Wednesday, July 23, 2014

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது 



अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन ।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥१०- ४२॥

அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||

அத = மேலும் 

வா  = அது, அதைப் பற்றி,

ப³ஹுன = பலப் பல 

ஏதேந = அதன் மூலம்

கிம் = எதற்கு ?

ஜ்ஞாதேந = அறிவு, அறிவது

த்வா = நீ

அ ர்ஜுந  = அர்ஜுனா

விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்

அஹம் = நான்

இதம் = இதை

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்

ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து

ஜக³த் = உலகை

அர்ஜுனா, இந்த உலகம் அத்தனையும் என் சக்தியின் ஒரு கூறில் நான் நிலை நிறுத்தி இருக்கிறேன். என்னைப் பற்றிய அறிவு மிக விரிந்து பட்டது. இதை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் 

கடவுள்  யார், அவர் இருக்கிறாரா, இல்லையா, அவர் குணங்கள் என்ன, அவர் மகிமை என்ன, அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. 

இதை எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகிறோம் ? அவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் பேசி நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம் என்றா ? அவரை காக்கா பிடித்து நம்மை தண்டிக்காமல் பார்த்துக் கொள்வதற்கா ? இல்லை  எல்லாவற்றிக்கும் நன்றி சொல்வதற்க்கா ? 

ஏன் இந்த ஆராய்ச்சி ? ஏன் மனிதன் கடவுளைத் தேடிக் கொண்டே இருக்கிறான் ? 

கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறான் ?

கற்பனவும் இனி அமையும் என்றார் மணிவாசகர். வேண்டாம், இந்த ஆராய்ச்சியே  வேண்டாம், இந்த அறிவும் வேண்டாம், இந்த படித்தவர்களும் வேண்டாம் என்றார் அவர்.

சும்மா இரு சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றார் அருணகிரி.தேடுதலை நிறுத்து. சும்மா இரு என்றார் முருகன் அவரிடம். 


ஒரு அத்யாயம் முழுவதும் நீட்டி முழக்கி தன் பெருமையை சொல்லிவிட்டு கடைசியில்  இதை எல்லாம் அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

மேலும் சிந்திப்போம்...



No comments:

Post a Comment