Tuesday, March 13, 2018

கீதை - 1.7 - இரு பிறப்பு - புத்துயிர்ப்பு

கீதை - 1.7 - இரு பிறப்பு - புத்துயிர்ப்பு  



अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य सञ्ज्ञार्थं तान्ब्रवीमि ते॥७॥

அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே தாந்நிபோ³த⁴ த்³விஜோத்தம|
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம் தாந்ப்³ரவீமி தே ||1-7||


அஸ்மாகம் = நமது

து = ஆனால்

விஸி²ஷ்டா =விசேஷமான

யே = யார்

தாந் = அவர்கள்

நிபோத = சொல்லப்பட்டது

⁴ த்³விஜோத்தம = துவிஜ + உத்தம = இருமுறை உயர்ந்தவர்

நாயகா = நாயகனே , படை தளபதியே

மம = நமது

ஸைந்யஸ்ய = படைகள்

ஸஞ்ஜ்ஞார்த²ம் = நிலை

தாந் = அவர்கள்

ப் ³ரவீமி = சொல்கிறேன்

 தே = உனக்கு

படைத் தளபதியே, இரு பிறப்பில் உயர்ந்தவரே , குறித்துக் கொள்வதற்காக நமது படையில் உள்ள சிறந்தவர்களை உனக்குச் சொன்னேன் 


இந்த ஸ்லோகத்தில் குறிப்பாக கவனிக்க வேண்டியது "இரு பிறப்பில் உயர்ந்தவரே"

இரு பிறப்பு என்றால் என்ன.

பெரும்பாலானோர்  பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள்.

பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை ஒரே நேர் கோடு போல இருக்கிறது.

பிறப்பு - படிப்பு - வேலை - திருமணம் - பிள்ளைகள் - வயோதிகம் - மரணம்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கும், ஒரு விலங்கின் வாழ்க்கைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

விலங்குகளும் பிறக்கின்றன, வேட்டையாட, புல் மேய, நீர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க படிக்கின்றன , இணையோடு சேர்ந்து குட்டிகளை பெறுகின்றன, வயதாகி இறக்கின்றன.

பிறந்தோம், இறந்தோம் என்று ஒரு வாழ்க்கை.

ஒரு இயந்திர கதியில் வாழ்க்கை வாழ்ந்து முடிந்து விடுகிறது.

ஏன் செய்தோம், எதற்காக செய்தோம், வாழ்வின் நோக்கம் என்ன, எதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது என்றெல்லாம் யோசிப்பது கூட கிடையாது.

வெகு சிலரே, தங்களைத் தான் அறிகிறார்கள்.

அப்படி அறிந்தவர்கள் ஒரு புது வாழ்க்கை பெறுகிறார்கள்.

தாயின் மூலம் பிறப்பது ஒரு பிறவி.

தன்னைத் தான் அறிவது, ஒரு புது பிறவி.

மான் குட்டிகளால் வளர்க்கப்பட்ட சிங்கக் குட்டி, தானும் ஒரு மான் என்றே நினைத்துக் கொள்ளுமாம்.

என்றேனும், இன்னொரு சிங்கத்தை பார்த்தாலோ, அல்லது வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் வந்தாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்வு மூலமோ, அந்த சிங்கக் குட்டி, தான் மான் அல்ல ,தான் ஒரு சிங்கம் என்று உணரலாம்.

அன்று, அந்த சிங்கத்தின் வாயில் இருந்து ஒரு பெரிய கர்ஜனை பிறக்கும்.

மான் , சிங்கமானதை அறிவிக்கும் கர்ஜனை அது.

அது போல, நீங்கள் யார் என்று அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

பன்றி கூட்டத்தில் உள்ள மான் போல, மான் கூட்டத்தில் உள்ள சிங்கம் போல.

உங்களை நீங்கள் அறியும் போது, மீண்டும் ஒரு புது பிறவி எடுத்தது போல உணர்வீர்கள்.

இயேசு பிரான், சிலுவையில் மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுவது ஒரு உருவகம். இறந்த உடல் மீண்டும் உயிர் பெறுவது இல்லை.

இயேசு தன்னை அறிந்தார். அது ஒரு புத்துயிர்ப்பு.

சித்தார்த்தன், புத்தன் ஆனான். அது இரண்டாவது பிறப்பு.

நரேந்திரன் , விவேகானந்தனானான்.

கூட்டுப் புழு , பட்டாம் பூச்சி ஆகும் இரசவாதம்.

பிறந்தோம் - வாழ்ந்தோம் - இறந்தோம் என்று இல்லாமல், நீங்கள் யார் என்று கண்டடையுங்கள்.

ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பது, அந்த பிரசவ வேதனை  சொல்லி மாளாது.

நீங்களே உங்களை மீண்டும் பிரசவிப்பதும் அவ்வளவு வேதனையான விஷயம்தான்.

அதனால் தான் யாரும் அதை செய்வது இல்லை. நமக்கு எதுக்கு அந்த வலி என்று இருந்து விடுகிறார்கள்.

வெகு சிலரே, சிலுவை சுமந்து, காடு மேடெல்லாம் அலைந்து, சாப்பாடு தண்ணி இல்லாமல்  தங்களை தாங்களே தேடி அடைகிறார்கள்.

சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க்கையை ஒரு முறை பின்னோக்கி பாருங்கள். என்ன நடந்தது இதுவரை என்று.

புரியலாம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/17.html




No comments:

Post a Comment