Sunday, July 6, 2014

கீதை - 10.34 - பிறப்பு, மரணம் நான்

கீதை - 10.34 - பிறப்பு, மரணம் நான் 


मृत्युः सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम् ।
कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा ॥१०- ३४॥

ம்ருத்யு: ஸர்வஹரஸ்²சாஹமுத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா || 10- 34||

ம்ருத்யு: = மரணம்
ஸர்வஹரஸ்²சாஹ = அனைத்தையும் அழிக்கும்
முத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |  = எதிர்க்காலத்தில் பிறக்கும் பிறப்பு நான்
கீர்தி: = புகழ்
ஸ்ரீர்வாக்ச = உயர்ந்த பேச்சு 
நாரீணாம் = பெண் குணங்களில்
ஸ்ம்ருதி = நினைவு
மேதா⁴ த் = மேதமை
ருதி: = ஸ்திதி 
க்ஷமா = மன்னித்தல் , பொறுமை



மரணமும் , பிறப்பும் நான்.
பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை .இவை அனைத்தும் நான்.

முதலில் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் வியாசர்.

பிறப்பிலும், வாழும் போதும் மக்களுக்கிடையே எத்தனையோ வேறுபாடுகள், மாற்றங்கள்  , ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் சமம்தான்  என்று கூறினால் ஏற்றுக் கொள்வது கடினம். எப்படி  எல்லோரும்  சமமாக முடியும் என்று கேள்வி வரும்.

மரணம் எல்லோரையும் சமப் படுத்து கிறது.  ஞானியும், அசடனும் ஒன்றாகிற இடம் மரணம். பணக்காரனும், ஏழையும் சமமாகிற இடம் மரணம். அனைத்தையும்  ஒரு புள்ளியில் சேர்க்கும் இடம் மரணம்.  எனவே அங்கிருந்து  ஆரம்பிக்கிறார்.

எல்லாம் ஒரு புள்ளியில் முடிகிறது. எல்லாம் மக்கி மண்ணாகிப் போகிறது. இறைவன் என்பது  அவ்வளவுதானா ? எல்லாவற்றையும் இறக்கப் பண்ணுகிறவன் அவ்வளவுதானா என்றால் இல்லை. அடுத்த வரியில் சொல்கிறார்....

எதிர்க்காலத்தில் பிறப்பும் நானே.....

பிறப்பில் வேறுபாடு தெரியும். இருப்பினும், அவை யாவும் ஒன்றாக இறந்த பின் அதில் இருந்து தோன்றிய ஒன்று  என்ற எண்ணம் வரும்போது அதில் உள்ள  வேற்றுமைகள் தெரியாது.

பாண்டங்கள் வேறு வேறு களிமண் ஒன்றுதான்.

நகைகள் வேறு வேறு தங்கம் ஒன்றுதான்

அலைகள் வேறு வேறு கடல் ஒன்றுதான்.

பெண் குணங்களில் நான் நினைவு, வாக்கு, மேதமை,  ஞாபகம், உறுதி, பொறுமை.

இவை ஏன் பெண்மை குணங்கள் ? ஏன் ஆணுக்கு இருக்கக் கூடாதா அல்லது இருக்காதா ?

இருக்கலாம்.

இவை பெண்ணில் இருக்கும்போது மேலும் அழகு பெறுகின்றன.

ஒரு பெண் புஜ பல வலிமையோடு இருந்தாள் என்று சொன்னால் அவ்வளவு சிறப்பாக   இருக்காது. வலிமையையும், வீரமும் ஆணின் குணங்களாக நாம் நினைக்கிறோம்.

ஞாபகம், மேதமை , உறுதி, பொறுமை என்ற இந்த உயர்ந்த குணங்களை பெண்களின் குணங்கள் என்று பெண்மையை மேன்மை படுத்துகிறார் வியாசர்.

கீதை பெண்ணடிமையை போதிக்கிறது என்ற வாதம் இங்கே அடிபட்டுப் போகிறது.

இந்த குணங்களில் பெண்ணில் இருக்கும்போது இவை மேலும் சிறப்புப் பெறுகின்றன. எப்படி ?

பெண் தோற்றுவிப்பவள் . பெண் பாதுகாத்து வளர்ப்பவள். இந்த குணங்கள் அவளிடம்  இருந்தால் அவை மென்மேலும் பெருகும் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.

இப்படி அதில் அது நான், இதில் இது நான் என்று அடுக்கிக் கொண்டே போகிறான்  கண்ணன்.

இந்த பட்டியல் முடியாது. கண்ணன் என்ன சொல்ல வருகிறான் ?

இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது.


சிந்திப்போம்.


No comments:

Post a Comment