Thursday, March 27, 2014

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன - பாகம் 2

கீதை - 9.14 - பக்தி என்றால் என்ன  - பாகம் 2

கீதை - 9.14 - பக்தியும் அதன் வளர்ச்சியும் - பாகம் 2


सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||

ஸததம்  = எப்போதும்
கீர்தயந்தோ  = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா:  = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்

கீர்த்தனைகளை பாடிக் கொண்டு, எப்போதும், பெரு முயற்சியுடன் , திட சித்தத்துடன், என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள். 

இது பக்தி யோகம்.

பக்தி பற்றி கிருஷ்ணன் சொல்கிறான்.

எது பக்தி, பக்தி எப்படி  படுகிறது, என்று இந்த ஸ்லோகத்தில் ஆழமாக விவரிக்கிறான்.

மேலும் சிந்திப்போம்...

---பாகம் 2 ------------------

பக்தியின் பரிணாம வளர்ச்சியை பற்றி  சொல்கிறது இந்த சுலோகம்.

"கீர்த்தனைகள் பாடிக் கொண்டு " : பக்தியின் தொடக்கம் கீர்த்தனை, பஜனை , பூஜை, புனஸ்காரம் என்று ஆர்பாட்டமாக  இருக்கும்.மணி அடிப்பது, மேளம் அடிப்பது, பாட்டு பாடுவது இவை எல்லாம் அதன் முதல்  படி.ஆரவாரம் இருக்கும்.  பெரும்பாலனவர்கள்  இது தான் பக்தி என்று நினைத்து அதோடு நின்று விடுகிறார்கள். "நான் ஒரு நாளைக்கு மூன்று முறை பூஜை செய்கிறேன், வெள்ளி சனி  என்றால் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன், ஒரு பஜனை, கதா கலாட்சேபம்  விடுவது கிடையாது ...." என்று பெரிய பட்டியல் வைத்து இருப்பார்கள். அது முடிவு அல்ல....அதையும் தாண்டி போக  வேண்டும்.

"எப்போதும்": பக்தி என்பது ஏதோ காலையில்  ,கொஞ்ச நேரம், மாலையில் கொஞ்ச நேரம்,  மற்ற படி நாளு கிழமைகளில் பொங்கல் வைப்பது, சுண்டல் வைப்பது, விரதம் இருப்பது  என்று ஒரு வேலை மாதிரி இருக்கக் கூடாது. பக்தி என்பது எப்போதும்  மனதில் இருக்க வேண்டும். அது எப்படி இருக்கும் ?

 "பெரு முயற்சியுடன் , திட சித்ததுடன்" : பக்தி செய்வது என்பது சாதாரண  விஷயம்  இல்லை. பாட்டு பாடுவதும், நைவேத்தியம் செய்வதும் பக்தி அல்ல. அதற்கு பெரு முயற்சி வேண்டும். திட சித்தம் வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு விஷயங்கள் மிக மிக முக்கியமானவை

என்னை வணங்கி, என்னை வழி படுகிறார்கள் :  அது என்ன வணங்கி பின் வழிபடுதல் ?

வணங்குதல் என்று சொல்லும் போது , வணங்கப் படும் பொருள் நம்மை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதை நாம் வணங்குவோம். அதன் மேல் மதிப்பும் மரியாதையும் வேண்டும்.

வழி படுதல் என்றால் அதன் வழியில் செல்லுதல்.  வழியைப் பின் பற்றுதல், வழியைத்  தொடர்தல், வழியில் செல்லுதல் என்று பொருள்.

ஒரு வணங்கத்தக்க வழியைக் கண்டு பெரு முயற்சியுடனும், திட மனத்துடனும், அதன்  வழியில் செல்லுதல் என்பது இந்த ஸ்லோகத்தின் அறிவுரை.

நீங்கள் எதை உயர்வாகக் கொள்கிறீர்களோ, எதை புனிதமாகக் கொள்கிறீர்களோ அதன் வழியில்  செல்லுதல் எப்போது செல்வது என்பது பக்தி, வழிபாடு.

அது மனிதர்களாக  இருக்கலாம்,. கொள்கைகளாக இருக்கலாம், நீங்கள் நம்பும் தெய்வங்களாக இருக்கலாம் .... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

எதன் வழியில் செல்கிறீர்களோ, அது உங்கள் பக்தி , அது உங்கள் வழிபாடு.

உடனே, சில பேர்  கேட்கலாம்,நான் திருட்டு வழியில் செல்கிறேன், கொலை கொள்ளை  என்ற அதர்ம வழியில் செல்கிறேன்...அதுவும் பக்தி, வழிபாடா என்று.

 அவர்களுக்கு ஒரு கேள்வி ...

நீங்கள் அதை எல்லோரிடமும் சொல்வீர்களா (கீர்த்தனம் ?). நாம் திருடிச் சேர்த்தது இந்த சொத்து  என்று எல்லோரிடமும் சொல்ல முடியுமா ?

திருடன் கூட அவன் செயலை நியாயப் படுத்துவானே தவிர அது உயர்ந்த செயல் என்று  அதை வணங்க மாட்டான். தன் பிள்ளை அந்தத் துறையில் வர வேண்டும் என்று  விரும்ப மாட்டான்.

எனவே அவற்றை விட்டு விடுவோம்.

பக்தி என்பது உயர்ந்த, சிறந்த, புனிதமான (வணங்கத்தக்க) வழியை தேர்ந்தெடுத்து, திட மனதுடன், விடா முயற்சியுடன், எப்போதும் அந்த வழியில் செல்வது.

யோசியுங்கள்....எது உங்கள் வழி என்று...உங்கள் பக்தி என்று, உங்கள் வழி பாடு என்று....

அந்த சிந்தனை உங்களை வழி நடத்தும்.

2 comments:

  1. I like the way in which you conclude. Leaving the most of the decision to the reader.
    we can only share knowledge. Decision / choice is for the readers to make.

    ReplyDelete
  2. "என்னை" என்ற சொல்லை விளக்காமல் விட்டுவிட்டாய்!

    ஆனால் அருமையான உரை. நன்றி.

    ReplyDelete