Thursday, March 10, 2016

கீதை - 14.6 - சத்வ குணம்

கீதை - 14.6 - சத்வ குணம் 

तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥१४- ६॥

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |
ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||

தத்ர = இவற்றுள்

ஸத்த்வம் = சத்வ குணம்

நிர்மலத்வாத் = தூய்மையானது

ப்ரகாஸ²கம் = ஒளி பொருந்தியது

அநாமயம் = ஆரோக்கியமானது


ஸுக= மகிழ்ச்சியானது

ஸங்கேந = இணைக்கக் கூடியது

 ப³த்⁴நாதி = பிணைத்தல்

ஜ்ஞாந = ஞானம்

ஸங்கேந = இணைத்தல்

சா = மேலும்

அநக =  பாவம் அற்றவனே ( அர்ஜுனா )


அவற்றுள்ளே சத்வம், தூய்மையானது (நிர்மலம்) , ஒளி பொருந்தியது, ஆரோக்கியமானது. பாவங்கள் அற்றவனே அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.


நம் முன்னோர்கள் இந்த குணங்களைப் பற்றி மிக மிக ஆழமாக ஆராய்ந்து இருக்கிறார்கள்.

ஒரு பொருள் ஒளி பொருந்தியதாய் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ? அதன் மேல்   விழும் ஒளி சிறப்பாக  , முழுவதுமாக பிரதிபலிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

எப்போது ஒளி நன்றாக பிரதிபலிக்கும் ? எப்போது ஒரு பொருள் அழுக்கு இல்லாமல், கறை இல்லாமல் சுத்தமாக இருக்கிறதோ அப்போது அது ஒளியை நன்றாக  பிரதிபலிக்கும்.

சத்துவ குணம், நிர்மலமானது. கறை அற்றது. எனவே அது ஒளி பொருந்தியது.

ஆரோக்கியமானது - ஆரோக்கியம் என்றால் இங்கே தீமைகள் அற்றது என்று கொள்ளவேண்டும். உலகில் உள்ள அனைத்து தீமைகளும் முதலில் மனதில் பிறக்கின்றன.  பின் செயல் வடிவம் பெறுகின்றது.  சத்துவ குணம் மிகுந்து நிற்கும் போது, மனதில் தீய எண்ணங்கள் வருவது இல்லை.


சத்துவ குணம் உயர்ந்தது தான். இருந்தும் , அது நம்மை இரண்டு வழிகளில் உலகோடு பிணைக்கிறது.

முதலாவது, ஞானத்தின் சேர்க்கையாலும்.

இரந்தாவது, மகிழ்ச்சியின் சேர்க்கையாலும்.

சத்துவ குணம் மேலிடும் போது  ஞானம் பெருகும். ஞானம் பெருகும் போது மகிழ்ச்சி  பெருகும். ஞானத்தை விட உயர்ந்த இன்பம் இருக்கிறதா என்ன ?

படிக்க படிக்க, அறிய அறிய மேலும் மேலும் இன்பம் உண்டாகும்.

அந்த இன்பம், மேலும் படிக்கத் தோன்றும். சந்தோஷமாக இருப்பதால், இதில் தவறு என்ன என்று கூடத் தோன்றும்.

வியாசர் சொல்கிறார், நல்லதே என்றாலும், இதுவும் நம்மை பிணைக்கும், கட்டிப் போடும். முன்பே பார்த்தோம், குணம் என்றால் கட்டுவது என்று பொருள் என்று.


இதை அறிந்துதான், மாணிக்க வாசகர் கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது போதும் என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

ஞானம் என்பது பாதையாகவும் இருக்க வேண்டும், பலனாகவும் இருக்க எண்டும். அது பாதையாக மட்டும் இருந்து விட்டால், அதில் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஊரு வந்து சேராது.

கல்வி என்பது கடல் போன்றது. இன்னும் சொல்லப் போனால், கல்வியின் ஒவ்வொரு பிரிவும் ஒரு கடல் போன்றது. எனவே, மணிவாசகர்

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார்

கல்வி என்ற பல கடல்களை தாண்டிப் பிழைத்து வந்தேன் என்கிறார்.

இன்னும் மற்ற குணங்களையும் பற்றி  பார்ப்போம்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/146.html )








No comments:

Post a Comment