Tuesday, March 18, 2014

கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும்

கீதை - 9.6 - காற்றும் ஆகாயமும் 


यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥९- ६॥

யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் | 
ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||

யதா² = இது போல்
அகாஸ²ஸ்தி²தோ = ஆகாயத்தில் இருப்பது போல்
நித்யம் = எப்போதும்

வாயு: = காற்று
ஸர்வத்ரகோ = எங்கும் வீசுவது போல 
மஹாந் = உயர்ந்த
ததா² = அது போல
ஸர்வாணி பூ⁴தாநி = அனைத்து உயிர்களிலும்
மத்ஸ்தா²நீ = என்னுள் இருக்கின்றன
இதி = இதை
யுபதா⁴ரய = அறிந்து கொள்ள முயல்

எங்கும் வீசும் காற்று எப்படி வானில் நிலைத்து இருக்கிறதோ, அது போல பொருள்கள் என்னில் நிலைத்து இருக்கின்றன.

"என்னில் அவை இருக்கின்றன, அவற்றில் நான் இல்லை " என்று முந்தைய ஸ்லோகத்தில்  பார்த்தோம்.

அது எப்படி என்ற குழப்பம் நமக்கு ஏற்படுவது இயல்பு.

 இந்த ஸ்லோகத்தில் அது     விளக்கப்படுகிறது.

காற்று எங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.  காற்றைத் தாண்டி ஆகாயம் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது. காற்றில் ஆகாயம் இல்லை. ஆகாயம் மிகவும் பறந்து பட்டது. எல்லை இல்லாதது. தோற்றமும் முடிவும் இல்லாதது.

காற்று அதன் ஒரு பகுதி. காற்று இல்லாத இடமும் உண்டு. ஆகாயம் இல்லாத இடம் இல்லை.


ஆகாயதிற்குள் காற்று அடங்கி இருக்கிறது.

ஒன்றைப் பார்க்கும் போது நமக்கு இரண்டு விதமான எண்ணங்கள் வரும்.

முதலாவது, நாம் காணும்  அந்தப் பொருள் எவ்வவற்றின் தொகுதி  ?

இரண்டாவது, நாம் காணும் அந்தப் பொருள் எதன் பகுதி ?

 காற்று அசையும் போது வானம் அசைவது இல்லை. காற்று என்ன தான் செய்தாலும் வானம் அப்படியே அசையாமல் இருக்கிறது.

ஆகாயதிற்குள் காற்று இருக்கிறது.

ஆனால் காற்று ஆகாயத்தை கட்டுப் படுத்துவது இல்லை.

காற்றின் குணம்  வேறு.ஆகாயத்தின் குணம் வேறு.

அவை என்னில் இருக்கின்றன. நான் அவற்றில் இல்லை.

காற்று இன்று இருக்கும். நாளை இல்லாமல் போகும். ஆகாயம் என்றும் ஒரே மாதிரி இருக்கும்.

பொருள்கள் குணங்களால் ஆனவை.

குணங்கள் மனதால், அறிவால் அறியப்  படுகின்றன.

அறிவையும் மனதையும் கட்டுப் படுத்துபவன் நான்.

 ,எனவே, பொருள்கள் என்னில் நிலை பெற்று இருக்கின்றன.











No comments:

Post a Comment