Saturday, March 29, 2014

கீதை - 9.16 - நானே நான்

கீதை - 9.16 - நானே நான் 


अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥९- १६॥

அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||


அஹம் க்ரது = நான் ஹோமம்
அ ஹம் யஜ்ஞ: = நான் யாகம்
அஹம் ஸ்வதா = நான் ஸ்வதா என்ற மந்திரம்
அஹம் ஔஷதம் = நான் மருந்து
அஹம் மந்த்ர = நான் மந்திரம்
அஹம் = நான்
அஹம் = நான்
எவ = நிச்சயமாக
ஆஜ்யம் = நெய்
அஹம் = நான்
அக்னி = நெருப்பு
அஹம் = நான்
ஹுதம் = அவி


நான் ஹோமம். நான் யாகம். நான் ஸ்வதா என்ற மந்திரம். நான் மருந்து. நான் நெய்; நான் தீ; நான் அவி.நான் நானே.


எல்லாம் ஒன்றுதான்.

பெயரும் வடிவங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

இந்த செய்தியை கீதை பல இடங்களில் பல விதமாக சொல்லிக்  காண்பிக்கிறது.

எல்லாம் ஒன்றுதான் என்பதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படி  எதிர்  எதிர் துருவங்கள் ஒன்றாக இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை.

அதை தெளிவாக சொல்லாமல் விட்டு விட்டால் நாம் அந்த சந்தேகத்துடன் எப்போதும்  இருப்போம்.

 வகுப்பில் ஆசிரியர் ஒரு கணித விதியை சொல்லித்  தருவார்.பிதாகரஸ் விதி என்று  வைத்துக் கொள்வோம். விதியை சொல்லியாகி விட்டது. அது அனைத்து  வடிவ செங்கோண முக்கோணத்திற்கும் பொருந்துமா என்ற சந்தேகம்  வரும் அல்லவா ?

அந்த சந்தேகத்தை போக்க சில பல செங்கோண முக்கோணங்களை வரைந்து அதன் அளவுகள்  அந்த விதிப்படி இருக்கிறதா என்று சோதித்து அறிவது போல...

இங்கே கிருஷ்ணன் அனைத்தும் ஒன்றே என்ற விதியை ஒவ்வொன்றாக சொல்லிக் காண்பிக்கிறான்.

நானே யாகம். நானே யோமம். நானே மந்திரம். நானே மருந்து. நானே நெய். நானே ஆவி.....என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போனான்.

இப்படி சொல்லிக் கொண்டு போனால் என்று இந்த அட்டவணை முடிவது ?

நானே நான் - என்று எல்லாம் நானே என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த சிக்கல் அபிராமி பட்டருக்கும் வந்தது....

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


தனம் தரும், கல்வி தரும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். இப்படி சொல்லிக் கொண்டு போனால் இது என்று முடிவது....

எனவே "நல்லன எல்லாம் தரும்" என்று சொல்லி  முடிக்கிறார்.

அது போல. அது நான், இது நான் என்று சொல்லிக் கொண்டு வந்த கண்ணன், கடைசியில் நான் நானே என்று சொல்லி முடிக்கிறான். 

இந்த ஸ்லோகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாம். 

இராமாயணத்தில் , விஸ்வாமித்திரன் யாகம் செய்ய இராம இலக்குவனர்களை காவல் வைத்தான். 

என்ன பைத்தியகாரத்தனம்.

யாருக்காக யாகம் செய்கிறானோ அவர்களை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போய் யாகம் செய்கிறான். 

காலமும் கணக்கும்  நீத்த காரணன் வெளியே நிற்கிறான். 

அது அறியாமையின் உச்சம். 

அது போல 

யாகமும், அதில் உள்ள ஹோம நெருப்பும்,  அதில் விடும் நெய்யும் நானே என்கிறான் கண்ணன். பின் எதற்கு ஹோமமும், யாகமும் ?

நேரே அவனையே அடைந்து விடலாமே ?

இந்த  பூஜைகளும்,மற்ற சடங்குகளும் ஏன் ?

சிந்திப்போம். 




No comments:

Post a Comment