Thursday, March 20, 2014

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள்

கீதை - 9.9 - விருப்பு வெறுப்பு இன்றி காரியம் செய்யுங்கள் 


न च मां तानि कर्माणि निबध्नन्ति धनंजय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥९- ९॥

ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||


ந = இல்லை
ச = மேலும்
மாம் = என்னை
தாநி = அவை எல்லாம்
கர்மாணி = கர்மங்கள்
நி பத்நந்தி = கட்டுப் படுத்துவது இல்லை
த⁴நஞ்ஜய = தனஞ்சய
உதா³ஸீநவத் = பற்றற்று இருப்பதன் மூலம் (உதாசீனப் படுத்துவதன் மூலம்)
அஸீநம் = அமைந்திருக்கிறது 
அஸக்தம் =  கவரப் படாமல் , பற்று இல்லாமால்
தேஷு = அந்த
கர்மஸு = கர்மங்களின்


என்னை வினைகள் கட்டுப் படுத்துவது இல்லை ஏன் என்றால் நான் அவைகளின் மேல் பற்றற்று நடு நிலையோடு இருக்கிறேன். 

வினைகள் எப்போது நம்மை கட்டுப் படுத்துகின்றன ?

நாம் அவற்றின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளும்போது அவை நம்மை கட்டுப்படுத்துகின்றன.

நமக்கு வேண்டும் என்றால் விருப்பு  ஏற்படுகிறது.

வேண்டாம் பிடிக்காது என்றால் வெறுப்பு வருகிறது.

வினைகள் நம்மை ஒன்றும் செய்வது இல்லை. அவற்றின் மேல் உள்ள விருப்பும் வெறுப்பும்  நம்மை பாதிக்கின்றன.

எப்படி ?

எப்போது ஒரு காரியத்தின் மேல் விருப்பு வருகிறது ? அதன் மூலம் நமக்கு ஏதோ ஒரு பலன் கிடைக்கும் என்றால்  அதன் மேல் விருப்பு வருகிறது.

பலன் மேல் நாட்டம் போகும் போது , பலன் அதிகம் கிடைக்க வேண்டுமே என்ற  ஆசை வருகிறது, கிடைக்காதோ என்ற பயம் வருகிறது, மற்றவன் எடுத்துக் கொள்வானோ  என்று பொறாமை வருகிறது....

வெறுப்பு எப்போது வருகிறது ?

அந்த செயலினால் நமக்கு துன்பம் வரும்  என்றால்,ஆபத்து வரும் என்றால், மற்றவர்களுக்கு (நமக்கு வேண்டாதவர்களுக்கு)  பலன் கிடைக்கும் என்றால் வெறுப்பு வருகிறது.

இப்படி விருப்பும், வெறுப்பும் வரும் போது செயலில் நாட்டம்  போகிறது. செயல் செய்வதில்  முனைப்பு போகிறது.

இலாப நட்ட கணக்குகள்  நம்மை அலைக்கழிக்கின்றன. சோர்ந்து போகிறோம்.

விருப்பு வெறுப்பு ஏன் வருகிறது என்றால் , செயலைத் தாண்டி  அது தரும் பலன்கள் மேல் மனம் செல்லும்போது விருப்பு வெறுப்பு வருகிறது.

வேலை முக்கியம் இல்லை - சம்பளம்  முக்கியம்.

சம்பளம் முக்கியம் என்று ஆன பின், அது  எவ்வளவு, எப்போது சம்பள உயர்வு வரும், எப்போது ஊக்கத் தொகை வரும், இந்த மேனேஜர் என்ன செய்யப் போகிறானோ என்று ஆயிரம் கவலைகள் வரும். வேலையில் கவனம் சிதறிப் போகும்.

செயலின் மேல் நாட்டமோ வெறுப்போ இருந்தால், அந்த செயல்கள் நம்மை கட்டுப்   படுத்தும்.அவைகளுக்கு நாம் அடிமைகளாவோம்.

பயமின்றி, ஏக்கம் இன்றி, ஆசை இன்றி, அலைச்சல் இன்றி மிக மிக சுகமாக,   ஒரு  பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , விருப்பு வெறுப்பு இன்றி .காரியம் செய்யுங்கள்.

 "என்னை கட்டுப் படுத்தாது " என்று கண்ணன் சொன்னால் , அது உங்களுக்கும்  பொருந்தும்.

பற்றற்று காரியம்  செய்து பாருங்கள்...காற்றில் மிதக்கும் இறகு போல மனம் லேசாகிப் போகும்.  


No comments:

Post a Comment