Thursday, March 17, 2016

கீதை - 14.13 - தமோ குணத்தின் வெளிப்பாடு

கீதை - 14.13 - தமோ குணத்தின் வெளிப்பாடு 


अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥१४- १३॥

அப்ரகாஸோ ப்ரவ்ருத்திஸ் ச ப்ரமாதோ  மோஹ ஏவ ச |
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந || 14- 13||


அப்ரகாஸ = அ + பிரகாஸ. = பிரகாசம் இல்லாமல்; வெளிச்சம் இல்லாமல்

அப்ரவ்ருத்தி = அ + ப்ரவர்த்தி = முயற்சி இன்றி.

ச = மேலும்

ப்ரமாதோ = உன்மந்தம் அடைந்து

மோஹ = மயக்கம்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

தமஸ் = தமோ குணத்தின்

யேதாநி = அதுவே

ஜாயந்தே = உருவாகிறது

விவ்ருத்தே = பெருகி

குருநந்தந = குருகுலத்தவனே


தமோ குணம் ஓங்கி இருக்கும்போது ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் என்பவை  பிறக்கும்.


வாழ்வில் ஏன் நாம் முன்னேன்றம் அடையாமல் இருக்கிறோம் என்றால் தமோ குணம்தான் காரணம்.

முதலாவது, ஒளியின்மை. ஒளியின்மை என்றால் தெளிவு இல்லாமல் இருப்பது. இதுவா , அதுவா என்று தெரியாமல் குழம்புவது. தவறு எது சரி எது என்று தெரியாமல்  இருப்பது.

ஒரு முடிவு எடுக்க முடியாமல் திகைத்து குழம்பிப் போய் இருப்பது.

அந்த வீட்டை வாங்கலாமா வேண்டாமா ? இந்த வேலையை விட்டு விட்டு இதை விட பெரிய வேலைக்கு போவோமா ? அயல் நாட்டில் வேலை , அங்கே போகலாமா ? இந்த course  படிக்கலாமா அல்லது அந்த course படிக்கலாமா ?வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கலாமா ? இப்படி எத்தனையோ முடிவுகளுக்கு நடுவில் முடிவு எடுக்க முடியாமல் பேசாமல் இருந்து விடுவது தமோ குணத்தின் இயல்பு.  அறிவு கூர்மையாக இல்லாமல் மந்த புத்தியாக இருப்பது.

இரண்டாவது, முயற்சி இன்மை. எதையும் தள்ளிப் போடுவது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் குணம். உண்பதும் உறங்குவதும் தான் வேலையாக இருக்கும்.

முதலில் முடிவு எடுப்பது இல்லை. ஒரு வேளை முடிவு எடுத்துவிட்டாலும், அதை செயல் படுத்துவது இல்லை.

எதிலும் ஆர்வம் இன்றி இருப்பது.

மூன்றாவது, இப்படி முடிவு எடுக்காமல், வேலை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன ஆகும் ? ஒரு நாள் அவசர அவசரமாக முடிவு எடுக்க வேண்டி வரும். அப்போது , அவசரத்தில் தவறுதலாக போய் முடியும்.

ஒரு மாணவன், இதைப் படிப்பதா, அதைப் படிப்பதா என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான் என்று வைத்துக் கொள்வோம். பின் ஏதோ ஒன்றை படிக்க முடிவு செய்கிறான். ஆனால், படிப்பது இல்லை. பரீட்சை வந்தே விடுகிறது.  அவன் எப்படி எழுதுவான் ? ஏதோ எழுதிவிட்டு வருவான்....தப்பும் தவறுமாக.

எனவே, முடிவு எடுக்காமல் இருப்பது, எடுத்த பின் செயல் படுத்தாமல் இருப்பது என்ற இந்த இரண்டும் தவறான விளைவுகளையே தோற்றுவிக்கும் .

இது தமோ குணத்தின் மூன்றாவது வெளிப்பது. தவறு செய்வது.

நான்காவது, மயக்கம். மயக்கம் என்றால் தவறாக புரிந்து கொள்வது. தன்னைப் பற்றி, தன்னை சுற்றி உள்ள உலகை பற்றி ஒரு தெளிவற்ற, நாளும் மாறும் ஒரு  எண்ணத்தைக் கொண்டு இருப்பது. நான் யார், என் திறமை என்ன , என் வலிமை என்ன என்று அறியாமல் மயங்கிக் கிடப்பது.

யாரும், ஒரே குணத்தின் பிடியில் எப்போதும் இருப்பது இல்லை. சில சமயம் சில குணங்கள் தலை தூக்கி நிற்கும்.

எனவே, எதையும் மாற்ற முடியும். யாரையும் மாற்ற முடியும்.

 நீங்களோ,உங்களைச் சார்ந்தவர்களோ (கணவன், மனைவி, பிள்ளைகள் ) தமோ குணத்தின் பிடியில் இருந்தால் அதில் இருந்து எப்படி வெளி வருவது , ஒவ்வொரு குணமும் எதில் கொண்டு சேர்க்கும் என்று பின் வரும் சுலோகங்களில் சிந்திக்க இருக்கிறோம்.


(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1413.html )

No comments:

Post a Comment