Friday, March 18, 2016

கீதை - 14.14 - சத்வ குணம் ஓங்க என்ன செய்ய வேண்டும்

கீதை - 14.14 - சத்வ குணம் ஓங்க என்ன செய்ய வேண்டும் 

यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥१४- १४॥

யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத் |
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே || 14- 14||


யதா= எப்போது

ஸத்த்வே = சத்வ குணம்

ப்ரவ்ருத்தே = மிகுந்து இருக்கும் போது

து = அப்போது

ப்ரலயம் = முடிவு,

யாதி = சென்று சேர்கிறான்

தேஹப்ருத் = உடலை உடையவன்

ததா = அப்போது

உத்தம விதாம் = உயர்ந்தவற்றை அறிந்தவர்கள், ஞானிகள்

லோகா = உலகை

அமலாந் = எ+ மலம் = குற்றம் இல்லாத, தூய்மையான

ப்ரதிபத்யதே = அடைவார்கள்


சத்வ குணம் உயர்ந்து நிற்கும்போது, முடிவு வந்தால், அவன் குற்றமற்ற உத்தம ஞானிகள் வாழும் உலகை அடைகிறான். 

இதைப் படிக்கும் போது ஏதோ, வாழ் நாள் எல்லாம் சத்துவ குணம் மிகுந்து வாழ்ந்தால், இறந்த பின், ஞானிகள் வாழும் சொர்கத்தை அடைவோம் என்பது போல ஒரு தொனிக்கும்..

அப்படி என்றால், இந்தப் பிறவியில் , சத்துவ குணத்திற்கு ஒரு பலனும் கிடையாதா ? இறந்த பின் ஏதோ ஒரு உலகுக்குப் போகவா இந்தப் பாடு ?

அல்ல.

கீதை, அதைக் கடைப் பிடித்தால் இந்த வாழ்விலேயே அதன் பலன்களைக் காணலாம் என்று சொல்கிறது.

அப்படி என்றால், இந்த சுலோகத்திற்கு என்ன அர்த்தம் ?

நாம் சாத்வீக குணத்தில் எப்போதும் உயர்ந்து நின்றால்,  நாம் வாழ்வில் ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்துக்குப் போகும் போது, நம்மை அறியாமலேயே நாம் நல்லவர்களோடு சேர்ந்து கொள்வோம்.

எப்படி என்று பார்ப்போம்.

ஒரு ஆண் , குழந்தயாக இருக்கிறான், பின் பள்ளி செல்லும் மாணவனாக மாறுகிறான், பின் கல்லூரி செல்லும் வாலிபனாகிறான், பின் வேலைக்குப் போகிறான், காதலன், கணவன், தகப்பன், தாத்தா என்று வாழ்வில் பல கட்டங்களைக் கடக்கிறான்.

பெண்ணும் அப்படியே.

சாத்வீகம் உச்சம் பெற்று இருந்தால், தானாகவே நல்லவர்களின் கூட்டத்தை நோக்கி நகர்வோம்.

நல்ல மாணவர்களின் சேர்கை. நல்ல பள்ளிக் கூடம், நல்ல மார்க், நல்ல கல்லூரி, நல்ல நிறுவனத்தில் வேலை, நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் என்று வாழ்க்கை நல்லவைகளை நோக்கியே நகரும்.

உங்கள் வாழ்க்கையை சற்று பின்னோக்கிப் பாருங்கள்.

சாத்வீகம் உச்சம் பெரும் நேரங்களில், நீங்கள் நல்ல உயர்ந்தவர்களின் பேச்சை கேட்கப் போய் இருப்பீர்கள், நல்ல புத்தகங்களை  வாசிக்கத் தொடங்கி இருப்பீர்கள்.

சாத்வீகம் உச்சம் பெறும்போது மனம் உயர்ந்தவைகளை நோக்கி நகரும்.

சாத்வீகம் , உங்களை நல்லவர்கள்பால் சேர்த்து , மேலும் பல நன்மைகளை கொண்டு தரும்.

இதையே சற்று வேறு கோணத்தில் சிந்தித்தால், நல்லவர்களோடு சேரும்போது சாத்வீகம் தூண்டப் படும்.

இதைத்தான் நம் இலக்கியங்கள் படித்துப் படித்து சொன்னன. அடியார்களோடு சேர்ந்து இருப்பது மிக மிக உயர்ந்தது என்று.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று


என்பார் அவ்வையார்.

சாத்வீக குணம் மேலும் மேலும் ஓங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

குற்றமற்ற தூயவர்களோடு சேர வேண்டும். அவர்களோடு பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

தேடுங்கள் , அப்படிப்பட்ட நல்லவர்களை.

அந்தத் தேடலே, சாத்வீகத்தின் தொடக்கம்தான்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1414.html )

No comments:

Post a Comment