Friday, May 10, 2013

16. கீதை - நான் யார் ?


கீதை - நான் யார் ?


நாம் சிறு வயது முதலே நம் உடம்பு தான் நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். 

இந்த உடம்போடு சேர்ந்தது எல்லாம் நம்முடையது என்று எண்ணத் தலைப் படுகிறோம். 

என் சட்டை, என் பொம்மை , என் ரிப்பன், என் சிலேட்டு, என் குச்சி, என்று ஆரம்பிக்கிறது. 

பின் என் அம்மா, என் அப்பா, என் வீடு, என் பள்ளி, என் ஆசிரியர், என் நண்பன் என்று விரிகிறது.

அடுத்து, என் சமூகம், என் ஜாதி, என் குலம், என்று எண்ணுகிறோம்.

அதையும் அடுத்து என் ஊர், என் நாடு, என் மதம் என்று நாம் நினைக்கிறோம். 

ஒவ்வொரு முறை நாம் "என்னது" என்று நினைக்கும் போது நம்மை சுற்றி ஒரு வேலி போடுகிறோம். 

என் வீடு. இந்த வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் என்னை சார்ந்தவர்கள். வெளியே இருப்பவர்கள் என்னை சாராதவர்கள் என்று ஒரு சுவர் எழுப்புகிறோம். 

இப்படி நம்மை சுற்றி பற்பல சுவர்களை எழுப்பிக் கொண்டு தனித்து நிற்கிறோம்.

மதம் என்ற சுவர். நாடு என்ற சுவர். வீடு என்ற சுவர். 

ஒரு முறை சுவர் எழுப்பி விட்டால் பின் சுவற்றிற்கு உள்ளே இருப்பவர்களை, இருப்பவைகளை காக்க வேண்டி இருக்கிறது, அதற்காக வெளியே உள்ளவர்களிடம்  சண்டை இட வேண்டி இருக்கிறது. 

சில சமயம் உள்ளே இருப்பவர்கள் வெளியே போய் விடுகிறார்கள், வெளியே இருப்பவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள். 

" என் பையன் ஒரு வேற்று மத பெண்ணை காதலிக்கிறான் .." எங்கே அவள் உள்ளே வந்து விடுவாளோ என்று பயம், அல்லது இவன் வெளியே போய் விடுவானோ என்று பயம். 

இத்தனை பயத்திற்கும், கோபத்திற்கும், சலனத்திர்க்கும், ஆசைக்கும் காரணம் நாம் நம்மை இந்த உடலாக எண்ணுவதால் தான். இந்த உடல் வேறு, அந்த உடல் வேறு என்ற பேதம் வருவதால் இத்தனை குழப்பமும் வருகிறது. 

இந்த உடலைத் தாண்டி நான் என்பதற்கு அர்த்தம் இருக்கிறதா ? நான் என்பது இந்த உடல் மட்டும் தானா ? மாறும் இந்த உடலில் எந்த உடல் நான் ?

மனித மனத்தின் அடிப்படை சித்தாந்தை தொட்டு விளக்குகிறார் வியாசர் இந்த இரண்டாவது அத்யாயத்தில்....

புரிந்து கொள்ள முயல்வோம் ....


No comments:

Post a Comment