Wednesday, July 30, 2014

கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும்

 கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும் 


भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥११- २॥

ப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||

ப⁴வாப்யயௌ = தோற்றமும் மறைவும். தோற்றம் என்று சொல்வதை விட இருத்தல் என்று  சொல்லலாம்.பு என்றால் இருத்தல். பாவ என்றால் existence .

ஹி = உறுதியாக

பூதாநாம் = உயிர்களின்

ஸ்ருதௌ = கேட்கப்பட்டது. ஸ்ருதி கேட்டல், கவனித்தல்

விஸ்தரஸோ = விரிவாக

 மயா  = என்னால்

த்வத்த:= உன்னிடம் இருந்து

கமலபத்ராக்ஷ = தாமரை போன்ற கண்களை உள்ளவனே

மாஹாத்ம்யம் =  பெருமை, மகிமை 

அபி =  இருந்தும் 

 சா = மேலும் 

அவ்யயம் = மாறாத

உயிர்களின் இருக்கும் நிலையம், அவை மறையும் தன்மை பற்றியும் விரிவாகக் கேட்டேன் .  தாமரையிதழ் போன்ற விழிகளை உடையவனே 
உன் முடிவற்ற பெருமையைக் கேட்டேன் .

உயிர்கள் எவ்வாறு தோன்றுகின்றன, எப்படி மறைகின்றன என்று  இதுவரை சொல்லப் பட்டது.

அதாவது, கர்ம யோகம், ஞான யோகம், விபூதி யோகம், விஷாத யோகம் என்ற இவை எல்லாம் சொல்லுவது ஒன்றைத்தான் - உயிர்களின் தோற்றமும் மறைவும்.

தோற்றம் என்று கூறுவதை விட உயிர்களின் இருப்பு என்பது சரியாக இருக்கும். உயிர்கள் எவ்வாறு  வாழ்கின்றன அல்லது வாழ வேண்டும் என்று இதுவரை  கூறப் பட்டது.

மீண்டும் மீண்டும் அர்ஜுனன் சொல்வது எல்லாம் ஒன்றுதான் "கேட்டேன்" என்ற  ஒன்றைத்தான்.

"பார்க்கவில்லை". என் கண்ணால் நான் அவற்றை பார்க்க வில்லை. ஏதோ நீ சொன்னாய்  கேட்டுக் கொண்டேன். அது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதால் நம்புகிறேன் ஆனால் அது என் அனுபவம்  இல்லை என்று சொல்கிறான்.

கண்ணனே சொன்ன பிறகும், அர்ஜுனனக்கு நம்பிக்கை  வரவில்லை.

ஆனால், நம் அர்ஜுனர்களுக்கோ, கண்ணன் என்ன கண்டவர்கள் சொல்வதில் எல்லாம் நம்பிக்கை.

 அர்ஜுனனின் சந்தேகம் தீர வில்லை. அவன் கேள்வி கேட்க்கிறான். சந்தேகம் போகவில்லை  என்கிறான்.அவன் தேடல் தொடர்கிறது.

அந்த தேடலினால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.

"கண்ணா, உன்னை நம்புகிறேன். நீ சொல்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று  " அர்ஜுனன் சொல்லி இருந்தால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்திருக்காது.

அவன் நம்பவில்லை. கேள்வி கேட்டுக்  கொண்டிருந்தான். எனக்கு காண்பி. நான் பார்த்தால் தான்  நம்புவேன் என்று அடம் பிடித்தான்.

விஸ்வரூப தரிசனம் உங்களுக்கும் வேண்டுமா ? அர்ஜுனன்  காட்டிய வழியில்  செல்லுங்கள். அது கீதை காட்டிய வழி.

உங்கள் சொந்த அனுபவம் வரும் வரை எதையும் நம்பாதீர்கள்.

உங்களின் விடாத தேடல், சந்தேகம், விஸ்வரூப தரிசனத்தை உங்களுக்குத் தரும்.

உங்கள் நம்பிக்கை அல்ல - உங்களின் நம்பிக்கை இன்மை - உங்களுக்கு உண்மையின் தரிசனத்தை தரும்.



No comments:

Post a Comment