Sunday, March 16, 2014

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில்

கீதை - 9.3 - பாகம் 2 - தர்மத்தின் வழியில் 


अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥

அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||


அ - ஸ்ரத்த - தாநா: =  சிரத்தை இல்லாத 
புருஷா = மனிதர்கள்
தர்மஸ்யாஸ்ய = தர்மத்தின் பால்
பரந்தப  = எதிரிகளை அழிப்பவனே
அப்ராப்ய = அடையாமல்
மாம் = என்னை
நிவர்தந்தே =  மீண்டு வருகிறார்கள்
ம்ருத்யு = இறந்து
ஸம்ஸார = சம்சார
வர்த்மநி = பாதையில் , வழியில்

தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடையாமல் , மீண்டும் மீண்டும் இறந்து இந்த சம்சாரத்தில் கிடந்து உழல்கிறார்கள்.

மிக ஆழமான சுலோகம். பகுதி பகுதியாக பிரித்து சிந்திப்போம்.

"தர்மத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்": தர்மம் என்றால் என்ன ? எளிமையான விளக்கம் தர்மம் என்றால் இயற்கை, இயல்பு. நாம் நம் இயற்கையை மறந்து போகிறோம். நாம் யார் என்று நாம் அறியாமல் இருக்கிறோம். நான் யார், என் தகுதி என்ன, என் திறமைகள் என்ன, எது எனக்கு இயல்பாக வரும் என்று அறியாமல் கிடந்து துன்பப் படுகிறோம்.

ஒரு குழந்தைக்கு கணிதம் சரியாக வராமல் இருக்கலாம். அது அதன் இயற்கை.  நாம், விடுவது இல்லை. அது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றே  தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதனால் அந்த குழந்தையும் துன்பப் படும், பெற்றோரும் துன்பப் படுவார்கள்.

பிள்ளைகளை விடுங்கள். நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்யும் எல்லா காரியமும்  நம் விருப்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் அமைந்ததா ? இல்லையே. ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் வேறு எதையோ செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை அல்லாதது தர்மம் அல்லாதது. அது அதர்மம். உங்கள் இயற்கைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அது அதர்மம்.

சரி, இந்த இயற்கையை எப்படி அறிந்து கொள்வது ?

நான் பாடகனா ? மருத்துவனா ? படம் வரைவதில் வல்லவனா ? நிதித்துறையா ? பொறியியல் துறையா ?

ஆயிரக்கணக்கில் துறைகள் இருக்கின்றன. நான், என் இயற்கையை எப்படி கண்டு பிடிப்பது  ? பின் அதில் எப்படி செல்வது ?

கீதை அதற்கும் வழி காட்டுகிறது.

மேலும் சிந்திப்போம்.


------------------------------------------------------------------------------------------------------------

தர்மம் என்றால் இயற்கை, இயல்பு என்று பார்த்தோம். எது இயற்கை, எது இயல்பு என்று எப்படி அறிவது.

திருடுவது, கொலை செய்வது, எனக்கு இயற்கை என்றால் அதை நான் செய்யலாமா ? அதைத்தான் கீதை சொல்கிறதா ?

அப்ராப்ய மாம்: என்னை அடையாமல்

என்னை அடையாமல் என்றால் கிருஷ்ணனை சென்று அடைவது என்று அர்த்தம் கொள்வதை விட, எனக்குள் இருக்கும் என்னை அடையாமல் என்று கொள்ளலாம்.

நான் யார் என்று அறியும் போது , என் இயற்கை , என் இயல்பு எது என்றும் அறிய  முடியும். ஒரு வேளை அப்படி தன்னை அறியும் முயற்சியில் ஒருவன் தான் ஒரு   திருடன் , பொய்யன் என்று அறிவான் என்றால், அது தான்  அவன் தர்மம்.  அவன் அந்த வழியில் சென்று தான் முன்னேற முடியும்.


தன் இயற்கை இல்லாத ஒன்றை செய்பவன் அதர்ம வழியில் போகிறான். அப்படி போபவன் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவான்.

அப்படி என்றால் என்ன ?

அவனால் மேலும் மேலும் முன்னேற முடியாது.

மோக்ஷம், விடுதலை...அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

என்னை (தன்னை) அறிபவன், தன்  தர்மத்தை அறிகிறான்.
தன் தர்மத்தை அறிபவன், அதன் வழியில் செல்கிறான்.
தர்மத்தின் வழியில் செல்பவன், மேலும் மேலும் உயர்கிறான்.


தன்னை அறியாமல், தன் தர்மத்தை அறியாமல் வாழ்கையை நடத்திச் செல்பவன் வாழ்வில் முன்னேறாமல் தடுமாறிக் கொண்டிருப்பான்.

வால்மீகி திருடனாக இருந்தார்
கண்ணப்பன் வேடனாக இருந்தார்
அருணகிரி பெண் பித்தராக இருந்தார்

அந்த வழி அவர்களை மிகப் பெரிய நிலைக்கு உயர்த்தியது.

அதற்காக எல்லோரும் திருடனாக வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உங்கள் தர்மத்தை செய்யுங்கள்.

மீண்டும் தொடக்கத்திற்கு போவோம்.

அர்ஜுனன் தன் தர்மத்தை செய்யத் தயங்குகிறான்.

தர்மத்தை செய் என்பது கண்ணனின் உபதேசம்.

தர்மம் உங்களை காக்கும். தர்மம், உங்களை உயர்த்தும்.






1 comment:

  1. By following Dharma , will help us to over come any kind of hardship

    ReplyDelete