Tuesday, April 23, 2013

கீதை - 1.02 - துரியோதனன் படையை பார்வை இடுதல்

கீதை - 1.02 - துரியோதனன் படையை பார்வை இடுதல் 

सञ्जय उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥२॥
ஸஞ்ஜய உவாச
த்³ருஷ்ட்வா து பாண்ட³வாநீகம் வ்யூடம் து³ர்யோதநஸ்ததா³|
ஆசார்யமுபஸங்க³ம்ய ராஜா வசநமப்³ரவீத் ||1-2||


ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்

ததா³ = அப்போது

துர்யோதந = துர்யோதனன்;

வ்யூடம் = வியூகித்து நின்ற

பாண்ட³வாநீகம் = பாண்டவர் படையை;

த்³ருஷ்ட்வா = பார்த்துவிட்டு 

ஆசார்யம் உபஸங்க³ம்ய = ஆச்சாரியனான துரோணரிடம் சென்று

வசனம் = வசனம்

அப்ரவீத் = சொல்லத் தொடங்கினான்;


சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதனன் வியூகத்தில் நின்ற பாண்டவர்கள் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரியரிடம் சென்று சொல்லத் தொடங்கினான்.

துன்பத்தின் முதல் படி, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. 

அவனுக்கு அவ்வளவு இருக்கிறதே, எனக்கு இல்லையே என்று வருந்துவது.

என்னிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது. அதைப் பார்த்து பார்த்து நான் பெருமை கொள்கிறேன். என்ன ஒரு அருமையான வண்டி என்று நண்பர்களிடம் காட்டி பெருமிதம் கொள்கிறேன். சிறிது நாளில், பக்கத்து வீட்டுக்காரன், என்னுடைய வண்டியை விட உயர்ந்த வண்டியை வாங்கிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றிலிருந்து என் வண்டி எனக்கு ஒரு பாரம் தான். "இந்த சனியனை கட்டிக் கொண்டு யார் மாரடிப்பார்கள் " என்று சலித்துக் கொள்வேன். அதே வண்டிதான். அதே நான்தான். இருந்தும் பக்கத்து வீட்டுக்காரன் வண்டி என்னுடையதை விட சிறந்தது என்றால், என் வண்டியின் மதிப்பு குறைந்து போகிறது. அதில் இருந்து பெற்ற இன்பம் போய் , அதுவே துன்பமாகி விடுகிறது.
பொறாமை, அழுக்காறு என்று சொல்வர்கள்.
அழுக்காறு என்று ஒரு பாவி என்பார் வள்ளுவர். 
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,

தீயுழி உய்த்துவிடும்.


நம்மிடம் செல்வம் இருக்கும். ஆனால், அது மற்றவர்களின் செல்வத்தை விட குறைவானது என்று நினைத்து விட்டால், நம் செல்வம் ஒன்றும் இல்லாதது போலத் தோன்றும். "திருச் செற்று" என்பார். செல்வத்தை அழித்து, "தீயுழி உய்த்து விடும்".

என் மனைவி அழகுதான். அடுத்தவன் மனைவி , என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் வந்து விட்டால் "எனக்குன்னு வந்து வாய்ச்சிதே" என்று சலிப்பும் வெறுப்பும் வரும்.

இனிவரும் ஸ்லோகங்களில், யுத்த களத்தில் நடப்பதை நேரடியாக வியாசர் சொல்ல இருக்கிறார்.

கேட்போம்.

http://bhagavatgita.blogspot.in/2013/04/102-to-111.html

No comments:

Post a Comment