கீதை - 9.15 - ஞான வேள்வி
ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥९- १५॥
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||
ஜ்ஞாநயஜ்ஞேந = அறிவை வளர்த்து
சா = மேலும்
அபி = நிச்சயமாக
அந்யே = மற்றவர்கள்
யஜந்தோ = வேள்வியில்
மாம் = என்னை
உபாஸதே = உபாசிக்கிறார்கள்
|
ஏகத்வேந = ஒன்றாக
ப்ருத²க்த்வேந = இரண்டாக
ப³ஹுதா⁴ = பலவிதமாக
விஸ்²வதோமுக²ம் = உலகம் தழுவிய ஒன்றாக
இதில் மற்றர்வர்கள் யார் ?
பக்தியில் ஈடுபடாதவர்கள் மற்றவர்கள்....
முந்தைய ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளர்கிறது, பரிணமிக்கிறது என்று பார்த்தோம். பக்தி என்ற மலர் எப்படி மலர்கிறது என்று பார்த்தோம்.
இந்த ஸ்லோகத்தில் அறிவு, ஞானம் எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.
பக்தி சமயம் சார்ந்தது. பக்தி செய்வதற்கென்று கடவுள் வேண்டும், வழி படும் முறை வேண்டும் ஆனால் ஞானம் அப்படி அல்ல. அது சமய வேறுபாடுகளை கடந்தது. இந்த மதம், இந்த கடவுள் , இந்த வழிபாட்டு முறை என்று கிடையாது.
இது ஞானத்தின் முதல் படி.
ஞானம் எப்படி பரிணமிக்கிறது ?
ஞானம் முதலில் தான் வேறு, மற்றவர்கள் வேறு என்று அறிகிறது. உலகில் உள்ள ஒவ்வொன்றும் தனித் தனி என்று நினைக்கிறது.
வடிவங்களும், பெயர்களும் வேறு வேறு என்று நினைக்கிறது.
அடுத்த கட்டம்.
உலகை இரண்டு கூறாகப் பார்க்கிறது. பார்க்கும் தான், பார்க்கப்படும் வெளி உலகம் என்று இரண்டு கூறாகப் பார்க்கிறது.
பார்ப்பவன், பார்க்கப் படுபவை என்ற இரண்டு கூறுகள்.
Observer and the Observed.
அடுத்த கட்டம்
உலகம் தழுவிய ஒன்றாக - Universal Oneness
அனைத்தும் ஒன்றே என்ற எண்ணம் வருகிறது.
தான் வேறு , உலகம் வேறு என்று தோன்றினாலும் இவை அனைத்தும் ஒன்றே என்று அறிகிறது.
ஒன்றாகி,பலவாகி, உலகம் எங்கும் நிரம்பி நின்றதை அபிராமி பட்டர் இப்படி குறிப்பிடுகிறார்
“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”
ஒன்றாய் அரும்பி,பலவாய் விரிந்து , இவ் உலகம் எங்குமாய் நின்றாள்
இப்படி உலகை , அதில் உள்ள உயிர்களை , பொருட்களை ஒன்றாக காண்பது அறிவினால் முடியும்.
அதுவே ஞான வேள்வி.
அந்த ஞான வழியில் செல்வதும் வழிபாடு தான்.
Good to see difference between Bhakthi and ஞானம்........Nr
ReplyDelete