Friday, March 21, 2014

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம்

கீதை - 9.10 - இயற்கை மற்றும் அனுபவம் 


मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥९- १०॥

மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||

மயா= என்
அ த்⁴யக்ஷேண = மேற்பார்வையில் 
ப்ரக்ருதி:  = இயற்கையில்
ஸூயதே = வெளிப் படுகிறது
ஸ = இரண்டும்
சராசரம் = நகர்வதும், நகராததும் 
ஹேதுநா = காரணத்தால்
அநேந = இந்த
 கௌந்தேய  = குந்தி புத்திரனே
ஜக³த்³ = உலகம்
விபரிவர்ததே = வேலை செய்கிறது


என் மேற்பார்வையில் அசைவனவும் அசையாததும் இயற்கையில் உண்டாகிறது. இதனால் இந்த உலகம் இயங்குகிறது. 

நிதானமாக ஆராய வேண்டிய சுலோகம்.

உலகம் அனைத்தையும் ஒன்றாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லுவது ? அசைவன, மற்றும் அசையாதன என்று கூறும் போது உலகம் அனைத்தும் அதில் வந்து விடுகிறது.

இந்த அசையும் மற்றும் அசையாத பொருள்கள் என்ன ஆகின்றன ?

இவை இரண்டு காரியங்களை செய்கின்றன.

ஒன்று , இவை உருவாகின்றன.

இரண்டாவது, அவை இயங்குகின்றன.

இப்படி அசைவன மற்றும் அசையாதவை ,  உருவாகி,இயங்கக் காரணம்  என்ன?

ஒன்று இயற்கை, இன்னொன்று என் மேற்பார்வை.

ஒன்று பொருள்களின் இயற்கை, இன்னொன்று நாம் அதை அறிந்து கொள்ளும் விதம் இவை இரண்டும் சேர்ந்து இந்த உலகை உருவாகவும் இயங்கவும் காரணமாக இருக்கின்றன.

Subjective and Objective இவை இரண்டும் கலந்ததுதான் உலகம்.

பொருள்களும், பொருள்களோடு சேர்ந்த நம் அனுபவமும் சேர்ந்ததுதான் உலகம்.

நம் அனுபவம் இல்லாமல் பொருள்களும் உயிர்களும் முழுமை பெறுவது இல்லை.

சற்று குழப்பமாக இருக்கலாம்.

சில  உதாரணம் மூலம் பார்ப்போம்.....

ஒரு இருக்கிறாள்....

அவளை ஒருவர்  மகள்  .என்கிறார்

மற்றொருவர் மனைவி என்கிறார்

மற்றொருவர் தாய் என்கிறார்

இன்னும் ஒருவர் பாட்டி என்கிறார்.....

அவள் யார் ?

பெண் என்பது அவள் இயற்கை.

மகள், மனைவி, தாய், பாட்டி என்பது எல்லாம் பார்பவர்களின் அனுபவம்.

இப்படி இந்த உலகம் இயற்கை மற்றும் தனி மனித அனுபவக் கலவையால் உருவாகிறது.

சரி, அப்படியே இருக்கட்டும்....அதனால் என்ன ?

நமக்கு விருப்பும், வெறுப்பும் ஏன் வருகிறது ?

ஏன் என்றால், மற்ற உயிர்களும், பொருள்களும் நமக்கு வெளியே நாம் இன்றி தனியாக இருப்பதாய் நினைக்கிறோம். அதனால் அவற்றின் மேல் நமக்கு விருப்பும், வெறுப்பும் வருகிறது.

வெளியில் உள்ள அனைத்தும் நம்மால் உருவானவை என்று அறிய வேண்டும்.

அப்படி அறியும் போது அவை உருவாகவும், இயங்கவும் நாமும் ஒரு காரணம் என்று உணரத் தலைப் படுவோம்.

இந்த உலகம் படைக்கப் பட்டு இயங்க நீங்களும் ஒரு காரணம்.

நீங்கள் இன்றி இந்த உலகம் இல்லை.

இந்த உலகை படைத்தவர் நீங்கள்.

இந்த உலகின் எஜமானர் நீங்கள். இங்கு உள்ளவகைளுக்கு நீங்கள் அடிமையாகலாமா ?

எதற்கு பயப்படுகிறீர்கள் ?

ஏன் இந்த ஏக்கம் ?

இவை அனைத்தும் உங்களுடையது.

அமைதியாக ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.

வேற்றுமைகள் மறையும். ஆசைகளும், ஏக்கங்களும் கரையும்.

அமைதியும் ஆனந்தமும் பெருகும்.
















No comments:

Post a Comment