Tuesday, July 15, 2014

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1



दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥१०- ३८॥

த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||

த³ண்டோ³ த³மயதாமஸ்மி = ஆள்பவரிடம் நான் செங்கோல் (தண்டம்)

நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம்  = வெற்றியை விரும்புவோர் இடத்தில் நீதி நான்

மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் = மௌனம் நான் இரகசியங்களில் 

ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் = ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான்


அரசு செலுத்துவோரில் செங்கோல் நான். வெற்றியை விரும்புவோரில் நீதி நான். இரகசியங்களில் மௌனம் நான். ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான். 

இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும், உயிருக்கும் பின்னால் ஏதோ ஒரு  தனித் தன்மை இருக்கிறது. அந்தத் தனித்தன்மை இருப்பதால் தான் அது அதுவாக இருக்கிறது. கடினமாக இருப்பதால் இரும்பு இரும்பாக இருக்கிறது. அதுவே  மென்மையாக இருந்தால் அதை இரும்பு என்று சொல்ல மாட்டோம்.

அது போல, ஒவ்வொரு உயிருக்கு பின்னாலும் ஏதோ சிறப்பு, தனித் தன்மை இருக்கிறது. பாடும் திறமை, ஆடும் திறமை, திருடும் தன்மை, கொலை செய்யும் தன்மை , கணக்குப் போடும் திறமை என்று ஏதோ ஒன்று இருக்கிறது.

 இவை அனைத்தும்  ஒரு சக்தியின் வெளிப்பாடு. அந்த சக்தி நான் என்கிறான்   கண்ணன்.

அதையே சற்று நீட்டித்து யோசித்தால் "நான்" என்று சொல்லக் கூடியது எது ? எது நான் ?  இந்த உடலா ? உயிரா ? என் ஞாபகங்களா ? எது எனது தனித் தன்மையோ  அந்த தனித் தன்மையின் தொகுதி நான். அது உடலின் வடிவாக இருக்கலாம், படிப்பாக இருக்காலாம், திறமையாக இருக்கலாம்...இவை  அனைத்தின்  தொகுதிதான் தான் நான்.

ஆள்வோரில் செங்கோல் நான்.

 அரசன், அவனுடைய உருவம்,  குரல், தோரணை, பிறப்பு எல்லாம் அவனை  அரசனாக்க   முடியாது. செங்கோல் என்பது அரசின்  சின்னம். அரசர்கள் மாறலாம்.  ஆட்சி செலுத்தும் செங்கோல் ஒன்று தான். செங்கோல் தான் அரசனுக்கு அதிகாரத்தைத்  தருகிறது.

இன்று அரச முறைகள்  இல்லை. ஜனநாயகம் வந்து  விட்டது. செங்கோல் என்பதிற்கு பதில்  பதவி என்று  சொல்லலாம். ஆட்சி செய்வோரில் பதவி நான்.  பதவி இல்லாவிட்டால் ஆட்சி செய்ய முடியாது. அது போல, நான் என்பது என்  தனிக் குணங்களின்  தொகுப்பு. அவை  இல்லாவிட்டால் நான் இல்லை.

அரசன் என்பவன் தான் என்ற உடல் என்று நினைக்கக் கூடாது  அரசு என்பது ஒரு ஆள்  அல்ல. அது ஆட்சி செய்யும்  முறை. நீதி நெறி வழுவாமல் கோலோச்சும் முறை.

உங்கள் தனித் தன்மைகளை மாற்றும் போது நீங்கள் மாறுகிறீர்கள்.

கீதையை முழுவதும் படித்து உணர்ந்த பின் நீங்கள் புது ஆள்.

உங்கள் அனுபவங்களால், படிப்பால், நீங்கள் நாளும் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள்.  ஒரு நாளில் இருந்து மற்றொரு நாளுக்கு இடையில் உள்ள  மாற்றம்  மிக மிகக் குறைவாக இருபதால் அது உங்களுக்குத் தெரிவதில்லை. ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் நிகழும் மாற்றங்கள் உங்களுக்குப்  புரிய  வரலாம்.

உங்கள் உணவு பழக்கத்தை ஒரு வருடத்திற்கு மாற்றிப் பாருங்கள், மாற்றம் தெரியும்.

நீங்கள் மாறிப் போவீர்கள்.

 என்ன அர்த்தம் ...?

நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். நான் இப்படித்தான் என்று எதுவும் இல்லை.  நீங்கள் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் நல்லவர்களாக மாற முடியும்.

உங்கள் தனித் தன்மைகளை பட்டியல்  போடுங்கள்.

நல்லவற்றை வைத்துக்  கொள்ளுங்கள்.

அல்லாதவற்றை என்ன செய்வது என்று முடிவு  பண்ணுங்கள்.

பட்டியலில் இல்லாததில் எதைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு பண்ணுங்கள்.

உங்களை நீங்கள் மாற்றலாம்.




No comments:

Post a Comment