Monday, March 19, 2018

கீதை - 1.13 - பேராசை

கீதை - 1.13 - பேராசை 



ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्॥१३॥


தத: ஸ²ங்கா²ஸ்²ச பே⁴ர்யஸ்²ச பணவாநககோ³முகா²:|
ஸஹஸைவாப்⁴யஹந்யந்த ஸ ஸ²ப்³த³ஸ்துமுலோऽப⁴வத் ||1-13|| =

தத: =அதன் பின்

ஸ²ங்கா²ஸ்² = சங்குகள்

ச = மேலும்

பே⁴ர்யஸ்² = பேரிகைகள்

ச= மேலும்

பணவாநக = முரசுகள்

அவொ ³முகா²:| = துந்துபிகள்

ஸஹஸ  = திடீரென்று

எவ  = அதுவும்

அப்⁴யஹந்யந்த  = பிளிறின

ஸ =  மேலும்

ஸ²ப்³த = சப்தம்

துமுலோ = திமிலோகப் பட்டது

ப⁴வத்  = அங்கு, அப்போது

பீஷ்மர் சங்க நாதம் செய்த பின்னால் , மற்றவர்களும் தங்கள் சங்குகளை ஊதி போர் ஆரம்பித்து விட்டதை அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, பேரிகைகள், முரசுகள், துந்துபிகள் என்று அனைத்தும் முழங்கி ஓர் பேரொலி கேட்டது. 

யுத்தம் தொடங்கி விட்டது. எங்கும் ஒரே சப்தம். முரசுகள், பறைகள் , துந்துபி என்று பேரொலி புறப்பட்டது.

போரை ஆரம்பித்து வைத்தது கௌரவர்கள்.

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் சப்தம்.

சத்தம் பயத்தை போக்குகிறது. Roller Coaster ல் போகும் போது கவனித்தால் தெரியும், அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன்? சத்தம் போட்டால் என்ன ஆகும்? அந்த ஊர்தியின் வேகம் குறையுமா? இல்லை, சத்தம் உண்டாக்கினால் பயம் குறையும். வலி குறையும்.

நோயாளிகளை பார்த்தால் தெரியும், "ஹா, அம்மா, அப்பா, ஐயோ " என்று அனத்திக் கொண்டே இருப்பார்கள். ஏன்?

ஒலி எழுப்பும் போது , வலி குறையும்.

ஒலி எழுப்பும் போது , பயம் குறையும்.

யுத்தப் பறை, யுத்தத்தின் பயத்தைப் போக்கி, ஒரு வெறியை கூட்டும்.

ஒலி, மனித மனத்தை பல விதங்களில் பாதிக்கும்.

அரட்டை அடிப்பது ஒரு விதத்தில் ஒலி உண்டாக்குவதுதான். அர்த்தம் அற்ற பேச்சு. ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. அதை மறைக்க இந்த அரட்டை. தனியே இருக்கப் பயம். நம்மை கண்டு நாமே பயப்படுகிறோம். நம்மோடு  நாம் இனிமையாக இருக்க முடியவில்லை. நம்மை விட்டு நாமே விலகிப் போக நினைக்கிறோம். நம்மை நாமே சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி சகிப்பார்கள்?

அரட்டை அடிக்கப் போகுமுன், யோசியுங்கள். என்ன பயம். எதை கண்டு இந்த ஓட்டம்.

வாழ்க்கை வெறுமையாக இருக்கும். அர்த்தம் இல்லாமல் போய் கொண்டிருக்கும். அந்த வெறுமையை கண்டு பயம், வெறுப்பு. அதை மறைக்க  அரட்டை.

அரட்டை என்றால் நேரில் சென்றுதான் பேச வேண்டும் என்று இல்லை. Whatsapp போன்ற மென் பொருள்கள் (software ) மூலம் அரட்டை தொடரலாம். மனம் பேசிக்கொண்டே இருக்கும் , மற்றவர்கள் எதிரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு.

நம்மை விட்டு விலகிப் போய் கொண்டே இருக்கிறோம். திரும்பி வர வேண்டும். தைரியமாக நம்மை நாமே எதிர் கொள்ள வேண்டும்.

பாட்டு, டிவி யில் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டே இருக்கும், இவை எல்லாம் நம்மை நாமே மறுதலிக்கும் முறைகள்.

சிந்திப்போம்.

சங்கநாதம் செய்தால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்லப் போகிறார்கள்.

ஒலி செய்யும் வினோதம்.

அதே ஒலி நம்மை அமைதிப் படுத்தவும் உதவும்.

குயிலும், கோழியும், குருகும் , சங்கு சப்தமும் உள்ளே உறங்கிக் கிடக்கும் நம்மை எழுப்பும் என்கிறார் மணிவாசகர்.


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

ஆனைச்சாத்தன் என்ற பறவை எழுப்பும் ஒலி , ஆய்ச்சிகள் தயிர் கடையும் ஓசை, கேசவனை பாடும் ஓசை கேட்கவில்லையா என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

திருப்பாவை படித்துப் பாருங்கள், நெடுக ஒலிக் குறிப்புகள் தான் இருக்கும்.

வெள்ளரவம் ஒலி , நாராயணனே நமக்கே பறை தருவான், என்று ஒலிக் குறிப்பு இருக்கும்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர்.

ஓம் என்ற ஒலிக் குறிப்பை பற்றி நமது ஆன்மீக புத்தகங்கள் மிகப் பெரிதாக பேசுகின்றன.

சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/113.html

No comments:

Post a Comment