Monday, March 17, 2014

கீதை - 9.4 - என்னில் அவைகளும், அவற்றில் நானும்

கீதை - 9.4 - என்னில்   அவைகளும், அவற்றில் நானும் 


मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥९- ४॥

மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா | 
மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||

மயா = என்னால்
ததம் = சூழப்பட்டு இருக்கிறது, நிறைந்து இருக்கிறது
இதம் = இந்த
ஸர்வம் = அனைத்து
ஜகத் = உலகம் 
அவ்யக்த மூர்திநா = வெளிப்படாதா வடிவில்  
மத்ஸ்தா²நி = என்னில்
ஸர்வபூ⁴தாநி = அனைத்து உயிர்களும் 
 ந  = இல்லை
சா = மேலும்
ஹம் = நான்
தேஷ் = அவைகளில்
வவஸ்தி²த: = நிலை பெற்று

வெளிப்படாத வகையில் நான் இந்த உலகை சூழ்ந்து இருக்கிறேன். அனைத்திலும் நான் இருக்கிறேன். என்னில் அவைகள் இல்லை.


மேஜை, நாற்காலி, கதவு, ஜன்னல் என்று எத்தனையோ மரச் சாமான்கள் மரத்தில் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பயன் பாடு இருக்கிறது.

எல்லாம் வேறு வேறு மாதிரி இருந்தாலும், இவை அனைத்தும் மரத்தில் இருந்து வெளிப் பட்டவை என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

அத்தனை மரச் சாமான்களும் மரத்தில் இருந்து வெளிப் படுகின்றன. வெளிப் படுவதற்கு  முன்னால் அவை வெளிப் படாமல் இருக்கின்றன.

வெளிப்பட்ட பின் வடிவங்களும் பெயர்களும் மாறிப் போகின்றன.

வெளிப் படுவதற்கு முன்னால் அவை யாவும் மரம் என்றே அறியப் படுகிறது.

அது போல,

எத்தனையோ உயிர்கள், உயிர் அற்றவை என்று இருக்கின்றன. அவற்றின் பெயரும், வடிவும் வேறு பட்டு இருந்தாலும், அவை அவ்வாறு வெளிப்படுமுன் ஏதோ ஒன்றில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது அல்லவா ?


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

அடுத்து, "என்னில் அவை இருக்கின்றன, அவைகளில் நான் இல்லை"

அது எப்படி ?

இரவில், தூரத்தில் , கொடியில் ஒரு வெள்ளை துணி காற்றில் ஆடுகிறது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது பேய் மாதிரி தெரிகிறது. சற்று கிட்ட போய் பார்த்தால், துணி என்று தெரிகிறது.

பேய் துணியில் இருந்தது.

துணி பேயில் இல்லை.

நாம் பார்க்கும் பலவித வடிவங்கள், பெயர்கள் எல்லாம் அந்த பேய் போல. உண்மை தெரியும் போது , அவை மறைந்து விடுகின்றன. துணி மட்டும் தெரியும்.

எவ்வளவு ஆழகழகான பெண்கள், எத்தனை உணவு வகைகள், இடங்கள், இசை, துணி மணிகள், சாமான்கள் ....அத்தனையும் உண்மையான அறிவு ஏற்படும்போது  எல்லாம் ஒன்றுதான் என்று மறைந்து போகும்.

பொய் தோற்றங்கள் மறையும்.உண்மை வெளிப்படும்.

பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர்.

சிக்கல் என்ன என்றால் நமக்கு எது பொய் எது மெய் என்று தெரியாது.

துணி அல்ல அதன் நிழல் ஆடும் பேய் தான் நிஜம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிழல்களுக்கு பின்னால் உள்ள நிஜத்தை அறிய வேண்டும்.







No comments:

Post a Comment