Tuesday, July 8, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம் 
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனித மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. சிலசமயம் நல்லது நினைக்கிறது, சில சமயம் அல்லதையும் நினைக்கிறது. கோபம், காமம், அன்பு, அருள், வெறுப்பு...என்று மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கிறது.

மனத்தின்  நிலைகளை பொதுவாக மூன்று வகையாக பிரித்தார்கள் நம் முன்னோர்கள்.

ரஜோ குணம்
தமோ குணம்
சாத்வீக  குணம்

மனிதனின் அனைத்து மன நிலைகளும் இந்த மூன்று பிரிவில் அடங்கி விடுகிறது. அனைத்து இராகங்களும் ஏழு ஸ்வரங்களில் அடங்கி விடுவது போல.

அது என்ன மூன்று தானா ? மூன்றுக்கு மேல் கிடையாதா ? என்று கேள்வி எழலாம். மிக மிக உன்னிப்பாக கவனித்து மூன்று என்று சொல்லி இருக்கிறார்கள். கேள்வி மூன்றா நான்கா அல்லது அதற்கும் மேலேயா என்பதல்ல. மனித குணம் மாறிக் கொண்டே இருக்கிறது.  மூன்றோ, முப்பதோ அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

மனித குணம் மாறும் இயல்புடையது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது ?

பல காரணங்கள்.

நாம் உண்ணும் உணவு ஒரு முக்கிய காரணம். மது போன்ற போதை ஊட்டும் பொருள்களை  உண்டால் ஒரு குணம் வருகிறது.  அது போல ஒவ்வொரு உணவும் ஒரு  குணத்தை தூண்டும். நீங்கள் உங்கள் உள் உணர்வை கூர்மை  படுத்தி  வைத்துக் கொண்டால் உங்கள் மன நிலை, உங்கள் குணம் எப்படி மாறுகிறது என்று  நீங்கள் அறிய முடியும்.

நான் ரஜோ குணத்தில் இருக்கிறேன், நான் தமோ குணத்தில் இருக்கிறேன் என்று  நீங்கள் அறிய முடியும்.

உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்.

ஒரு காப்பி குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் மனம் மாறுவதை நீங்கள் உணர முடியும்.

சோர்வு நிலை மாறி, உற்சாகம் பிறக்கும்.

உணவைப் போல, கால நிலைகளும் மனிதனின் குணத்தை பாதிக்கின்றன.

அதிகாலையில் சாத்வீகம் உயர்ந்து நிற்கும். காலையில் படிப்பது தெளிவாக மனதில் நிற்கும். மாலையில் ராஜச குணம் உயர்ந்து  நிற்கும். நாள் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வந்தால் உங்கள் குணம்  மாறுவதை நீங்கள் உணர முடியும்.

அதனால் தான் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

சரி, இதற்கும் "மாதங்களில் நான் மார்கழி" என்பதற்கும் என்ன சம்பந்தம்.....

தொடரும்




No comments:

Post a Comment