Thursday, March 24, 2016

கீதை - 14.20 - இறவா நிலை அடைய

கீதை - 14.20 - இறவா நிலை அடைய 


गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥१४- २०॥

கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்பவாந் |
ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே || 14- 20||


கு³ணா = குணங்களை

எதத் = அவைகளை

அதீத்ய = தாண்டி

த்ரீந் = மூன்று

தேஹீ  = தேகத்தை உடையவன்

தேஹ ஸமுத் பவாந் = உடலில் இருந்து பிறக்கும்

ஜந்ம = பிறப்பு

ம்ருத்யு  = இறப்பு

ஜராது =  மூப்பு

துகை²ர் = துக்கம், துன்பம்

விமுக்தோ = விடுதலை அடைகிறான்

அம்ருதம் = அமிர்தம், இறவா நிலையை

அஸ்நுதே = அடைகிறான்


இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்டோன்  உடலில் இருந்து பிறக்கும் பிறப்பு, இறப்பு, மூப்பு , வருத்தம் என்பனவற்றில் இருந்து விடுபட்டு இறவா நிலையை அடைவான். 


கீதையை படிக்கும் நிறைய பேர் , எப்படி சாத்வீக குணத்தை அதிகரிப்பது, எப்படி தமோ மற்றும் ரஜோ குணத்தை குறைப்பது என்று சிந்திக்கத் தொடங்கி விடுவது உண்டு.

"என் கிட்ட கொஞ்ச தமோ , ரஜோ குணம் இருக்கு. எப்படியாவது அதில் இருந்து  விடுபடனும்..சாத்வீகம் மட்டும் இருக்கணும். அதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் "

தவறு.

சாத்வீகத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஒரு குணம் மட்டும் தனித்து இருக்க முடியாது. மனிதன் இந்த மூன்றின் கலவைதான். ஒன்று மட்டும் தனித்து  வராது. சாத்வீகம் வேண்டும் என்றால் அது கூடவே மற்ற இரண்டு குணங்களும் வரும்.

சாத்வீகத்தில் மிக உயர்ந்து நின்ற ரிஷிகள், முனிவர்கள் ஒரு கண நேரத்தில் காம வயப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நொடியில் நிதானம் இழந்து கோபம் கொண்டு சபித்து இருக்கிறார்கள். கோபமும் காமமும் எங்கிருந்து வந்தது ? சாத்வீகத்தில் இருந்தா ? இல்லை.

தமோ ரஜோ குணம் கூடவே வரும்.

மூன்று குணங்களில் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தங்கத்தால் செய்து இருந்தாலும் , விலங்கு, விலங்குதானே.

இந்த மூன்று குணங்களில் இருந்தும் விடு பட்டவன் , பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் என்ற  இந்த சுழலில் இருந்து விடுபட்டு, இறவாப் பெரு நிலை அடைவான் என்கிறார் வியாசர்.

எப்படி ?

குப்பை மேட்டின் மேல் அமர்ந்து கொண்டு துர்நாற்றம் வீசுகிறதே என்ன செய்யலாம் என்று  சிந்தித்துக் கொண்டு இருக்கக் கூடாது. துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், குப்பை மேட்டை விட்டு விலகிப் போக வேண்டும்.

குணங்களின் பிடியில் இருக்கும் வரை அவை நம்மை அலைகழிக்கும். அதைச் செய், இதைச் செய்யாதே, அங்கே போ, இங்கே வா என்று நம்மை போட்டி புரட்டி எடுக்கும்.

இவற்றில் இருந்து விடுபட வேண்டும்.

சண்டிக் குதிரையின் மேல் சவாரி செய்வது போலத்தான் இந்த குணங்களை கொண்டு நடப்பது.

குணங்களைத் தாண்டி மேலே போக வேண்டும்.

எப்படி போவது என்று பின்னால் சொல்கிறார்.

மனதில் கொள்ள வேண்டியது என்ன என்றால், மூன்று குணங்களில் இருந்தும் விடுபடவேண்டும்.

சாத்வீகம் அறிவு வேண்டும் அலைகிறது.

ரஜோ குணம் செல்வம் வேண்டும் என்று அலைகிறது.

அலைச்சல் என்னமோ ஒன்று தான். எதற்கு என்பதில் தான் வேறுபாடு.

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார் திருமூலர்.

பொண்ணுக்கு, பொன்னுக்கு , மண்ணுக்கு ஆசைபடுவதற்கும்,
இறைவனை அடைய வேண்டும், பரம பதம் அடைய வேண்டும், சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசைப் படுவதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

எல்லாம் ஆசை தான்.

எனவேதான் கீதை சொல்கிறது, மூன்று குணங்களையும் கடந்து போக வேண்டும் என்று.

சொல்வதோடு நிற்கவில்லை. எப்படி என்றும் சொல்லித் தருகிறது.

கேட்போமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/03/1420.html )

No comments:

Post a Comment