Thursday, March 3, 2016

கீதை - 13.34 - ஞானத்தின் பார்வை

கீதை - 13.34 - ஞானத்தின் பார்வை


क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥१३- ३४॥

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா |
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம்

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ = க்ஷேத்ரம் மாறும் க்ஷேத்ரன்ஞன்

எவம் = அப்படியாக

அந்தரம் = வேறுபாடுகளை

ஜ்ஞாந சக்ஷுஷா = ஞானக் கண்ணால் காண்பார்களோ

பூத ப்ரக்ருதி மோக்ஷம் = பிரக்ரிதியில் இருந்து மோக்ஷம் அடைகிறார்கள்

ச = மேலும்

யே = அவர்கள்

விது= அறிகிறார்கள்

யாந்தி = அடைகிறார்கள்

தே = அவர்கள்

பரம் = உயர் நிலையை


ஞானக் கண்ணால்,  இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்கும் உள்ள வேற்றுமையை  அறிந்தவர்கள் பூதப் பிரக்ருதியில் இருந்து விடுதலை பெற்று  உயர்ந்த நிலையை அடைகின்றனர்.


"க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்கும் உள்ள வேற்றுமையை  அறிந்தவர்கள்"

இது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த வேற்றுமை புரிவதே இல்லை. இரண்டும் ஒன்று என்றே  நாம் நினைப்பதால் தான் பல துன்பங்கள் நிகழ்கின்றன.

எப்படி ?

நீ யார் என்று என்னைக் கேட்டால் , பொதுவாக நான் என்ன சொல்லுவேன் ?

- நான் ஒரு ஆண்
- இந்தியன்
- தமிழன்
- இந்து

இப்படி சில விஷயங்களைச் சொல்லுவேன் அல்லவா ?

இந்தியா என்பது ஒரு நாடு. அதில் நான் வசிக்கிறேன்.  நான் வாழும் நாடு எனக்குள் சேர்ந்து  நான் இந்தியனாகி விடுகிறேன். க்ஷேத்ரம் என்ற இந்தியா, நான் என்ற க்ஷேத்ரன்ஞனோடு ஒன்றாகி விடுகிறது.

வேறுபாடு மறைந்து விடுகிறது.

நான் இது மதக் கொள்கைகளை கடை பிடிக்கிறேன் என்று சொல்வது வேறு, நான் இந்து என்று சொல்வது வேறு.

நாடு, மதம், மொழி, ஜாதி, குலம், என்ற இவை எல்லாம் எனக்கு வெளியே உள்ளவை. நான் அவை அல்ல. அவையும் நானும் ஒன்று அல்ல.

ஒன்றாக நினைப்பதால், வேறு மதத்தைச் சார்ந்தவனை, வேறு நாட்டுக்காரனை கண்டால் ஒரு எதிர்ப்பு உணர்வு வருகிறது.

என் நாட்டை, என் மதத்தை, என் ஜாதியை, என் குலத்தை பற்றி  யாராவது தவறாகச் சொன்னால் எனக்கு கோபம் வருகிறது. அவர்களோடு சண்டைக்குப் போகிறேன்.  கொல்லவும் துணிகிறேன்.

அவர்கள் என்னையே சொல்வதாக நினைக்கிறேன். காரணம் நான் எனக்கும் அவற்றிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது இல்லை.

என்னை ஒருவன் முட்டாள் என்று சொன்னால் கோபம் வருகிறது. காரணம், நான் படித்த , பெற்ற அறிவோடு என்னை சேர்த்துக் கொள்கிறேன். நான் அறிஞன் என்று நினைக்கிறேன். அதற்கு எதிர் கருத்தை யாராவது சொன்னால், ஏற்றுக் கொள்ள என் மனம் மறுக்கிறது.

அத்தனை சங்கிலிகளையும் ஆசை ஆசையாக எடுத்து நம்மை பிணைத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றையும் விட்டு விட்டால் சுதந்திரமாக இருக்கலாம். நான் என்பது இந்த உடல் கூட அல்ல என்றால் ஆண் பெண் வேறுபாடு, தோலின் நிறத்தை கொண்டு வரும் வேறுபாடுகளும் போய் விடும்.

நான் இவற்றை அறிபவன், இவற்றை செலுத்துபவன், இவற்றின் மூலம் அனுபவிப்பவன், ஆனால் இவை நான் இல்லை.

க்ஷேத்ரன்ஞன் , க்ஷேத்ரத்தோடு ஒன்றுவதால் தான் நான் என்ற அகந்தை பிறக்கிறது. படித்தவன், பணக்காரன், அழகானவன், உயர் குலத்தில் பிறந்தவன், வீரன், தீரன், ஆசார சீலன் என்ற எண்ணங்கள் உருவாகிறது. நாளடைவில், அதுவே நாமாகிப் போகிறோம்.

இந்த வேற்றுமையை அறியும் போது நான் வேறு, அவை வேறு என்று அறியும் போது இவை எல்லாம் இல்லாத நான் யார் என்று தெரிய வரும்.

இவை இல்லாத நானும், இவை இல்லாத நீங்களும் ஒன்றுதான் என்ற தெளிவு பிறக்கும். உங்களை என்னில் இருந்து பிரிப்பது நானும், நீங்களும் நம்மைச் சுற்றி உள்ளவைகளோடு நம்மைச் சேர்த்துக் கொள்வதால்.

அவற்றை விட்டு விலகி நின்றால், நாம் ஒன்று சேர்வோம்.

இவை வேறு நான் வேறு என்று நினைத்தால், அவற்றைச் சேர்பதன் மூலம் நான் ஒன்றும் உயரப் போவது இல்லை என்று தெரியும்.

படிப்பு, பணம் என்று சேர்த்து அறிஞன், பணக்காரன் என்ற பட்டங்கள் எல்லாம் வியர்த்தம் என்று தெரியும்.

இதை அறிபவர்கள், உயர் நிலையை அடைவார்கள் என்கிறது கீதை.

அந்த உயர்நிலையை நீங்களும் அடைவீர்கள். கீதை உங்களுக்கு  வழி காட்டும்.

வாழ்த்துக்கள்.

(To read other slogas, visit http://bhagavatgita.blogspot.in/2016/03/1334.html)
















No comments:

Post a Comment