Sunday, March 11, 2018

கீதை - 1.3 - பாண்டவர்களின் படையைப் பார்

கீதை - 1.03 - பாண்டவர்களின் படையைப் பார் 




पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता॥३॥

பஸ்²யைதாம் பாண்டு³புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³புத்ரேண தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா ||1-3||


பஸ்ய = பார்
ஏதம் = இந்த
பாண்டு = பாண்டவர்களின்
புத்ராணாம் = புத்திரர்களின்
ஆச்சார்ய = ஆச்சாரியரே
மஹதம் = பெரிய, வலிமை மிக்க
சமூம் = படை
வியூடாம் = வியூகம், அணிவகுத்து நிற்கும்
 த்³ருபத³புத்ரேண = துருபதனின் புத்திரனான (த்ரிஷ்டத்துய்மனன்)
தவ = உங்களுடைய
ஸி²ஷ்யேண = சீடனான
தீ⁴மதா = நன்றாக, புத்திசாலித்தனமாக


ஆச்சாரியாரே , உம்முடைய சீடனும், துருபத குமாரனுமான த்ரிஷ்டத்துய்மனன் திறமையாக அணி வகுத்திருக்கும் இந்த பாண்டவ படைகளைப்  பாரும்.

கோபம். பதற்றம். சந்தேகம். நிதானம் இன்மை. தன்னம்பிக்கை இன்மை. துரியோதனின் குணங்கள்.

த்ரோணச்சாரியாரை நம்பி, அவர் திறமையானவர் என்று அறிந்து படை நடத்தும் பொறுப்பை அவரிடம் கொடுத்தாயிற்று. அவருக்குத் தெரியாதா , துருபதன் மகன் வகுத்துள்ள வியூகம்.

துரியோதனின் பதற்றம். எங்கே ஆச்சாரியார் கவனிக்காமல் இருந்து விடுவாரோ என்ற சந்தேகம். தான் அதை கவனித்து விட்டதாக அவரிடம் காட்டிக் கொள்ள வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்ட வேண்டும்.

அது மட்டும் அல்ல, துருபதன் தவம் செய்து , துரோணரை கொல்ல வேண்டும் என்று ஒரு மகனும், துரோணரை கொல்லும் ஒருவனை மருமகனாக அடைய ஒரு மகளையும் பெற்றான். அது த்ரோணருக்கும் தெரியும்.

அதை , இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொல்வதன் மூலம்  துரோணரை கொஞ்சம் மனதளவில் வலுவிழக்கச் செய்கிறான் துரியோதனன்.

"உம்மைக் கொல்ல தவத்தின் மூலம் வந்திருக்கும் அவன் வகுத்த படையைப் பார் "

என்று சொல்லுகிறான்.

பேராசை, மற்றவன் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் மனிதனின் நிம்மதியை குலைக்கிறது.

தர்மன் கேட்டது ஐந்து வீடு.  சரியோ தவறோ, நீதியோ அநீதியோ, தர்மமோ அதர்மமோ, ஐந்து வீடு கொடுத்தால் துரியோதனன் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.

உலகளந்த பெருமாள், பரவாசுதேவன் , ஐந்து வீடு கேட்டான்.

ஊசி முனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்றான் துரியோதனன்.

அந்த கஞ்சத்தனம், உலோப குணம், அவன் குலத்தையே வேரறுத்தது.

கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாம். "அவனுக்கு எதற்கு கொடுக்க வேண்டும்" என்ற முரட்டு பிடிவாதம் துரியோதனனை அழித்தது.

கெட்டவர்களிடம் இருந்தும்  பாடம் படிக்கலாம்.

ஞாயம், சரி, தவறு என்று வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், உறவுகளுக்குள் சற்று விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் , வாழ்க்கை சிறக்கும்.

கீதை முழுவதுமே வாழ்க்கைக்கு உண்டான பாடங்கள்தான்.

படிப்போமே.

http://bhagavatgita.blogspot.in/2018/03/13.html

No comments:

Post a Comment