Wednesday, March 16, 2016

கீதை - 14.12 - பதற்றம், ரஜோ குணம்

கீதை - 14.12 - பதற்றம், ரஜோ குணம் 


लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥१४- १२॥

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப || 14- 12||


லோப: = பேராசை

ப்ர வ்ருத்தி = சிறந்தவற்றை பெருக்குவது.

ஆரம்ப: = தொடங்குவது

கர்மணாம் = வேலை செய்வது

அஸ²ம: = சம நிலை குலைவது (சமம், அசமம்)

ஸ்ப்ருஹா  = பொறாமை, ஏக்கம்

ரஜஸ் = ரஜோ குணத்தின்

யேதாநி = இவையே

ஜாயந்தே = பிறக்கின்றன (ஜன் = பிறப்பது)

விவ்ருத்தே = பெருகும்போது, அதிகமாகும் போது

பரதர்ஷப  =பாரதக் காளையே


பேராசை, முயற்சி, தொழிலை தொடங்குவது,  அமைதியின்மை, பொறாமை அல்லது ஏக்கம்  இவை ரஜோ குணம் வலிமை பெற்று இருக்கும் போது தோன்றுகிறது. 

எப்போதாவது தூக்கம் வராமல் கஷ்டப் பட்டு  இருகிறீர்களா ? பதற்றமாய் இருந்து இருக்கிறீர்களா ? மனதில் அமைதி இல்லமால் தவித்து இருகிறீர்களா ?

அப்படி என்றால், ரஜோ குணம் மிகுந்து நிற்கிறது என்று பொருள்.

ரஜோ குணம் எப்படி தொடங்கி எப்படி பெரிதாகுகிறது என்று இந்த சுலோகம் விளக்குகிறது.

முதல் படி, பேராசை. தனக்கு உரிமை இல்லாததன் மேல் தோன்றும் ஆசை. தன்  அளவுக்கு மீறிய ஆசை. காண்பதெல்லாம் வேண்டும் என்ற ஆசை. எதைப் பார்த்தாலும்  அதை தனக்கு உரியதாக கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம். புது கார், பெரிய வீடு, நல்ல டிவி, புது fashsion நகை, என்று எதைப் பார்த்தாலும் அது நமக்கு இருந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் ரஜோ குணத்தின் விதை.

 அடுத்த கட்டம், முயற்சி. அதை அடைய முயற்சிப்பது. அளவுக்கு அதிகமான ஆசை  இருந்தால், அளவுக்கு அதிகமான முயற்சியும் தேவைப்படும். அல்லது ஏதாவது  குறுக்கு வழியை தேட வேண்டி இருக்கும்.

அடுத்து, முனைப்பு. புதியதாய் ஏதாவது தொடங்குவது. இருக்கின்ற வேலையும்  தொழிலும் போதாது. இதுக்கும் மேலே வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து  புதியதாய் ஏதாவது தொடங்குவது.

இதனால் என்ன ஆகும் ?

அமைதி இன்மை, பதற்றம் உண்டாகும். மன அமைதி போகும்.

இவை ரஜோ குணத்தால் விளைவது.

ஆசைகள் மனதில் எழும் போது   கவனமாய் இருங்கள். ஒவ்வொரு ஆசையும், மேலும்  அதிகமான வேலைப் பளுவை கொண்டு வரும். புதிதாக எதையாவது செய்யச் சொல்லும்.   இருக்கின்ற வேலையை விடு, புது தொழில் தொடங்கு என்று  கழுத்தைப் பிடித்துத் தள்ளும்.

அப்படி நீங்கள் புதியதாய் ஒன்றை தொடங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள்   ரஜோ  குனாத்தால் உந்தப் பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கவனாமாக இருங்கள்.

அமைதி இன்மையும், பதற்றமும், ஏக்கமும் ரொம்பத் தொலைவில் இல்லை.

அழையா விருந்தாளியாக அவைஉங்கள் விலாசம் தேடி வந்து கொண்டே இருக்கின்றன.

சரி, ஆசைப் படாமலேயே இருக்க முடியுமா ? வாழ்வில் முன்னேற்றம் என்று ஒன்று வேண்டாமா ?  புதியதாய் ஏதாவது முயன்றால் தானே வாழ்கை முன்னேறும், சமுதாயம் முன்னேறும். முயற்சியே இல்லாமல் இருந்தால் எப்படி ?

முயற்சி தேவைதான், புதியதாய் ஏதாவது செய்யத்தான் வேண்டும் ஆனால் அது பேராசையினால் தூண்டப் பட்டு செய்வதாக இருக்கக் கூடாது. பொறாமையால் விளையக் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் உங்களின் எத்தனை முயற்சிகள் பொறாமையால், பேராசையால் விளைந்தவை என்று.

அடுத்தது தமோ குணம் பற்றி பார்ப்போம்.

(For other slogas http://bhagavatgita.blogspot.in/2016/03/1412.html )

No comments:

Post a Comment