கீதை - 9.8 - சலனமும் பிம்பமும்
प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥९- ८॥
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||
ப்ரக்ருதிம்= இயற்கையில்
ஸ்வாம் = என்னில் இருந்து
அவஷ்டப்⁴ய = ஏற்றுக் கொண்டு , உறுதி கொண்டு
விஸ்ருஜாமி = நான் படைக்கிறேன்
புந: புந: | = மீண்டும் மீண்டும்
பூ⁴தக்³ராமம் = உயிர் தொகுதிகளை
இமம் = இவை
க்ருத்ஸ்ம் = மொத்தமாக
அமவஸ²ம் = தன்னிச்சியாக
ப்ரக்ருதே = இயற்கை சக்தியின்
வஸா²த் = வசத்தால் , கட்டுப் பாட்டால்
சற்று குழப்பமான ஒரு சுலோகம்.
இங்கே யார் படைக்கிறார்கள் ? கண்ணனா ? இயற்கையா ?
தன்னிச்சியாக, இயற்கையின் சக்தியின்பால் பட்டு என்றும் வருகிறது.
நான் படைக்கிறேன் என்றும் வருகிறது.
எது சரி ?
இரண்டும் சரிதான்.
எப்படி ?
இதற்கு விளக்கம் பாரதியார் தருகிறார்.
குள்ளச் சாமி என்ற கவிதையில்.
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “அறிந்தேன் என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.
இந்தப் பாட்டிற்கும், கீதை ச்லோகதிற்கும் என்ன சம்பந்தம் ?
சூரியன் இருக்கிறான்.
அதன் பிம்பம் தெளிந்த கிணற்று நீரில் விழுகிறது.
குழம்பிய சாக்கடை நீரிலும் விழுகிறது.
சூரியன் என்ற மிகப் பெரிய சக்தியை நீரில் காண முடியாது.முடியாது. கண் கூசும். சுட்டெரிக்கும்.
அதன் தன்மையை நீரில் தெரியும் அதன் பிம்பத்தில் பார்க்கலாம்.
அது போல இங்குள்ள அனைத்தும் ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு.
பிம்பம் தெரிவது நீரின் இயற்கையால் .
அந்த பிம்பம் தெரியக் காரணமாய் இருப்பது சூரியன்.
நீங்களும், நானும், இவரும் , அவரும் எல்லோரும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு. அதை நாம் பிரதி பலித்துக் கொண்டு இருக்கிறோம்.
சூரியன் ஒன்றுதான். பிம்பங்கள் வெவ்வேறாகத் தெரியும் - நீர் நிலையின் தன்மையினால்.
ரமண மகரிஷி போன்றோரில் இருந்து வெளிப்படும் ஆற்றலும் , உங்களுக்குள் இருந்து வெளிப்படும் ஆற்றலும் ஒன்றேதான்.
ஒன்று தெளிந்த , அமைதியான நீர் நிலை.
இன்னொன்று கலங்கிய , குழம்பிய , சலனம் உள்ள நீர் நிலை.
சூரியனைக் கேட்டால் அது என்ன சொல்லும் ? அந்த பிம்பங்களுக்குக் காரணம் நான்தான். என் ஆற்றலால, ஒளியால் அவை தோன்றுகின்றன என்று சொல்லும்.
பின் ஏன் வேறு பட்டிருகிறது என்று கேட்டால் , அது நீர் நிலையின் இயற்கையை பொறுத்து அமையும் என்று சொல்லும்.
மீண்டும் மீண்டும் என்னை வெளிப் படுத்துகிறேன் என்று கிருஷ்ணன் கூறுவதன் அர்த்தம் என்ன என்றால் ...நீர்ப் பரப்பில், சலனம் வருகிறது. பிம்பம் கலைந்து போகிறது.
சலனம் குறைந்து தெளிவு வருகிறது....பிம்பம் சரியாக வெளிப் படுகிறது...மீண்டும் சலனம்......
அந்த மாபெரும் சக்தி உங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றால், முதலில் சலனம் குறைய வேண்டும், கொந்தளிப்பு குறைய வேண்டும், அமைதி வந்து சேர வேண்டும்....
உங்களை தயார் பண்ணுங்கள். மனதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஸ்தித ப்ரஞ்ஞனாய், சலனம் அற்று இருங்கள்.
அளவற்ற சக்தி உங்கள் மூலமும் வெளிப்படும்.
I like these lines
ReplyDeleteஅந்த மாபெரும் சக்தி உங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றால், முதலில் சலனம் குறைய வேண்டும், கொந்தளிப்பு குறைய வேண்டும், அமைதி வந்து சேர வேண்டும்....
உங்களை தயார் பண்ணுங்கள். மனதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஸ்தித ப்ரஞ்ஞனாய், சலனம் அற்று இருங்கள்.
How to identify i'm peace with myself ....Nr
Simple breathing exercise will do a world of good in calming once mind .......Nr
ReplyDelete