Monday, March 17, 2014

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன்

கீதை 9.5 - நான் விளையாட்டாக படைக்கிறேன் 


न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥९- ५॥

ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் | 
பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||

ந = இல்லை
ச = மேலும்
மத்ஸ்தா²நி = என்னில்
பூ⁴தாநி = அனைத்தும்
பஸ்²ய மே = பார்
யோக³மைஸ்²வரம்  = ஈஸ்வரத் தன்மையுடைய யோக
பூ⁴தப்⁴ருந் = பூதங்களை தாங்குபவன் 
ந = இல்லை
ச = மேலும்
பூ⁴தஸ்தோ = உயிர்களில் நிலை  பெற்று
மமா = நான் 
ஆத்மா = ஆத்மா
 பூ⁴தபா⁴வந:  =  பூதங்களின் இயற்கையை உருவாக்குபவன்

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் என்னில் நிலைத்து இருப்பது இல்லை. என்னுடைய லீலையில், எல்லா உயிர்களையும் நான் வெளிப் படுத்துகிறேன். என்னுள் அவை இருக்கின்றன. அவைகளில் நான் இல்லை.


வடிவங்களும் பெயர்களும் இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா ?

பொருள்களின் (உயிர்களின்) பெயரும், வடிவங்களும்  மாறிக் கொண்டே இருக்கின்றன.

வடிவங்களையும், பெயரையும் தாண்டி அவற்றிற்கு பின்னால் இருப்பது  ஒன்று தான்.

வெவ்வேறு விதமான அலைகளைத் தாண்டி கடல் என்ற ஒன்று சாஸ்வதமாக இருக்கிறது.

மேஜை,நாற்காலி, சன்னல் என்ற வடிவங்களைத் தாண்டி மரம் சாஸ்வதமாக இருக்கிறது.

மோதிரம், வளையல் என்ற இவற்றைத் தாண்டி தங்கம் என்ற ஒன்று நிரந்தரமாக இருக்கிறது.

அப்படி பார்க்கும் போது இந்த உலகம் ஏதோ ஒன்றினால் ஆக்கப் பட்டு இருக்கிறது. அது எல்லாவற்றிலும் இருக்கிறது. அதில் இவை எல்லாம் இல்லை.

இது வரை சரிதானே ?

பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சேர்வதும், பிரிவதும், பின் சேர்வதும் என்று தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஏன் இப்படி மாறுகின்றன ? ஒரே மாதிரி இருக்க வேண்டியது தானே ?

இந்த உலகம் எப்படி தோன்றியது என்று அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி  பதில்  தரும். சரியா தவறா என்பது வேறு விஷயம். ஏதோ ஒரு பதில் இருக்கிறது.

ஆனால் ? ஏன் இந்த உலகம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் கிடையாது.

இறைவன் உலகைப் படைத்தான் என்று சமயம் சாதிக்கும்.

ஏன் படைத்தான் என்ற கேள்விக்கு விடை கிடையாது.

அது ஒரு விளையாட்டு, லீலை அவ்வளவுதான்.

எந்த ஒரு விளையாட்டைப் பார்த்தாலும் நமக்கு வேடிக்கையாக இருக்கும்.

ஒருவன் பந்தைப் போடுவான், ஒருவன் அடிப்பான், ஒருவன் பிடிப்பான், மற்றவன் ஓடுவான்...எதற்கு இது எல்லாம் என்று கேட்டால் ....அது தான் விளையாட்டு.

அதற்கு ஒரு காரணமும் கிடையாது.

இந்த உலகும், இதில் உள்ள பொருள்களின் தோற்றமும், மறைவும் ஒரு காரணமும் இன்றி நடக்கின்றன.


பொருள்கள் வெளிப்படுகின்றன.  அது ஒரு லீலை.

சரி, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன ?

இருக்கிறதே....

என் லீலையில் , மிகச் சரியாக சொல்வது என்றால், "ஈஸ்வர தன்மையுள்ள யோகத்தினால்" நான் பொருள்களை வெளிப் படுத்துகிறேன்.

இதன் உள் அர்த்தம் - பொருள்களும், சம்பவங்களும் காரணம் இன்றி நிகழ்கின்றன.

கிருஷ்ணன், பொருள்களை இன்ன காரணத்திற்காக நான் வெளிப் படுத்துகிறேன்  என்று சொல்ல வில்லை. அவனுடைய ஏதோ ஒரு தன்மையால் வெளிப் படுத்துகிறான். அவ்வளவுதான்.

விதி என்றும், காரணம் என்றும் ஒன்றைத் தேடித் திரியத் தேவை இல்லை.

எல்லாம் விளையாட்டாக நடக்கிறது.

"அலகிலா விளையாட்டு உடையாரவர் ,தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே "


1 comment:

  1. We need not have to worry for anything he will take care ...Nr

    ReplyDelete