்கள் "சோம பானம் " குடித்தார்கள். குடிப்பது பாவம் இல்லை. சொல்லப் போனால் அது ஒரு பிரசாதம். என்றெல்லாம் மக்கள் சொல்லத் தலைப் பட்டார்கள்.

தகுதி இல்லாதவனுக்கு உயர்ந்த விஷயங்களை சொல்லக் கூடாது. சொன்னால் அவன்  அதை கீழ்மை படுத்துவான். உயர்ந்த விஷயங்களை தன்னுடைய  கீழ் நிலைக்கு கொண்டு வருவான் என்று நம் முன்னவர்கள் சொல்லி இருந்தார்கள்.

அந்த காலத்தில் உயர்ந்த விஷயங்கள் எல்லோருக்கும் சொல்லப் படுவது இல்லை. அது குலம் பற்றியது இல்லை. தகுதி பற்றியது.

நீண்ட யாகங்கள் செய்த பின், யாக குண்டத்தின் அனலின் முன்னாள் நீண்ட நேரம் இருந்த பின் , யாகம் முடிவுற்றும் நேரத்தில் சோம பானம் என்ற அந்த   பானத்தை  சிறிது உட்கொள்வார்கள் - ஒரு பிரசாதம் மாதிரி.

சோம பானம் அருந்தி என்றால், யாகம் நிறைவு பெற்றது என்று பொருள்.

இன்றைய வழக்கில் சொல்வது என்றால், "தட்சிணை வாங்கிச் சென்றார்கள் " என்று சொல்லலாம். தட்சிணை வாங்கிச் சென்றார்கள் என்றால் செய்ய வேண்டிய  சடங்குகளை நல்ல விதமாக செய்து முடித்தார்கள் என்று பொருளே தவிர, தட்சிணை வாங்குவது மட்டும்தான் அதன் அர்த்தம் அல்ல.

இங்கே நாம் பார்க்க வேண்டியது, சோம பானம் அருந்துவதைப் பற்றி அல்ல. பின் என்ன  நடந்தது என்பது தான்.

"தூய்மை அடைந்து" "பாவங்களில் இருந்து விலகி" : இந்த இரண்டும் நிகழ்கிறது.  சோம பானம் ஒரு போதைப் பொருள் என்றால் எவ்வாறு தூய்மை  அடைவது ? எவ்வாறு பாவங்களில் இருந்து விலகுவது ?

மேலும்

"வேள்விகள் மூலம்" : எனவே வேள்வியின் முடிவில் சோம பானம் அருந்தி, தூய்மை  அடைந்து, பாவங்களில் இருந்து விலகி என்று நாம் அறிய முடியும்.

யார் இவற்றைச் செய்கிறார்கள்: மூன்று வித்தைகளில் விற்பனர்கள். அவர்கள் படித்தவர்கள். அறிஞர்கள். அவர்களுக்குத் தெரியாதது அல்ல.

எதற்காக வேள்வி செய்கிறார்கள்: சொர்க்கம் வேண்டும், வானுலகம் வேண்டும், தேவ போகங்கள் வேண்டும் என்று வேள்வி செய்கிறார்கள்.

இது என்ன கீதை வேறு வழியில் செல்வது போல இருக்கிறதே ?

கர்ம யோகம், ஞானயோகம், பக்தி யோகம் என்று சொல்லிக் கொண்டு வந்த கீதை  இப்போது என்னடா என்றால் பூஜை, புனஸ்காரங்களில் இறங்கி விட்டதே.

யாகம் செய்தால் இந்திர உலகம் கிடைக்கும் என்றால் எதற்கு கஷ்டப் பட்டு  கர்ம யோகம்  செய்ய வேண்டும், எதற்கு பக்தி செய்ய வேண்டும், எதற்கு ஞானத்தை  தேடி அலைய வேண்டும் ?

சில பல யாகங்களை செய்து பலனை அடைந்து  விடலாமே.இது மிக மிக எளிமையான  வழியாக இருக்கிறதே என்று மக்கள் நினைக்கலாம்.

நினைப்பார்கள்.

கீதையை முழுமையாக படிக்காமல் , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில  ஸ்லோகங்களை படித்து விட்டு, சில சமயம் ஒரு சில வார்த்தைகளை  படித்து விட்டு, இது தான் கீதை சொல்கிறது என்று செய்யத் தலைப் பட்டு விடுகிறார்கள்.  அது தவறு.

இந்த யாகம், பூஜை, இவற்றைப் பற்று கீதை என்ன சொல்கிறது என்று அடுத்த  ஸ்லோகத்தில்  மேலும் சிந்திப்போம்.


3 comments:

  1. RS I like this lines .....Nr ( avoid worh like அந்த காலத்தில் no need Just remove this and read it looks much better )

    உயர்ந்த விஷயங்கள் எல்லோருக்கும் சொல்லப் படுவது இல்லை. அது குலம் பற்றியது இல்லை. தகுதி பற்றியது.

    ReplyDelete
  2. There is a reason. Today, Gita is available in the internet. Today everything is available to everybody. In those days, it was not given to everybody. Do you agree ? Is my writing correct ?

    ReplyDelete
  3. availability is always there it is the interest one has to show to find it out where ever it may be. it is the attitude of the seeker that is most important. Internet is just a tool

    ReplyDelete